அரசியல் கைதிகளின் பெயரைச் சொல்லி பலர் அரசியல் வாணிபம் செய்கிறார்கள். அதில் தர்மர் என்பவர் ஒருவர். மற்றவர் சக்திவேல் பாதிரியார்.
அரசியல் கைதிகளின் விடுதலை ஒரு சிக்கலான விடயம். விசாரணை முடிந்து தண்டனை அனுபவிக்கும் அரசியல் கைதிகள் இருக்கிறார்கள். இந்த அரசு ஆட்சிக்கு வந்த போது 217 தமிழ்க் கைதிகள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இந்த எண்ணிக்கை இப்போது 60 ஆகக் குறைந்துள்ளது. உண்ணா நோன்பு அனுட்டிக்கும் எட்டுக் கைதிகள் வழக்கு விசாரணையின்றி நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். விசாரணை நடந்து தண்டனை பெற்றவர்கள் அல்லர். எனவே அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் சிக்கல் இருக்க முடியாது.
அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி சிறிது கால புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்குமாறு சம்பந்தன் ஐயா, சுமந்திரன் அரசாங்கத்துக்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்து வருகிறார்கள். கடைசியாக நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தைகள அடுத்து கைதிகளின் விடுதலை தொடர்பாக இன்னும் இரண்டொரு நாளில் முடிவு சொல்வதாக சட்டமா அதிபர் வாக்களித்துள்ளார்.
நிற்க. இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கேட்டு சம்பந்தர் ஐயாவும் விக்னேஸ்வரனும் உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்த திலீபன் போல் இவர்களும் உண்ணா நோன்பு இருந்து சாக வேண்டும் என்று தருமர் சொல்வது அவரது வக்கிர புத்தியைக் காட்டுகிறது.
திலீபன் சாகும்வரை உண்ணா நோன்பிருந்த கால கட்டம் வேறு, இன்றைய கால கட்டம் வேறு. அந்தக் களம் வேறு இன்றைய களம் வேறு.
அன்றைய யதார்த்தம் வேறு இன்றைய யதார்த்தம் வேறு.
சம்பந்தர் ஐயாவும் விக்னேஸ்வரனும் சாகும்வரை உண்ணா நோன்பு இருக்க வேண்டும் என்று சொல்பவர் முதலில் உண்ணாவிரதம் இருந்து இறக்கத் தயாரா? தயார் என்றால் முதலில் அதனைச் செய்து காட்டட்டும். அதன் பின் ஏனையவற்றைப் பார்ப்போம்.
இந்தக் கைதிகள் விடயமாக வாய் வீரம் பேசுகிற இன்னொருவர் சக்திவேல். இவர் எந்த திருச்சபையைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இவரும் சம்பந்தன் ஐயா அவர்களும் சுமந்திரன் அவர்களும் கைதிகள் விடுதலையில் போதிய அக்கறை காட்டவில்லை என்று ஊடகங்களுக்குப் பச்சைப் பொய் சொல்கிறார்.
ததேகூ நம்ப முடியாது, சம்பந்தரை நம்பமுடியாது, சுமந்திரனை நம்ப முடியாது பல்கலைக்கழக மாணவர்கள், அனைத்துலக நாடுகள்தான் தலையிட்டு இந்தச் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்று சக்திவேலும் மற்றவர்களும் சொன்னார்கள்.
அப்படியென்றால் சம்பந்தன், சுமந்திரன் இருவரையும் தலையிடுமாறு ஏன் கோரிக்கை வைக்கப்படுகிறது?
ஒரு போரில் தோற்ற தரப்பு பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டும். இது உலக நியதி. நில மீட்பு, மீள் குடியமர்வு, வீட்டு வசதி, கல்வி வசதி, தொழில் வாய்ப்பு எனப் பல சிக்கல்களை ஒரே சமயத்தில் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
தற்சமயம் கிடைத்துள்ள சில முன்னேற்றங்கள் ஆட்சி மாற்றம் காரணமாகவே ஒப்பேறியுள்ளது.
முந்திய ஆட்சி இப்போதும் இருந்திருந்தால் இப்படியான கோரிக்கைகளை முன் வைத்துப் போராடியிருக்க முடியாது. அந்தளவுக்கு இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் கெடுபிடிகள், அழுத்தம் இருந்தது.
2011 இல் யாழ்ப்பாணத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகன் ஆகியோர் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுக் காணாமற் போனார்கள். அவர்களைப் பற்றி அரசியல் கைதிகளுக்குக் குரல் கொடுப்போர் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை.
மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு நாவடக்கம் தேவை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பற்றிப் பேசும் போது அவர்களது பதவிக்கு மரியாதை கொடுத்துப் பேச வேண்டும்.
அவர்களது செயற்பாடுகள் பிடிக்காவிட்டால் அல்லது போதாவிட்டால் அடுத்த தேர்தலில் அவர்களுக்கு எதிராகப் பரப்புரை செய்யலாம்.
ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும். ஆட்சி மாறினாலும் அதிகாரிகள் மாறவில்லை. முன்னைய ஆட்சியாளரின் விசுவாசிகள் தொடர்ந்தும் உயர் பதவிகளில் இருக்கிறார்கள்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30-1, 34-1 தீர்மானங்களை அரசு நிறைவேற்றியே ஆக வேண்டும். அவற்றை அலட்சியம் செய்ய முடியாது. பூகோள அரசியல் அதற்கு இடம் கொடுக்காது.
தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கையின் சனாதிபதி சிறிசேனா பல கோரிக்கைகளை முன் வைக்க இருந்தார்.
(1) போர்க்குற்றங்களை படைகள் இழைக்கவில்லை. படைகள் எந்தக் குற்றமும் செய்யவில்லை. எனவே விடுதலைப் புலிகளை அழித்தொழித்த படையினரை நீதிமன்றத்தில் நிறுத்தவோ, தண்டிக்கப்படுவதையோ அனுமதிக்க மாட்டேன்.
(2) ஜெகத் ஜயசூரியவையோ வேறெந்த முக்கிய இராணுவ அதிகாரிகளையோ யுத்த கால நாயகர்களையோ தண்டிப்பதற்கு உலகத்தில் எவரையும் நான் அனுமதிக்கப்போவதில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
(3) பயங்கரவாதத்தை முறியடித்த படையினருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.
இலங்கையின் போர்க்காலத் தளபதிகளில் ஒருவரும் தற்போதைய பிரேசில், ஆர்ஜன்டீனா, சிலி, கொலம்பியா, சூரினாம் ஆகிய நாடுகளனைத்துக்கும் இலங்கையின் தூதுவராகவுமுள்ள ஜெயசூரியாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட போர்க்குற்றம் பற்றிய சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தே இலங்கை அதிபரின் இந்த நிலைப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைப்பாட்டை விளக்க சனாதிபதி சிறிசேனா ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தை செப்ரெம்பர் 13 ஆம் நாள் (வியாழக்கிழமை) கூட்டினார்.
போர்க்காலத்தில் படையினரால் இழைக்கப்பட்ட கிரிமினல் குற்றங்களுக்காக சில படை உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அல்லது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2008 – 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கொழும்பிலும் அதன் புறத்திலும் 11 தமிழ் இளைஞர்கள் கடற்படை புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கப்பம் கேட்டுக் கடத்தப்பட்டனர். பின்னர் அவர்களை கொன்று அவர்களது உடல்களைத் திருகோணமலைக் கடலில் வீசினர்.
சென்ற ஆட்சியில் இது தொடர்பான புலானாய்வுத்துறை விசாரணைகள் சரிவர முன்னெடுக்கப்படவில்லை. இந்த ஆட்சியில் குற்றவியல் புலனாய்வுத்துறை மேற்கொண்ட விசாரணையின் போது கடற்படையைச் சேர்ந்த மூன்று புலனாய்வாளர்களும் கருணாவின் அடியாட்கள் இரண்டு பேரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் -
‘ஜெகத் ஜயசூரியாவையோ வேறெந்த முக்கிய இராணுவ அதிகாரிகளையோ யுத்த கால நாயகர்களையோ தண்டிப்பதற்கு உலகத்தில் எவரையும் நான் அனுமதிக்கப்போவதில்லை என்பததைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்’ என்பதுதான் சனாதிபதி சிறிசேனாவின் நிலைப்பாடு.
இன்றைய இராணுவ உயர் தளபதியும் அன்றைய கடற்படைத் தளபதியுமான இரவீந்திரா விஜயகுணவர்த்தனா நேவி சம்பத் என்பவருக்கு உரூபா 500,000 பணம் கொடுத்து கடற்படைக் கப்பல் மூலம் மலேசியாவுக்குத் தப்பியோட சதிசெய்தார் என்ற உண்மை விசாரணையின் போது வெளிவந்தது. எனவே அவரை செப்ரெம்பர் விசாரணைக்கு வருமாறு புலனாய்வுத் துறை அழைப்பு அனுப்பியது. ஆனால், அதே நாள் விஜயகுணவர்த்தனா மெக்சிக்கோ நாட்டின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளப் பறந்து சென்றுவிட்டார். சனாதிபதி சிறிசேனா அவர்களுக்குத் தெரியாது விஜயகுணவர்த்தனா நாட்டைவிட்டுப் போயிருக்க மாட்டார் என நா.உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சாட்டினார். விஜயகுணவர்த்தனாவை கைது செய்யக் கூடாது என சனாதிபதி சிறிசேனா தடை போட்டதாகச் சொல்லப்பட்டது.
இந்தப் 11 தமிழ் இளைஞர்களைக் கடத்திக் கொலை செய்த அதே குழுதான் முன்னாள் நா.உறுப்பினர் இராவிராஜ் மற்றும் அவரது மெய்பாதுகாப்பு ஊழியர் இலட்சுமன் லொக்குவெல்லாவையும் கொலை செய்தது என்று குற்றவியல் புலனாய்வுத்துறை சொல்கிறது.
இப்படியானவர்களைப் பாதுகாக்கவே சனாதிபதி சிறிசேனா வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதி விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் முயற்சிக்கு தடை போட்டு வருகிறார்.
இவற்றைப் பற்றியெல்லாம் ஐக்கிய நாடுகள் சபையில் பேசப் போகிறேன் என்று மார்தட்டிய சனாதிபதி சிறிசேனா எதையும் பேசாமல் வெறுங்கையோடு நாடு திரும்பவுள்ளார். கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராசதந்திரிகள் கொடுத்த அழுத்தமே சனாதிபதி சிறிசேனாவின் மனமாற்றத்துக்குக் காரணமாகும். அதே சமயம் புதிய யாப்பு வரைவு இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதையிட்டு சனாதிபதி தனது பேச்சில் குறிப்பிடவே இல்லை.
இன்றைய உலக ஒழுங்கில் ஒரு நாடு ஒரு தீவல்ல. அது தான் நினைத்தபடி எதையும் செய்ய முடியாது. சர்வதேச சட்டங்கள், மரபுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய கடமை, பொறுப்பு இலங்கை போன்ற நாடுகளுக்கு இருக்கிறது.
போதைப் பொருள் கடத்தி மரண தண்டனை பெற்ற கைதிகளை தூக்கில் போடப் போவதாக சனாதிபதி சிறிசேன சொன்னார். பின்னர் உலகளவில் எழுந்த எதிர்ப்புக் காரணமாக அந்த நிலைப்பாட்டில் இருந்து அவர் பின்வாங்கி விட்டார்.
ஐநா ம உ பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 30-1, 34-1 இரண்டையும் இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும். தவறினால் எதிர்விளைவுகளை இலங்கை சந்திக்க வேண்டிவரும்.
இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் “அரசியல் தீர்வு ஒன்றுக்கு வேண்டிய புதிய யாப்புக்குரிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும். இன இணக்கப்பாட்டுக்கு அது அவசியம்” என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் “அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்ற போதும், சனாதிபதி அதற்கான சரியான அரசியல் தலைமைத்துவத்தை கொடுத்து நகர்த்தாமல் இருப்பதே இழுத்தடிப்பிற்கு காரணம்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நா. உறுப்பினரும் அதன் பேச்சாளருமான சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். எப்போதும் எதிர்மறையாக இல்லாமல் நேர்மறையாகப் பேசும் சுமந்திரன் அவர்களுக்கே சனாதிபதி சிறிசேனா மீது விரக்தியும் அவநம்பிக்கையும் ஏற்பட்டுள்ளதை அவரது பேச்சுக் காட்டுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. பொறுமை காக்க வேண்டியுள்ளது.
எதிர்காலம் பற்றி கடைசி ஒரு விழுக்காடு நம்பிக்கை இருக்குமட்டும் இந்த அரசோடு சாணக்கியத்தோடு நாங்கள் நடந்து கொள்ள வேண்டும். நெருக்கடிகளை பக்குவமாகக் கையாள வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என நடந்து கொள்ள முடியாது. குறிப்பாக சனாதிபதி சிறிசேனா அவர்களோடு தந்திரமாக நடந்து கொள்ள வேண்டியுள்ளது. இதனைத் தமிழர் தரப்பு நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
நக்கீரன்
நன்றி: புதியசுதந்திரன் இணையம்
0 comments:
Post a Comment