சர்க்கஸ்... அந்தரத்தில் பறப்பார்கள், நெருப்பு வளையத்தில் நுழைவார்கள், முதலையின் வாயில் தலையை வைப்பார்கள், சிங்கத்தைக் கையெடுத்து கும்பிட வைப்பார்கள், யானையை மண்டியிட வைப்பார்கள். இப்படி விலங்குகளை வைத்துப் பல விசித்திரங்களை சர்க்கஸ்கள் நிகழ்த்திக்கொண்டே இருக்கும்.
பார்க்கும் பார்வையாளர்கள் கை தட்டி ஆரவாரம் செய்வார்கள். இவை மட்டும் சர்க்கஸ் அல்ல,
இவற்றுக்குப் பின்னால் ஒரு சர்க்கஸ் இருக்கிறது. சர்க்கஸ் நிகழ்த்த அரங்குக்குப் பின்னால் சில சர்க்கஸ்களை நிகழ்த்த வேண்டும். விலங்குகள் சர்க்கஸ் அரங்கத்துக்கு வந்த கதைகள் எல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியாதவை. அதில் டைக் என்கிற யானைக்கு நடந்தது நினைத்துக்கூட பார்க்க முடியாதது. கரடு முரடான மனித இனத்திடமிருந்து தப்பிக்க போராடிய ஒரு யானை குறித்த கதைதான் #டைக்
1974-ம் ஆண்டு மொஸாம்பி காடுகளில் புஸ் வகை பெண் காட்டு யானை ஒன்று பிடிபடுகிறது. மொஸாம்பியில் பிடிக்கப்பட்ட அது இன்டர்நேஷனல் சர்க்கஸ் என்கிற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. யானைக்கு 'டைக்' எனப் பெயரிடுகிறார்கள். காட்டு யானை என்பதால் அதை சர்க்கஸ் யானையாக மாற்றுவதற்குப் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. நான்குக்கு நான்கு என்கிற அளவில் இருக்கிற இருட்டு அறையில் டைக்குக்கு பயிற்சியளிக்கப்பட்டது
துயரம், கண்ணீர், வேதனை எல்லாமே அந்த அறைக்குள் மட்டும்தான். பயிற்சியாளர்கள் சொல்வதை டைக் கேட்டாக வேண்டும் என்பதால் அதன் உணர்திறன் பகுதிகளில் குறிவைத்து தாக்கினார்கள். யானையின் காதுகளுக்குப் பின்னால், கால் விரல்களில், முழங்கால்களின் பின்புறத்தில் என யானையைத் தாக்கி அதற்குப் பயிற்சியளித்தார்கள்.
கொக்கி போல இருக்கும் bullhook என்கிற கருவியால் யானைக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது. மற்ற பொருள்களைப் போல இல்லை கொக்கி. சரியாகக் கையாண்டாலும் தவறாகக் கையாண்டாலும் குத்திக் கிழிக்கும். அதன் வேலையே குத்திக் கிழிப்பதுதான்.
காட்டு மிராண்டித்தனமான செயல்களால் டைக் பயப்பட ஆரம்பித்தது. ஆனாலும் அவர்கள் யானையை விடுவதாக இல்லை. கீழ்ப்படியும் வரை தாக்கினார்கள். வலி என்பது இயற்கையாகவே உடலில் இருக்கிற ஓர் உறுப்பு போலத்தான் என்று யானை நம்பும் அளவுக்குப் பயிற்சியோடு சேர்த்து சித்ரவதையும் கொடுக்கப்பட்டது. விழிக்கும்
போதெல்லாம் வலிக்கும் அளவுக்கு யானையை வலிக்குப் பழக்கப்படுத்தியிருந்தார்கள். யானை முரண்டு பிடிக்கும்போதெல்லாம் கொக்கி பயன்படுத்தப்பட்டது. பலகட்ட பயிற்சிகளுக்குப் பிறகு வேதனையோடு அரங்கத்துக்கு வரும் யானையைப் பார்த்து பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஏற்கெனவே மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்டிருந்த #டைக் பார்வையாளர்களின் சத்தத்தைக் கேட்டதும் இன்னமும் மிரள ஆரம்பித்தது. வேறு வழியில்லை சர்க்கஸில்தான் இருந்தாக வேண்டும் என்கிற நிலையில் சர்க்கஸில் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்ய ஆரம்பித்தது. மண்டியிடுவது, முன்கால்களைத் தூக்குவது, பின் கால்களைத் தூக்கி மொத்த எடையையும் முன் கால்களில் தாங்குவதுபோல செய்வது எனப் பல சித்ரவதைகளை சர்க்கஸ் என்கிற பெயரில் செய்ய ஆரம்பித்தது.
வலியையும் வேதனையையும் எவ்வளவு நாள்களுக்குப் பொறுக்க முடியும்? தேக்கி வைத்திருக்கிற துக்கமும் வலியும் ஒன்று சேர்ந்து கோபமாக ஒரு நாள் அடிமைப்படுத்துபவர்களை நோக்கித் திரும்பும் என்பது இயற்கையின் விதி. அந்த விதி #டைக்குக்கும்
பொருந்தியது .
1993-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி Pennsylvania நாட்டிலுள்ள Altoona என்கிற இடத்தில் நடத்தப்பட்ட சர்க்கஸிலிருந்து டைக் யானை தப்பிக்க முயன்றது. சர்க்கஸ் நடந்து கொண்டிருக்கும்போது நுழைவு வாயில் வழியாகத் தப்பிக்க முயற்சி செய்தது. புலி பயிற்சியாளர் ஒருவரைத் தாக்கியதாக ஆவணங்களில் பதிவு
செய்யப்பட்டுள்ளது. ஆனால், முயற்சி தோல்வியில் முடிந்தது. சர்க்கஸை விட்டு வெளியே செல்ல முடியாத கோபத்தில் யானை அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கியது. சேதப்படுத்திய மொத்த பொருள்களின் மதிப்பு 14,000 அமெரிக்க டாலர்கள்.
தப்பிக்க முயற்சி செய்தால் எந்த விதமான தண்டனைகள் கிடைக்கும் என்பது டைக் யானைக்கு அப்போது வரை தெரியவில்லை. ஏனெனில் அடிமைகள் தப்பிக்க நினைத்தால் தண்டனைகள் கொடூரமாக இருக்கும். யானையை இருட்டு அறையில் போட்டு கதறக் கதற அடித்து உதைத்தார்கள். கொக்கிகள் மீண்டும் உடலில் துளையிட ஆரம்பித்தன. கத்தியோ, கதறியோ இனி பலனில்லை. சித்ரவதைகள் கடுமையாக்கப்பட்டன. முன்பிருந்ததைவிட இப்போது கண்காணிப்பு அதிகரித்தது.
எப்படியாவது சர்க்கஸில் இருந்து தப்பித்தாக வேண்டும் என்கிற எண்ணம் யானையை மேலும் வலுவாக்கியது. எல்லா வேதனைகளை உள்வாங்கிக் கொண்டு சர்க்கஸில் போலியான சாகசங்களைச் செய்து
கொண்டிருந்தது.
அதே ஆண்டு ஜூலை மாதம் 23-ம் தேதி மீண்டும் சர்க்கஸில் இருந்து தப்பிக்க முடிவு செய்தது. இந்த முறை சர்க்கஸ் அமெரிக்காவின் நார்த் டகோட்டாவில் (North Dakota) உள்ள Minot என்னும் நகரத்தில் நடந்தது.
பல நூறு பார்வையாளர்கள் இருந்த அரங்கத்தில் சாகசம் நிகழ்த்திக் கொண்டிருந்தபோதே அரங்கத்தில் இருந்து தப்பித்தது. சுமார் 25 நிமிடங்கள் யாருக்கும் கட்டுப்படாமல் அரங்கத்துக்குள் சுற்றி வந்தது. ஊழியர்கள் பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு யானையைக் கட்டுக்குள் கொண்டுவந்து இருட்டு அறையில் வைத்து அடைத்து வைத்தார்கள். இந்த முறை காயங்களும் வலியும் அதிகமானது. இதுவரை இல்லாத அளவுக்குத் துன்புறுத்தப்பட்டது. இனி தப்பி பிழைப்பது சாத்தியமில்லை என்பது உறுதியானதும் சர்க்கஸில் சாகசங்கள் நிகழ்த்திக்கொண்டு அமைதியாகவே இருந்தது.
#டைக் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் தப்பிக்கலாம் என்பதால் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது
அடுத்த ஒரு வருடத்துக்கு
#டைக்_யானை
எந்த அசம்பாவித செயல்களிலும் ஈடுபடாமல் இருந்தது.
அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி நடைபெற்ற சர்க்கஸ், சர்க்கஸ் உலகில் மறக்க முடியாத நாளாக அமைந்தது. இந்த நாளைக் குறித்துப் பார்ப்பததற்கு முன்பு Allen Campbell என்பவர் குறித்து பார்த்துவிடவேண்டும்.
டைக் யானைக்கும் இவருக்கும் இடையேயான கதை இவரோடு சேர்ந்தே முடியும். ஆலன் கேம்பல் (Allen Campbell) 1956-ம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர். அங்கிருக்கும் ஓர் உயிரியல் பூங்காவில் காப்பாளராகவும், யானைகளுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தவர். அதன்பிறகு 1970-ம் ஆண்டு லூசியானாவில் இருக்கும் Baton Rouge Zoo என்கிற உயிரியல் பூங்காவில் யானைகளுக்குப் பயிற்சியாளராக இருந்தார். வாஷிங்டன் டிசியில் இருக்கும் உயிரியல் பூங்காவில் பல ஆண்டுகள் யானைகள் ஆலோசகராக இருந்தவர். யானைகளுக்குப் பயிற்சியளிப்பதில் திறமை வாய்ந்தவராக இருந்தவர்ஆலன்.
இவர்தான்
பயிற்சியாளராக
சர்க்கஸில் பணிபுரிந்தார். அன்றைய தினம் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் #டைக் யானை தனக்குப் பயிற்சியாளராக இருந்த ஆலன் கட்டுப்பாட்டில் இருந்து நழுவியது. ஆலன் #டைக் யானையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தார். ஆனால், #டைக் கட்டுப்படாமல் ஆலன் மீது தாக்குதலைத் தொடுத்தது. அவரைத் தூக்கி போட்டுப் பந்தாடியது. பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.
ஆலனை மீட்க வந்த பயிற்சியாளரையும் டைக் யானை தாக்கியது. தாக்குதலில் ஆலன் அதே இடத்தில் இறந்து போகிறார்
பிளிறிக் கொண்டே சர்க்கஸ் கூடாரத்தை விட்டு வெளியே வந்து டைக் நுழைவு வாயிலை அடைக்க முயன்ற ஒருவரையும் தாக்கியது. சர்க்கஸ் நுழைவு வாயிலைக் கடந்து நகர வீதிகளில் ஓட ஆரம்பித்தது. வாகனங்கள், கான்க்ரீட் காடுகள், சத்தங்கள் என இதற்கு முன்பு அறிமுகமில்லாத பல பொருள்கள் யானையை நிலைகுலைய வைத்தது. தப்பிக்க மட்டுமே போராடிய யானை தப்பித்ததும் எங்கே போவது எனத் தெரியாமல் குழம்பிப் போனது.
ஏற்கெனவே சர்க்கஸில் பல பேரைக் காயப்படுத்தியிருப்பதால் நகரம் முழுக்க பரபரப்பாகியது. யானை தப்பித்த தகவல் எல்லா இடங்களிலும் பரவத் தொடங்கியது. நகர போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். யானையின் பழைய வரலாறு தூசிதட்டப்பட்டது. ஏற்கெனவே இரண்டு முறை தப்பிக்க முயன்றது போலீஸுக்குத் தெரியவருகிறது.
யானை கட்டுக்கடங்காமல் நகர வீதிகளில் ஓட ஆரம்பித்தது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் நகரம் என்பதால் மக்களின் நடமாட்டம் எப்போதும் போலவே இருந்தது. மக்கள் பாதுகாப்புக்காக ஓட ஆரம்பிக்கிறார்கள். யானையைக் கட்டுப்படுத்துவது சிரமம் என்பதை உணர்ந்த நகர போலீஸார்
#டைக் யானையை நோக்கிச் சுட ஆரம்பிக்கின்றனர். பல முனைகளில் இருந்தும் டைக் யானையை நோக்கி குண்டுகள் பாய ஆரம்பிக்கின்றன. யானை தனித்து தெரியும் ஒரு நடமாடும் நிலப்பரப்பு. எதிரிகளிடமிருந்து தப்பித்து அவ்வளவு எளிதில் எங்கும் ஒளிந்து விட முடியாத ஒரு பிரமாண்டம். டைக் திமிறிக்கொண்டே ஓட முயன்றது.
#டைக் யானையை நகர விடாமல் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது.
மொத்தம்
86 குண்டுகள்
#டைக் யானையைத் துளைத்தன.
3600 கிலோ எடை கொண்ட ,#டைக் அதே இடத்தில் கண்ணீர் சிந்தியவாறே சரிந்து விழுகிறது.
யானையின் கடைசி நிமிடத்தைப் பார்த்த மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். இரண்டொரு விநாடிகளில் #டைக் இறந்த தகவலை போலீஸார் உறுதிப்படுத்துகின்றனர்.
சர்க்கஸ் விலங்குகளின் துயரத்துக்கு
#டைக் ஒரு #சிவப்பு_அடையாளம்
நன்றி: விகடன்.
0 comments:
Post a Comment