நாட்டின் பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலேயே நான் இந்த கூட்டத்திற்கு வந்துள்ளேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் சற்றுமுன் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தில் எனக்கே பெரும்பான்மை உள்ளது. வேறு எவரும் என்னை விட பெரும்பான்மை கொண்டிருந்தால் அவர்கள் நாடாளுமன்றத்தில் அதை வெளிக்காட்டலாம்.
நாட்டின் தற்போதைய நிலைமையில் நெருக்கடிகள் அவசியமில்லை. நாட்டில் இருக்கும் கஷ்டமான காலத்தில் நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை.
இதன் மூலம் மக்களின் வாழ்க்கையை மேலும் கஷ்டத்திற்குள் தள்ள வேண்டிய தேவையில்லை. வாழக்கை என்பது போராட்டம் அந்த போராட்டத்தை மேலும் உக்கிரமடைய செய்யும் தேவை எமக்கில்லை. நாட்டில் சாதாரண நிலைமையை ஏற்படுத்த வேண்டும். இந்த இடத்தில் பிரச்சினைகள் இருக்குமாயின் அதனை தீர்க்க முடியும்.
அந்த வகையில் பெரும்பான்மை பலம் யாருக்கு இருக்கின்றது என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்கும்.
இதற்காக நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகரிடம் தாம் கோரிக்கை விடுப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதில் நாடாளுமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில், 2 வாரங்களுக்கு யார் பிரதமர்? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு, “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை யாருக்கு இருக்கின்றதோ அவரே பிரதமர், அந்த வகையில் எனக்கே பெரும்பான்மை உள்ளது. இரண்டு தடவைகள் எனது பெரும்பான்மையை நாடாளுமன்றில் உறுதி படுத்தியுள்ளேன். அன்று என்னுடன் இருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் இன்றும் என்னுடன் இருக்கின்றனர்” என பதிலளித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க, மனோ கணேசன், சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியூதின், பழனி திகாம்பரம் மற்றும் ராஜித சேனாரட்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment