நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பெரும்பாலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னரே அதிக மழைப் பெய்யக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 –150 மில்லிமீற்றர் அளவில் மழைப் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் மண்சரிவு அபாயம் இருப்பதாக, தேசிய கட்டிட ஆய்வு பணிமனை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவு, மாத்தளை மாவட்டத்தின் உக்குவலை பிரதேச செயலகப் பிரிவு மற்றும் கண்டி மாவட்டத்தின் கங்கவட்ட கொரலை பிரதேச செயலகப் பிரிவு என்பவற்றில் மண்சரிவு அபாயம் நிலவுகிறது.
இந்த பகுதிகளில் தொடர்ச்சியாக 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யும் பட்சத்தில் மண்சரிவு ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் மண் மற்றும் கல் சரிவுகள் தொடர்பில், நிலத்தாழிறக்கம் போன்றன தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடும் மழைக்காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய தெதுருஒய நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகளும், பராக்கிரம சமுத்திரத்தின் 6 வான்கதவுகளும், தபோவ நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment