லண்டனில் இலங்கைத் தமிழரின் சாராயக்கடை முற்றுகை!! விசா இல்லாதவரை வேலைக்கு அமர்த்தினாராம்!! 2 கோடி அபராதம்!!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்….
கடந்த வாரம் இலண்டனில், இலங்கைத் தமிழர் ஒருவருக்குச் சொந்தமான மதுபான விற்பனை நிலையத்தில் (Off Licence) பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையானது, புலம்பெயர் தமிழ் வணிக சமூகத்தின் மத்தியில் ஒரு முக்கியமான விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.
அங்கு வதிவிட உரிமையற்ற (விசா இல்லாத) ஒருவரைப் பணிக்கு அமர்த்திய குற்றத்திற்காக, அந்த வர்த்தக நிலைய உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு 45,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, இத்தகைய கைதுகளும், கணிசமான அபராதங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
இருப்பினும், தற்போதைய சூழலில் பிரித்தானிய அரசின் குடிவரவுச் சட்ட அமலாக்கம் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்குத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, சட்டவிரோதப் பணியமர்த்தலுக்கான அபராதத் தொகை, முன்பு இருந்த 10,000 பவுண்டுகளிலிருந்து தற்போது 45,000 பவுண்டுகள் வரை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வளவு கடுமையான சட்ட நெருக்கடிகளும், மிகப்பெரிய பொருளாதார இடர்களும் இருப்பது தெளிவாகத் தெரிந்திருந்தும், சில தமிழ் வர்த்தகர்கள் ஏன் தொடர்ந்து சட்டத்திற்குப் புறம்பான வகையில், வதிவிட உரிமையற்றவர்களைப் பணிக்கு அமர்த்தும் அபாயகரமான முடிவை எடுக்கிறார்கள்?
இதற்கான காரணங்களை நாம் மேலோட்டமாகப் பார்க்காமல், அவர்களின் மனநிலை மற்றும் பொருளாதாரக் காரணிகள் அடிப்படையில் ஆராய வேண்டியுள்ளது.
சில வணிகர்களிடம், “தங்களைச் சட்டம் நெருங்காது” அல்லது “தப்பித்துக் கொள்ளலாம்” என்ற ஒரு விதமான மிதமிஞ்சிய தன்னம்பிக்கை (Overconfidence) காணப்படுகிறது. இது பல ஆண்டுகளாகப் பிடிபடாமல் இருந்த அனுபவத்தினால் ஏற்பட்ட ஒரு தவறான பாதுகாப்பு உணர்வாகக் கூட இருக்கலாம்.
“எத்தகைய சிக்கல் வந்தாலும் பணத்தால் தீர்த்துவிடலாம்” என்ற ஒரு தவறான கண்ணோட்டம் சிலரிடம் உள்ளது. 45,000 பவுண்டுகள் என்பது ஒரு மிகப்பெரிய தொகை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தாலும், தமது தற்போதைய பணப்புழக்கத்தைக் கொண்டு தரமான சட்டசேவைகளை விலைக்கு வாங்கி அதைச் சமாளித்துவிடலாம் என்ற ஒருவித பொருளாதார இறுமாப்பு, அவர்களை இத்தகைய தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டக்கூடுவதாக இருக்கலாம்.
குறுகிய கால இலாப நோக்கம் மற்றும் தவறான பொருளாதார திட்டமிடுதல் மிக முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
ஒரு பணியாளரைச் சட்டரீதியாக அமர்த்தும்போது, அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் (Minimum Wage) வழங்க வேண்டும், National Insurance Contributions செலுத்த வேண்டும், மற்றும் பிற சட்டரீதியான சலுகைகளை வழங்க வேண்டும்.
இவற்றைத் தவிர்ப்பதற்காக, சட்டவிரோதப் பணியாளர்களை அரைவாசிச் சம்பளத்திற்கு அமர்த்துவதன் மூலம் கிடைக்கும் உடனடி இலாபத்தை மட்டுமே இவர்கள் கணக்கில் கொள்கிறார்கள்.
ஆனால், அவ்வாறு சேமிக்கும் சிறிய தொகையை விட, பிடிபட்டால் செலுத்த வேண்டிய 45,000 பவுண்டுகள் அபராதம் பல மடங்கு அதிகம் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
இது, “ஊசி போகிற இடத்தைப் பார்ப்பாராம், உலக்கை போகிற இடத்தைப் பாராராம்” என்ற பழமொழியை நினைவூட்டும் ஒரு முதிர்ச்சியற்ற பொருளாதாரக் கணக்கீடு என்றால் மிகையாகாது.
இந்தப் பிரச்சினையின் தாக்கம் வெறும் 45,000 பவுண்டுகள் அபராதத்துடன் நின்றுவிடுவதில்லை. அதன் தொடர் விளைவுகள் மிகவும் கடுமையானவை.
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது உறுதிசெய்யப்பட்டால், வணிக நிலையத்தின் மதுபான விற்பனை உரிமம் (Off Licence) உள்ளூர் சபையினால் (Council) முழுமையாக ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது.
ஒரு Off Licence-ன் பிரதான வருமானமே இந்த உரிமத்தில்தான் தங்கியுள்ளது. அது பறிபோகும்போது, அவர்களின் மொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிடும்.
இத்தகைய சட்ட நடவடிக்கைகளால் ஏற்படும் தீவிரமான மன அழுத்தம் (Severe Stress), உரிமையாளரையும் அவர் தம் குடும்பத்தினரையும் உடல், மன ரீதியாகப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கி, நோயாளிகளாக்கும் நிலைக்குத் தள்ளக்கூடும்.
மிக முக்கியமாக, இது ஒரு தனிநபர் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, ஒரு சமூகப் பிரச்சினையுமாகும். பிரித்தானிய ஊடகங்களில் அடிக்கடி “இலங்கைத் தமிழருக்குச் சொந்தமான கடை உரிமையாளர் கைது” என்ற செய்திகள் வெளியாகும்போது, அது ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் ஒரு கறையை ஏற்படுத்துகிறது.
பல தசாப்தங்களாகக் கடின உழைப்பின் மூலம் புலம்பெயர் மண்ணில் கட்டியெழுப்பப்பட்ட “இலங்கை தமிழர்கள் நேர்மையான உழைப்பாளிகள்” என்ற நற்பெயர் சிதைக்கப்பட்டு, இலங்கை தமிழர்கள் என்றாலே சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் “நம்பகத்தன்மையற்றவர்கள்” (Dodgy Sri Lankans) என்ற தவறான பிம்பம் பிரித்தானிய பொதுச் சமூகத்தில் உருவாகச் சிலரின் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் காரணமாக அமைகின்றன.
மேற்கூறிய காரணிகளையும் விளைவுகளையும் ஆராயும்போது, இது வெறும் சட்ட அறியாமை மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஒரு “பேராசை” (Greediness) சார்ந்த மனநிலை என்பது தெளிவாகிறது.
உடனடிப் பணலாபத்திற்காக, தமது சொந்த வாழ்வாதாரத்தையும், குடும்பத்தின் நிம்மதியையும், ஒட்டுமொத்த சமூகத்தின் நற்பெயரையும் பணயம் வைக்கும் ஒரு ஆபத்தான விளையாட்டை உடனடியாக கைவிடுங்கள்.






0 comments:
Post a Comment