சிலர் செக்கச் செவேலென சிவந்து, கனிந்திருக்கிற தக்காளிப் பழங்களைத் தான் தேடுவார்கள்.முழுவதுமாக சிவந்திருக்கும் தக்காளிச் சாறில் அமிலம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அதனால் பச்சையும் மஞ்சளும் கலந்து செங்காயாக இருக்கும் காய்களுக்கு முதலிடம் கொடுங்கள்.
உருண்டையாக கெட்டியாக இருக்கும் காய்களாகப் பார்த்து வாங்குங்கள். முண்டும் முடிச்சுமாக இருந்தால் அதில் சாறு அதிகமாக இருக்குமே தவிர சதைப்பற்று இருக்காது.
வெண்டைக்காய்
பச்சை நிறத்தில் இருக்கவேண்டும். நுனியை உடைத்தால் படக்கென்று உடையவேண்டும், அதுதான் பிஞ்சு. உடையாமல் வளைந்தாலோ, இரண்டாகப் பிளந்தாலோ அல்லது காம்பு சுருங்கியிருந்தாலோ அது முற்றல். வெண்டைக்காய் காம்புப் பகுதியில் இருந்துதான் முற்றத் துவங்கும். எனவே காம்பை உடைத்துப் பார்த்து வாங்கலாம்.
உருளைக்கிழங்கு
முளைவிட்ட காய்களையும் ஆங்காங்கே பச்சை நிறம் பூசியிருக்கும் காய்களையும் ஒதுக்குவது நல்லது. செம்மண்ணில் விளைந்த உருளையில் இனிப்புச்சுவை மிகுந்து இருக்கும்.தழும்புகள், ஓட்டைகள் இல்லாமல் இருக்க வேண்டும். பச்சையாகவோ அல்லது பச்சை நிறத்தழும்புகள் இருந்தாலோ தவிர்க்கவும். தோல் சுருங்கியவற்றையும் வாங்கக்கூடாது. விரல் நகத்தினால் கீறினால் தோல் வரவேண்டும். இதுதான் நல்ல உருளைக்கிழங்குக்கு அடையாளம். சுவையாகவும் இருக்கும்.
கத்தரி
ஓட்டை இருந்தால் உள்ளே புழு இருக்கும் என்பதால், சிறு ஓட்டைகூட இல்லாமல் நன்றாகப் பார்த்து வாங்கவேண்டும். காம்பு நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். காம்பு குச்சி போன்று இருந்தால் காய் முற்றல் என்று அர்த்தம். காய் முழுக்க ஒரே நிறத்தில் பளபளவென்று இருப்பது நல்ல காய். பச்சை நிறத்தில் உள்ள கத்தரிக்காய் மீது வெள்ளை வரிகள் இருந்தால் அது கசக்கும்.
முருங்கைக்காய்
கரும்பச்சை நிறத்திலும் சற்று உருண்டையாகவும் இருக்கும் முருங்கைக்காயாகப் பார்த்து வாங்க வேண்டும். பட்டையாக இருந்தால் உள்ளே சதை இருக்காது என்பதால் தவிர்க்கவும். இரு முனைகளைப் பிடித்து லேசாக முறுக்கினால் வளைத்துகொடுக்க வேண்டும். அதுவே இளசான காய். அதுவே முறுக்கும்போது மளமளவென்று சத்தம் கேட்டால், அது முற்றல். தவிர்க்கவும்.
முள்ளங்கி
காய் நீண்டு, தலைப்பகுதி காம்பு நிறம் மாறி வாடிவிடாமல் பச்சையாக இருக்க வேண்டும். நகத்தால் லேசாகக் கீறிப் பார்க்கும்போது தோல் மென்மையாக இருந்தால் அது இளசு, சமைக்க உகந்தது.
பீன்ஸ்
நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். உடைத்தால் பட்டென்று உடையும். அதுதான் சமையலுக்குச் சுவையாக இருக்கும். வெளிர்பச்சை நிறத்தில் இருந்தால் அது முற்றிய பீன்ஸ். நாள்பட்ட பீன்ஸும் வதங்கி வெளிர்பச்சையாகக் காட்சியளிக்கும் தவிர்க்கவும்.
வாழைக்காய்
காம்பு ஒடிந்த இடத்தில் வெள்ளையாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது. வாங்கி வந்தபிறகு சுத்தமாகக் கழுவிவிட்டு தண்ணீரில் போட்டு வைத்தால், வாடாமலும் பழுக்காமலும் இருக்கும்
முட்டைக்கோஸ்: இலைகள் வெள்ளையாக இருக்கக்கூடாது. பச்சை உள்ளவையாகப் பார்த்து வாங்கவேண்டும். அதுதான் இளசு. முட்டைக்கோஸ் அளவில் சிறியதாகவும் கனமாகவும் இருந்தால் சுவையாக இருக்கும். நடுக்காம்பு வெள்ளையாகவும், நாற்றமில்லாமலும் இருக்கவேண்டும். தவறினால் அது பழையது என்று அர்த்தம்.
பச்சை மிளகாய்
காயும் காம்பும் பச்சையாக இருந்தால் ஃப்ரெஷாக இருக்கும். காம்புகள் சுருங்கி, கறுத்தப் போயிருந்தால் பழையது என்று அர்த்தம். மிளகாய் நீளமாக இருந்தால் காரம் குறைவாக இருக்கும். அதுவே குண்டாக இருந்தால் காரம் அதிகமாக இருக்கும்.
அவரைக்காய்
ஒவ்வொரு காயையும் தொட்டுப் பார்க்கவும். அதில் விதைகள் பெரியதாக இருக்கும் காய்களைத் தவிர்க்கவும். இளசாக இருக்கும் காய்களில் விதைகள் சிறியதாக இருக்கும், நார் அதிகம் இருக்காது.
0 comments:
Post a Comment