நியூசிலாந்தில் வைத்து திருகோணமலையின் ஆயர் நோயல் இம்மானுவேல் தெரிவித்திருந்த கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் குறித்த ஆயர், இன்று “கன்னியா போய்விட்டது. விரைவில் திருகோணேஸ்வரமும் போய்விடும்”. அதுவரை ஏதோ வருகிறது, வந்துவிட்டது என்று மக்களிடம் சொல்லிக் கொண்டிராதீர்கள்! என குறிப்பிட்டிருந்ததாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்த “இராவணதேசம்”எனும் நூல் வெளியீட்டு நிகழ்வில் வைத்தே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்துக்களின் புனித பகுதியாக விளங்கும், தமிழர் தலைநகரான திருகோணமலையில் அமைந்துள்ள கன்னியா மற்றும் திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பில் ஆயர் வெளியிட்டிருந்த ஆதங்கமானது மக்கள் மத்தியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், நான் பிறந்த காலப்பகுதியில் கிண்ணியாவில் தமிழ் தவழ்ந்தது. ஆனால் இன்று போய் பாருங்கள். நான் புதிதாய் ஒன்றும் சொல்லவில்லை. நடப்பதை தான் அங்கு சொன்னேன் என சர்சையாகியுள்ள தனது உரை தொடர்பில் அண்மையில் விவரித்திருக்கிறார் ஆயர் நொயல் இம்மானுவேல்.
தமிழ் தூது தனிநாயகம், மறை பரப்பிற்காக இத்தாலியிலிருந்து தமிழகம் சென்று பின்பு தமிழை வளர்ப்பதில் ஈடுபாடு கொண்ட ஜேசு சபை துறவி வீரமா முனிவர், கனடாவிலிருந்து மறை பரப்பிற்காக சென்ற ஜீ.யு.போப் ஐயர், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோர் தமிழை வளர்ப்பதிலும், தமிழ் மக்களை காப்பதிலும் பெரும் பங்காற்றியவர்கள்.
வடக்கு கிழக்கில் பல அருட்தந்தையர்கள் தமிழ் மக்களுக்காக போராடி உயிரிழந்தும் உள்ளனர். மேலும் காணாமல் போனோர் பட்டியலிலும் 60க்கும் மேற்பட்டோருடன் சரணடைந்த அருட்தந்தை பிரான்ஸிஸ் அவர்களும் இதுவரை காணாமல் போனோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று வெளிநாடு ஒன்றில் பேராயர் ரொமைரோ மக்களுக்காக போராடி தன் உயிரை நீத்தார். இதேவேளை தூத்துக்குடியில் இடம்பெற்ற செட்டர்லைட் ஆலை போராட்டத்தில் அருட்தந்தையர்கள் பலர் கலந்து கொண்டு நெஞ்சில் குண்டு வாங்கியிருந்தனர்.
இந்த நிலையில் மேற்குறிப்பிட்டவர்கள் வரிசையில் ஆயர் நொயல் இம்மானுவேல் இடம்பிடிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை தமிழ் மக்களுக்காகவும், தமிழுக்காவும் நடத்தப்பட்ட போராட்டத்தில் திருச்சபையின் பங்களிப்பு கடந்த காலங்களில் மிகவும் அதிகமாகவே இருந்தது.
எனினும் தற்போது இந்த விடயத்தையில் சற்று சோர்வு தென்பட்டாலும் கூட ஆயர் நொயல் இம்மானுவேல் போன்று பல ஆயர்கள் தமிழர்களுக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க முன் வர வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அரசின் நிகழ்வுகளில் மட்டும் கலந்து கொண்டு விட்டு ஆசிச் செய்தியுடன் விடை பெறுவது உகந்ததல்ல.
காரணம் இன்று உள்ள சூழலில் தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் நகர்வுகளும் சற்று தடம் புரள ஆரம்பித்துள்ள நிலையில் மக்களால் மிகப் பெரும் சக்தியாக பார்க்கப்படும் ஆயர்களும் நல்லாட்சி அரசிற்கு நட்சான்று வழங்குபவர்களாக இருந்தால் தமிழ் மக்களின் எதிர்கால நிலை என்ன
கடந்த யுத்த காலங்களில் மக்கள் இடப் பெயர்வுகள் வேளையில் எல்லாம் ஆலயங்களை நோக்கியே ஓடி வந்தமை வரலாறு அது ஆலயங்களில் இருந்த நம்பிக்கைக்கு அப்பால் அவ் ஆலயத்தில் இருந்த அருட்தந்தையர்கள் மீதிருந்த அளவு கடந்த நம்பிக்கை என்பது சகலருக்கும் நன்கு தெரியும்.
இப்படி வடக்கு - கிழக்கில் இன்று வரை ஒரு உயர்வான இடத்திலே சகல மக்கலாலும் வைத்து பார்க்கப் படும் கத்தோலிக்க திருச்சபை மற்றும் அதன் துறவரத்தோர் அனைவரதும் பங்கு என்ன என்பதை சிந்திக்க வேண்டிய காலம் இது.
வடக்கு - கிழக்கு மக்களின் தொடர் போராட்டங்களில் மன்னார் - யாழ்ப்பாண மறைமாவட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொள்கின்ற நிலையில் திருகோணமலை மறைமாவட்டத்தில் ஆயர் நோயல் மற்றும் அருட்தந்தை யோகேஸ்வரனையும் மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் அருட்தந்தை யோசப்மேரி மற்றும் அருட்தந்தை அம்புரோஸ்அவர்களையுமே காண முடிகிறது.
ஏனைய அருட்தந்தையர்கள் ஏன் மக்கள் போராட்டங்களில் அக்கரை காட்டுவதில்லை கிறிஸ்தவ திருச்சபை என்பது ஆன்மீகத்துக்கு அப்பால் மனித உரிமைகள் பற்றியும் வலுவாக குரல் கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு உள்ளது அந்த பொறுப்பை திருகோணமலை - மட்டக்களப்பு மறைமாவட்டம் சரியா செய்கிறதா என்கிற கேள்வி உள்ளது இதன் சூழல் என்ன?
திருகோணமலை - மட்டக்களப்பு மறைமாவட்ட ஒன்றாக இருந்த போது மக்களிற்காக உயிரைக் கொடுத்த அருட்தந்தையர்களை வரலாறு மறவாது அந்த வகையில் அருட்தந்தை, கேபியர் அருட்தந்தை சந்திரா பெணார்டே, அருட்தந்தை செல்வராஜா போன்றவர்களை குறிப்பிடலாம்.
அருட்தந்தை அம்புரோஸ், அருந்தந்தை சந்திரா போன்றவர்கள் மக்களிற்காக மரணத்தின் விழிம்பு வரை சென்று உயிர் தப்பி வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இப்படியான வரலாறு கொண்ட இரு மறைமாவட்டங்களிலும் இன்றைய அருட்தந்தையர்களின் மனித உரிமைகள் மற்றும் மக்கள் செயற்பாடு வேதனை அளிக்கும் வகையில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.
இந்த சிக்கல் நமக்கு எதற்கு, திருப்பலி மற்றும் ஆண்மீக காரியங்களுடன் நின்று விட்டால் போதும் நமக்கு எதற்கு அரசியல் என வினா எழுப்பும் சூழல் பொதுவாக உள்ளது. மக்களின் உரிமை பற்றி பேசுவது அரசியல் என அரசியல் வாதிகள் நினைப்பது நியாயம் அருட்தந்தையர்கள் நினைப்பது வேதனையான விடையம்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சீஸ் அவர்கள் மனித உரிமைக்காக கொடுக்கும் அழுத்தங்கள் இங்கு குறிப்பிடப்பட வேண்டியவை.
அத்துடன் கொழும்பு பேராயர் தான் சார்ந்த சிங்கள மக்களின் நலனிற்காக தமிழ் மக்களை ஒரு பொருட்டாக எள்ளவும் மதிக்காமல் அவர் சார்ந்த சிங்கள மக்களிற்காக அவர் குரல் கொடுப்பது பிழையாக தென்பட்டாலும் அவர் சார்ந்த இனத்தை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் அது சரி
இப்படியான சூழலில் திருச்சபையில் உள்ள ஒவ்வொரும் தங்களை தாங்கள் சுய கேள்விக்கு உட்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்.
அதைவிடவும், மதம் மற்றும் இனம் என்பன கடந்து இந்து மதத்திற்காக ஆயர் நோயல் இம்மானுவேல் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளமையானது தாயக தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் மனதிலும் ஓரளவு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment