பொலன்னறுவ மாவட்டத்தின் பொல்கொளுவ பிரதேசத்தில் மூன்று மில்லியன் ரூபா பணத்தை நூதனமாக சுருட்டிக் கொண்டு தலைமறைவான யுவதியொருவர் தொடர்பில் பொலிசார் தகவல்களை கோரியுள்ளனர்.
ஒன்றரை வருடங்களின் முன்னர் இந்த பகுதிக்கு முதியன்செலகே ஷியாமலி திஸாநாயக்க என்ற 29 வயதான யுவதி குடியேறியிருக்கிறார். குடியேறிய நாளிலிருந்து இந்த பகுதி மக்களுடன் மிக சினேகிதமாக பழகி, எல்லோருடைய நன்மதிப்பையும் பெற்றார்.
தன்னை வசதியானவராக காண்பித்த யுவதி, ஆரம்பத்தில் அவசர பணத்தேவையுடையவர்களிற்கு கடனாக பணம் வழங்கியுள்ளார். பின்னர் அந்த பிரதேசத்தில் பலரிடம் வட்டிக்கு பணம் வழங்கினார். இதன்மூலம் கிராமத்தில் பலருடன் நெருங்கிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
பின்னர், கிராமத்திலுள்ளவர்களிடம் பணத்தை வாங்கி, வட்டிக்கு வழங்கினார். தன்னிடம் பணம் முதலிடுபவர்களிற்கு கவர்ச்சிகரமான வட்டி வழங்கியுள்ளார். ஐம்பதாயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் வரையான பணம் முதலிட்டால் நாளாந்தம் ஆயிரம் ரூபா வழங்கலாமென கூறி பலரிடம் பணத்தை பெற்றார். அப்படி பணம் தந்தவர்களிற்கு வாக்களித்தபடி பணம் கொடுத்துள்ளார்.
விவசாயிகள் பலர் தம்முடமிருந்த கால்நடைகளை விற்பனை செய்து, ஷியாமலியிடம் பணத்தை முதலிட்டுள்ளனர்.
ஆனால் கடந்த 17 ஆம் திகதி முதல் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை காணாததையடுத்து, ஏமாற்றப்பட்டதாக அந்த கிராமத்தை சேர்ந்த பலர் பொலன்னறுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதுவரையான முறைப்பாடுகளின் அடிப்படையில் மூன்று மில்லியன் ரூபாவிற்கு அதிகமான தொகை பணம் குறித்த யுவதியால் சுருட்டப்பட்டிருப்பதாக பொலிசார குறிப்பிட்டுள்ளனர்.
இந்த யுவதியை பற்றி தகவல் தெரிந்தவர்கள் 027 – 2222222 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளும்படி பொலன்னறுவ பொலிசார் அறிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment