வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று தாக்கப்பட்டுள்ளார். அவருடன், வல்வெட்டித்துறை நகரசபையின் உத தலைவர் கேசவனும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இறுதியில் பொலிசாரால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
நேற்று (05) தீருவிலில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் பன்னிரண்டு மாவீரர்களிகளின் நினைவிடத்தில், அனைத்து இயக்கங்களில் இருந்தும் உயிர்நீத்தவர்களின் நினைவிடம் ஒன்றை அமைக்க வல்வெட்டித்துறை நகரசபை முடிவெடுத்தது. எம்.கே.சிவாஜிலிங்கமே இந்த முடிவை எடுத்து, வல்வெட்டித்துறை நகரசபையினரை அந்த தீர்மானத்தை நோக்கி நகர்த்தினார்.
அந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமென ஏனைய கட்சிகளை சேர்ந்த வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்களிற்கு தன் கைட கடிதமும் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று- புலிகளின் பன்னிரண்டு மாவீரர்களின் நினைவுநாளில்- பொது தூபிக்கான அடிக்கல் நாட்டும் விழாவை சிவாஜிலிங்கம் தரப்பு முன்னெடுத்தது.
இதன்போது நகரசபையின் ஏனைய உறுப்பினர்கள்- சுயேட்சைக்குழு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி- மற்றும் பொதுமக்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அர்ச்சகர் மதச்சடங்குகளை ஆரம்பிக்க, அவரை நிறுத்துமாறு போராட்டக்காரர்கள் கேட்டனர். எனினும், அர்ச்சகர் அதை ஏற்காமல், சடங்குகளை தொடர, அர்ச்சகரை கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பிக்க, அவர் வெலவெலத்து விட்டார். மதச்சடங்குகளையும் நிறுத்தி விட்டார்.
போராட்டக்காரர்களால், அடிக்கல் நாட்டும் நிகழ்வு தடுக்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், அங்கு வந்த பொலிசார், நீதிமன்றத்தின் தடையுத்தரவை வழங்கினர். நீதிமன்ற உத்தரவை கேட்க மாட்டேன் என சிவாஜிலிங்கம் காதைப்பொத்திய சம்பவமெல்லாம் இதன்போதுதான் நடந்தது.
நீதிமன்ற உத்தரவை தெரியப்படுத்திய பின்னர், அடிக்கல் நாட்டும் நிகழ்வு முற்றாக தடைப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில், ரெலோவிலிருந்து நீக்கப்பட்ட வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஷை குறிப்பிட்டு, அவர்தான் இந்த தடையுத்தரவிற்கு காரணமானவரென சிவாஜிலிங்கம் உரத்த குரலில் குற்றம்சாட்டினார்.
அடிக்கல் நாட்டும் கொட்டகைக்குள்தான் இவ்வளவு களேபரமும் நடந்தது. கொட்டகையை நெருக்காமல் சற்று தள்ளி நின்று நடந்தவற்றை அவதானித்துக் கொண்டிருந்த சதீஷ், சிவாஜிலிங்கத்தின் குற்றச்சாட்டால் கோபமடைந்து வேகமாக கொட்டகை்குள் நுழைந்தார்.
சிவாஜிலிங்கத்தை கெட்டவார்த்தைககளால் திட்டி, “நான்தான் இதன் பின்னணியென யார் உனக்கு சொன்னது?“ என கேட்டு, சிவாஜிலிங்கத்தின் கழுத்தை பிடித்து நெரித்து, உலுக்கினார். எதிர்பாராத இந்த திடீர் நடவடிக்கையால் நிலைகுலைந்து போன சிவாஜிலிங்கம், வெலவெலத்து- அருகில் நின்ற வல்வெட்டித்துறை நகரசபை உப தலைவர் கேசவனை சுட்டிக்காட்டி, “அவர்தான் என்னிடம் அப்படி சொன்னார்“ என கையை காட்டிவிட்டு தப்பித்தார்.
இதன்போது சிவாஜிலிங்கத்திற்கு சில அடிக்களும் விழுந்திருந்தன.
சிவாஜிலிங்கத்தை விட்டுவிட்டு, கேசவனிடம் சென்ற சதீஷ், “யார் அப்படி சொன்னது?“ என கேட்டு, அவரை சரமாரியாக தாக்கினார்.
சிவாஜிலிங்கம், கேசவன் மீது சரமாரியான தாக்குதல் நடந்தபோது, அங்கிருந்த யாரும் அவர்களை காப்பாற்ற முனையவில்லை. இறுதியில் நீதிமன்ற உத்தரவுடன் வந்த பொலிசாரே, சதீஷை பிடித்து சமாதானப்படுத்தி, நிலைமையை சுமுகமாக்கினார்கள்.
இதேவேளை, இந்த நிகழ்விற்கு பன்னிரண்டு மாவீரர்களில் ஒருவரான லெப்.கேணல் குமரப்பாவின் தாயாரும் வந்திருந்தார். நிகழ்வின் பின்னர் அவர் கண்ணீர் மல்ல சிவாஜிலிங்கத்தை குற்றம்சாட்டியிருந்தார். “குமரப்பாவின் அஞ்சலி நிகழ்வு என்றுதான் சொல்லி என்னை அழைத்து வந்தார்கள். இங்கு வந்து பார்த்த பின்னர்தான், வேறு நிகழ்வென்பது தெரிந்தது. சிவாஜிலிங்கம் பொய் சொல்லி என்னை ஏமாற்றி அழைத்து வந்தார்“ என பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த பொது நினைவுத்தூபிக்காக சிவாஜிலிங்கம் தனது மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் பத்து இலட்சம் ரூபா ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment