ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலத்தில் 29,309 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஒருவர் இதில் அடங்குவதாகவும் நாடாளுமன்றத்தில் வைத்து நேற்று தெரியவந்துள்ளது.
வாய்மொழிமூலமான பதில் எதிர்பார்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்த விபரங்களை கூறியுள்ளார்.
பாலியல் குற்றம், சிறார்களுடன் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை.
எனினும் கொலை குற்றத்துடன் தொடர்புடைய ஒருவருக்கு 2010ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
அப்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, 2 பெண்களை கொலை செய்த பெண்ணுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளதாகவும், அமைச்சரின் மனைவி என்பதால் அரசியல் நெருக்கத்தின் அடிப்படையில் இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் இதன் மூலம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment