இதுகுறித்து துருக்கி அதிகாரிகள், ”ஜமாலின் மரணம் தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரில் ஒருவர் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரகத்தில் ஜமால் கொல்லப்பட்ட பிறகு அவரது ஆடையை அணிந்து வெளியே வரும் காட்சி சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. அந்த நபர் தூதரகத்தின் பின் வாசல் வழியாக வெளியேறுகிறார்.
அவர் ஜமாலைப் போன்ற தோற்றம் பெற போலியான தாடியை தனது முகத்தில் பொருத்தி இருக்கிறார்” என்று கூறியுள்ளனர்.
ஜமாலின் ஆடை அணிந்து வருபவரின் பெயர் முஸ்தபா அல் மதானி. அவர் சவுதி அனுப்பிய கூலிப்படைகளில் ஒருவர் என்று துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஜமால் கொலை குறித்த பல உண்மைகள் வெளிவர உள்ளன என துருக்கி அதிபர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த சிசிடிவி காட்சியை துருக்கி வெளியிட்டுள்ளது.
ஜமால் அமெரிக்காவிலுள்ள வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தார்.
துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.
இது தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.
துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து ஜமால் கொல்லப்பட்டத்தை சவுதி ஒப்புக் கொண்டது.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவுதிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment