தென்கிழக்கு அராபிய கடல் பிராந்தியங்களில் உருவாகியுள்ள தாழமுக்கமானது, இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக இலங்கையில் நிலவி வந்த மழை கொண்ட காலநிலை இன்னும் சில தினங்களுக்கு தொடருமென எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்தார்.
இலங்கையின் அநேகமான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதோடு தெற்கு, மத்திய, சப்ரகமுவ, மேற்கு ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமானளவு மழைவீழ்ச்சி பதிவு செய்யப்படுமென்றும் கிழக்கு, வடமேற்கு, வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமானளவில் மழைவீழ்ச்சி பதிவு செய்யப்படுமெனவும்
எதிர்பார்க்கப்படுகின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, தென் மாகாணத்தின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலமான காற்று வீசக்கூடுமென்பதுடன், இடியுடன் கூடிய மழை பெய்வதனால் பொதுமக்கள் இடி, மின்னலின் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்து கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
கடற்பிராந்தியங்களைப் பொருத்த வரையில், தென்கிழக்கு அராபிய கடற்பிராந்தியங்களில் உருவாகியள்ள தாழமுக்கமானது, தற்பொழுது இலங்கையிலிருந்து 1500 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் காணப்படுகின்றது. இது அடுத்துவரும் மணித்தியாலத்துக்கு சூறாவளியாக உருவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு சூறாவளியாக உருவாகும் பட்சத்தில், ஹோமான் நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட, “லுவான்” என்ற பெயர் இதற்கு சூட்டப்படும்.
இது தற்போது, வடமேற்கு திசையில் இலங்கையயை விட்டு அப்பால் நகர்ந்துகொண்டு இருக்கின்றது.
இதன்காரணத்தினால் மன்னார் முதல் புத்தளம், கொழும்பு, காலி ஊடான அம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை வீசக்கூடுமென்பதால், இந்த கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும், இடியுடன் கூடிய மழையும் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மீனவர் சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் தமது கடல் நடவடிக்கையின் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment