தனது கணவனுடன் தலைமறைவான பல்கலைக்கழக மாணவியின் தாயார் மற்றும் அவரது மகன் மீது சுவிஸ் குடும்பப் பெண் மற்றும் அவரது சகோதரிகள் தாக்குதல் நடாத்தியுள்ளார்கள். வலிகாமம் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
கடந்த மாதம் சுவிஸ்லாந்திலிருந்து தனது மனைவியின் சகோதரியின் வீட்டு குடும்ப நிகழ்வு ஒன்றுக்கு 2 பிள்ளைகள், மனைவியுடன் 34 வயதான குடும்பஸ்தர் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார். அவர் கட்டுநாயக்காவிலிருந்து வரும் போதே கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து வந்துள்ளார்.
குடும்பஸ்தரின் மனைவியின் சகோதரி வீட்டுக்கு அருகில் மனைவியின் துாரத்து உறவினரான கணவனையிழந்த பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் வசித்து வந்துள்ளார்கள். அப் பெண்ணின் மூத்த மகள் யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவியாவார்.
மனைவியின் சகோதரியின் வீட்டு நிகழ்வுக்கு முன்னரான ஆயத்தப்பணிகளில் குறித்த பல்கலைக்கழக மாணவியும் தாயாரும் உதவி புரிந்து வந்துள்ளார்கள். இச் சந்தர்ப்பத்திலேயே குடும்பஸ்தருடன் அறிமுகம் ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. நிகழ்வு முடிந்து இரு நாட்களின் பின் குடும்பஸ்தர் குறித்த மாணவியுடன் தான் வாடகைக்குப் பெற்ற காருடன் தலைமறைவாகியுள்ளார்.
கணவனை வீட்டில் காணவில்லை என தேடத் தொடங்கினார் மனைவி. தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் கணவன் பதில் அளிக்கவில்லை. இதனால் மனைவி கணவனின் சொந்த இடமான காரைநகர் பகுதி உறவுகளிடம் விசாரித்துள்ளார். அங்கும் கணவன் இல்லை என்று அறிந்து பொலிசாரிம் முறையிட ஆயத்தமானார்.
இதே வேளை தங்கையின் வீட்டுக்கு அருகில் இருந்த உறவினரான பெண்ணின் பல்கலைக்கழக மாணவியான மகளின் நடமாட்டமும் இல்லாததால் மனைவியும் அவரது உறவுகளும் சந்தேகமடைந்துள்ளனர். தாயிடம் விசாரித்த போது அவள் சுற்றுலா சென்றுவிட்டாள் என கூறியதால் விசாரணையை தொடராது கணவனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கணவனின் தொலைபேசிக்கு தான் பொலிசில் முறையிடப் போவதாக மனைவி குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதனையடுத்து தன்னைத் தேட வேண்டாம் எனவும் தான் புதிய வாழ்க்கைக்குள் புகுந்துள்ளதாகவும் கணவன் கூறியதால் மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்னர் மேற்கொண்ட விசாரணையின் போதே பல்கலைக்கழக மாணவியுடன் கணவன் தலைமறைவான விடயம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்தே மாணவியின் தாயார் மற்றும் 17 வயதான மகன் ஆகியோர் மீது சுவிஸ் குடும்பஸ்தரின் மனைவியும் உறவுகளும் தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
0 comments:
Post a Comment