மன்னாரில் இளம் தாயைக் கொலை செய்த சிங்கள வைத்தியர் வைத்திய அதிகாரிகள் சங்கம் ஊடாக தப்பிக்க முயற்சி!! வைத்திய நிபுணர் முரளி பரபரப்பு பதிவு!!
பகுதி 2 மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார் ?
ஏற்கெனவே முதல் பகுதியில் சில தினங்களுக்குள் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக இரவு அனுமதிக்கப்பட்ட 27 வயது தாய் காலை வரை எந்தவித சிகிச்சையும் இன்றி இருந்ததனால் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார் என்பதையும் அதற்கு காரணமானவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து இருந்தேன்.
இரண்டாம் பகுதியில் ஒரு நோயாளி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார் என்பதை விரிவாக ஆராய்வோம்.
அதிகாலை இரண்டு மணியளவில் குருதி பெருக்குடன் அனுமதிக்கப்பட்ட தாயார் காலை 7.30 மணி வரை வைத்தியரினால் பார்க்கப்படவில்லை என்பதே தற்போது சம்பந்தப்பட்ட பலராலும் கூறப்படும் குற்றச்சாட்டாகும்.
1. வெளிநோயாளர் பிரிவில் பார்வையிட்டு அனுமதிக்கும் வைத்தியர்
ஆரம்ப சிகிச்சை விடுதிகள் [preliminary care unit] உள்ள வைத்தியசாலைகளில், வெளிநோயாளர் பிரிவில் உள்ள வைத்தியர் ஆரம்ப சிகிச்சை விடுதிக்கு அனுமதிப்பார்கள். அங்கு ஆகக் கூடியது நான்கு மணிநேரம் நோயாளர்கள் பராமரிக்கப்படுவார்கள். அதன் பின்னர் வீடு செல்லும் நிலையில் உள்ளவர்கள் வீட்டுக்கும் ஏனையவர்கள் உரிய விடுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவர்.
நோயாளி ஒருவரை அனுமதிக்கும் போது அவரது நோய்நிலையைக் கருத்தில் கொண்டு அனுமதிக்கும் வைத்தியர் (admitting officer) எந்த விடுதியில் நோயாளியை அனுமதிக்கவேண்டும் என்ற முடிவினை எடுப்பார்.
ஏனைய வைத்தியசாலைகளில், வெளிநோயாளர் பிரிவு வைத்தியர் நோயாளியைப் பார்வையிட்டு நோய்நிலை அடிப்படையில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அல்லது சாதாரண Ward க்கு நோயாளியை அனுமதிப்பர்.
ஆரம்ப சிகிச்சை விடுதிகள் இருக்கும் வைத்தியசாலைகளில் கூட மகப்பேற்றியல் விடுதிக்குரிய நோயாளிகள் எவராவது விடுதியில் அனுமதிக்கப்பட வேண்டுமானால் -தாமதங்களைத் தவிர்த்து உடனடியாக சிகிச்சைகளை உரிய துறைசார் வைத்தியர்கள் ஆரம்பிக்க வசதியாக- நேரடியாகவே மகப்பேற்று விடுதிகளில் அனுமதிக்கும் நடைமுறை உள்ளது.
2. விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர்(duty officer)
ஒரு நோயாளி விடுதியில் அதுவும் மகப்பேற்று விடுதியில் இரவில் அனுமதிக்கப்பட்டால், அவரைப் பார்வையிட்டு உரிய ஆரம்ப சிகிச்சைகளை ஆரம்பிப்பது, தேவை ஏற்படின் மகப்பேற்றியல் நிபுணருக்கு அறிவிப்பது ஆகியன அவ்வேளையில் கடமையில் இருக்கும் வைத்தியரது பொறுப்பாகும்.
மன்னாரில் குறித்த தாயாரை வெளிநோயாளர் பிரிவில் பார்வையிட்ட வைத்தியர், அவரை அனுமதிக்கும்போது “சிகிச்சைக்கள (ward ) வைத்தியர் உடனடியாக பார்க்க வேண்டும் என்ற குறிப்புடன் அனுப்பி இருந்ததாகவும் தாதி சிகிச்சைக்கள வைத்தியருடன் தொடர்பு கொண்டபோதும் அவர் வரவில்லை என்றும்” குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
3. கடமையில் இருந்த தாதியர்
நோயாளியின் நிலைமை மோசமடையும் போது சிகிச்சை களத்துக்கு பொறுப்பான வைத்தியர் நோயாளியை வந்து பார்க்கவில்லை என்றால் தாதி பொறுப்பான வைத்திய நிபுணருக்கோ அல்லது வைத்தியசாலை நிர்வாகத்துக்கு அறிவித்திருக்க வேண்டும்.
‘மறுநாள் காலை 7.30 மணியளவில் குழந்தையைப் பார்ப்பதற்காக வந்த குழந்தைகளுக்கான வைத்தியரே குழந்தையின் தாயார் மிகவும் மோசமான நிலையில் அவதானித்து உரிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் காரணமாக இருந்தார்’ என்று வைத்தியசாலையின் உள்ளகத் தகவல் கூறுகையில், மரணமடைந்த இளம்தாயாரது தாயார் “மகளது நிலமை மோசமாக உள்ளதாக கூறியபோது “தாதியர்கள் அதட்டலான குரலில் ‘கையில் கருவி பொருத்தியுள்ளோம். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்’ என்று தாயாரை விரட்டியதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
‘காலை ஏழு மணியளவில் புதிய தாதியர்கள் கடமைக்கு வந்ததும் மீண்டும் தாதியர்களிடம் அணுகி தனது மகளின் பரிதாப நிலையை சொல்லி அழுதுததாகவும், நிலைமையினை உணர்ந்த புதிய தாதியர்கள் மீண்டும் மகளை பாத்றூம் போய்க் கழுவிவிட்டு வரும்படி கூறியதாகவும்,தாம் மிகவும் கஷ்டப்பட்டு கைத்தாங்கலாக மகளைக் கூட்டிக்கொண்டு சென்று கழுவிவிட்டு மீண்டும் கட்டிலடிக்கு வரும் வழியில் மகள் தலைசுற்றுவதாகக் கூறி திடீரெனக் கீழே விழுந்துவிட்டதாகவும், இந்நிலையில் தாயார் போட்ட கூக்குரலில் எல்லோரும் ஓடி வந்து கீழே கிடந்த மகளைத் தூக்கி கட்டிலில் வளர்த்தினார்கள், பின்பு ஏதோ ஏதோவெல்லாம் செய்தார்கள்’ என்றும் கூறியுள்ளார்.
தாயார் கூற்றின்படி “காலை 7.30 மணியளவில் மூன்று வைத்தியர்கள் அவசர அவசரமாக வந்து மயக்க நிலையில் இருந்த மகளை தள்ளு வண்டிக்கு மாற்றி வைத்து தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு ஒப்பரேசன் அறைக்குக் கொண்டு சென்றனர். “
இதிலிருந்து விடுகளில் நோயாளர்களைக் கழுவிக் சுத்தப்படுத்திக் கொள்வதற்குத் தாதியர்களோ சிற்றூழியர்களோ உதவவில்லை என்பதும் துலாம்பரமாகிறது. அவர்கள் உதவவேண்டியது கடமையாகும். உதவியிருந்ததால் அவர்களுக்குத் தாயாரின் நிலைமை தெரியவந்திருக்கும்.
4. பொறுப்பான வைத்திய நிபுணர்
வைத்திய நிபுணர் தமது விடுதியில் அதுவும் மகப்பேற்று விடுதியில் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உதாரணமாக கடமை வைத்தியர் குறித்த நேரத்திற்குள் வராது போனால் தாதியர்கள் நேரடியாக தமக்கு அறிவிக்கும் ஒரு பொறிமுறையைச் செயற்படுத்தலாம்.
5.மருத்துவ அத்தியட்சகர்
மருத்துவமனைகளில் அன்றாடம் இடம்பெறக்கூடிய தவறுகளை இனங்கண்டு அவற்றை மீளவும் நடக்காதிருக்க உறுதிப்படுத்த வேண்டும். அதற்காக பல பல சுற்றறிக்கைகள் வழிகாட்காட்டிகள் விதிக்கோவைகள் உள்ளன.
இந்த விடயத்தில் தற்போதுள்ள -புதிதாகக் கடந்த மாதமே பொறுப்பேற்ற- வைத்திய அத்தியட்சகரைக் காட்டிலும் முன்னர் இருந்தவர்கள் கட்டாயமாகப் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் ஆவர்.
மேலும் கடந்த கால மன்னார் மாவட்ட சுகாதார பணிப்பாளர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், தமது சொந்த மாவட்ட வைத்தியசாலையின் இழிநிலையை கவனிக்காது வெளிநாட்டு பயணங்களையும் தமது சொந்த வியாபாரங்களையும் கவனித்துக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே தார்மீகப் பொறுப்பாளிகள் ஆவர்.
வேறுவிதமாகச் சொல்வதானால் சிந்துஜாவின் அநியாய சாவுக்கான கர்ம வினையானது நோயாளியைப் பாராதிருந்த பெருங்குடி வைத்தியர். அசட்டையாக இருந்த தாதியை மட்டுமல்லாமல் மேலே குறிப்பிட்ட அனைவரையும் சேரும்.
‘மேற்படி விடுதியில் கடமையில் இருந்த மருத்துவர் தென்பகுதியை சேர்ந்தவர் என்றும், மாதத்தில் 2 வாரங்களே மன்னாருக்கு வருகை தந்து கொண்டு ஒவ்வொரு நாளும் வேலை செய்பவராகவும், அத்துடன் தினமும் 4-6 மணி நேரம் வேலை செய்வதாக போலி குறிப்புகளை எழுதி மாதம் 120 மணி மேலதிக வேலை செய்வதாக கணக்கு காட்டி பல மாதங்களாக முழு சம்பளத்தையும் அத்துடன் மேலதிக கொடுப்பனவாக மாதம் தோறும் பல இலட்சம் ரூபாய்களை சுருட்டியவர்’ என்றும் உள்ளகத் தகவல் சொல்கிறது.
இதை விடத் தென்பகுதியில் பதவி வெற்றிடங்கள் இருந்த போதும் ‘ஐஸ் அடிப்பதற்காக’ வடக்குக்கு வந்தவர் என்பதும், ‘இரவு 9 மணிக்கு பின்னர் இவர் வேறு உலகத்தில் இருப்பதாகவும் நோயாளிகளை கவனிப்பதில்லை’ என்பதும் வைத்தியசாலையினுள் கூறப்படும் குற்றச்சாட்டாகப் பொதுமக்கள் மத்தியில் பேச்சடிபடுகிறது.
இந்த வைத்தியரை ஆரம்பவிசாரணையின் பின் தண்டனைக்குரிய குற்றம் என்ற பெயரில் அவரது சொந்த இடத்துக்குப் பாதுகாப்பாக “தண்டனை இடமாற்றத்தின் மூலம்” அனுப்ப GMOA மாபியா திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மேலே குறிப்பிட்ட அனைத்து நடைமுறை மீறல்களுக்கும் வழிகாட்டிகளாக, பாதுகாவலர்களாக சுகாதாரத்துறைத் தொழிற்சங்கங்களே உள்ளன. நோயாளியைச் சுத்தப்படுத்த முன்வராது சம்பளம் பெறும் சிற்றூழியரில் தொடங்கி, கடமைக்கே வாராது சம்பளம் பெறும் வைத்தியர்கள் மற்றும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்காது கையறுநிலையில் உள்ள மருத்துவ நிர்வாகிகள் அனைவரும் தத்தமது கடமைகளைச் செய்ய வேண்டுமானால் முதலில் சுகாதாரத் தொழிற்சங்க மாபியாக்கள் இல்லாதொழிக்கப்படவேண்டும்.
எனவே, சிந்துஜாவின் சாவு மன்னாரில் இடம்பெற்ற கடைசி அநியாயச் சாவாக இருக்க வேண்டுமாயின்,
1. கவனக்குறைவாக இருந்த குற்றவாளி தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்ப பட வேண்டும். அதை செய்வதற்கு தன்னார்வ சட்ட ஆலோசகர் ஒருவர் இறந்தவரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டபோது ஒரு அரசியல் கட்சி உறுப்பினர்களால் அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு அந்த கட்சியை சேர்ந்த சட்டத்தரணிகளாலேயே இந்த வழக்கு முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. திறமையுள்ள சட்டத்தரணிகள் எவரையும் கொண்டிராத இந்தக் கட்சி உறுப்பினர்கள் அவர்களை நம்பிய வைத்தியர் அர்ச்சனாவை விளக்கமறியலில் இருந்து மீட்கும் முயற்சியில் படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில் இவர்களால் வழிநடத்தப்படும் குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய நட்டஈடும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையும் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே சுயாதீன நீதியாளர்கள் அக்குடும்பத்தை பாரமெடுத்து நீதியை பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும்.
2. தற்போதைய மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறை என்பது உண்மையில் அறுபது வைத்தியர்களில் அரைவாசி வைத்தியர்களே ஒரு குறித்த நாளில் கடமைக்கு சமூகமளிப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்பதை புரிந்து கொண்டு அனைத்து வைத்தியர்களும் தினசரி கடமைக்குச் சமூகமளிப்பதை உறுதி செய்யும் வகையில் தீவிர கண்காணிப்பும் கணக்காய்வுகளும் மேற்கொள்ளப்படவேண்டும். உரிய கணக்காய்வுகளை மேற்கொண்டால் மோசடி செய்யப்பட்ட பல மில்லியன் ரூபாய்களை மீளப்பெற முடியும் என்பதுடன் அனைவரையும் வேலைக்கு வரவைக்கவும் முடியும்.
3. இனியாவது பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களும் வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களும் தமது பிரதேச வைத்தியசாலையில் என்ன நடக்கிறது என்பதை கண் திறந்து பார்த்து உரிய முறையில் அபிவிருத்தி செய்ய முன்வரவேண்டும். கடந்த காலத்தில் சுகாதார திட்டமிடல் பிரிவின் சிரேஷ்ட நிபுணராக கடமையாற்றியவன் என்ற வகையில் மாவட்ட பொது வைத்தியசாலையாக மன்னார் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு அவர்களுக்கு ஆலோசனை வழங்க நான் எப்போதும் தயாராக உள்ளேன்.
3. சூட்டோடு சூடாக மன்னார் மக்கள் ஓன்று திரண்டு கவன ஈர்ப்பு போராட்டங்கள் ஊடாக உரிய அழுத்தத்தைச் சுகாதாரத் தொழிற்சங்க மாபியாக்களுக்கு எதிராகப் பிரயோகிக்க தவறினால் இன்னும் பல சிந்துஜாக்களை மன்னார் இழக்க நேரிடலாம்.
Dr முரளி வல்லிபுரநாதன்
சமுதாய மருத்துவ நிபுணர்
6.8.2024
0 comments:
Post a Comment