வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சி அறிவிப்பு நிகழ்வுக்கு, பேரவையின் பங்காளிகளான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் புளொட் கட்சிகள் பங்கேற்கவில்லை. அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் எவருமே கலந்து கொள்ளவில்லை.
தமிழ் மக்கள் பேரவையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்பினரும் பங்காளிகளாக உள்ளனர்.
தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தனது அரசியல் எதிர்காலம் தொடர்பில் பேரவையின் கூட்டத்தில் அறிவிக்கப் போவதாகக் கூறியிருந்தார்.
முதலமைச்சர் புதிய கட்சியை ஆரம்பிக்கும் நேற்றைய கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் எந்தவொரு உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை. புளொட் அமைப்பின் உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட எவரும் பங்கேற்கவில்லை.
மேலும், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது அவரை ஆதரித்த மாகாணசபை உறுப்பினர்களில், திருமதி அனந்தி சசிதரன், க.சர்வேஸ்வரன், பொ.ஐங்கரநேசன், இ.இந்திரராசா ஆகியோரே பங்கேற்றனர்.
ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் அதிபர் க.அருந்தவபாலனும் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டங்களில் பங்கேற்கும், பேராசிரியர் சி.க.சிற்றம்பலமும் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
0 comments:
Post a Comment