வடக்கு, கிழக்கு மக்களின் சட்டபூர்வ உரித்துடைய காணிகள் அம்மக்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து இவ்வருட டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அக்காணிகளை விடுவிப்பதை நிறைவுசெய்யுமாறும் ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.
வடக்கு,
கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி மூன்றாவது தடவையாக நேற்று (03) பிற்பகல் ஒன்று கூடியது. பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த கூட்டத்தின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்த பணிப்புரையை விடுத்தார்.
முறையான கால சட்டகத்திற்குள் குறித்த நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்குமாறும் இதன் முன்னேற்ற நிலைமைகளை அடுத்த மாதம் இடம்பெறும் வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தின்போது முன்வைக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
மேலும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் படையினர் வசமுள்ள பாடசாலைகளுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் கட்டிடங்களை விடுவிப்பது தொடர்பாகவும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சில பிரதேசங்களில் மக்கள் கடுமையான நீர் பற்றாக்குறைக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதுடன், இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்தார்.
எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள்,
முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment