பல் பிடுங்கச் சென்ற 20 வயது சிங்கள யுவதி பலியானது ஏன்?
பல் ஒன்றைப் பிடுங்கிய பின்னர் ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதுடைய யுவதி ஒருவர், சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேல் தாடையின் நுனியில் உள்ள பல்லில் வலி ஏற்பட்டதால், கடந்த 14 ஆம் திகதி குறித்த யுவதி தனியார் மருத்துவ நிறுவனத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து பல்லை பிடுங்கிய பிறகு அவருக்குத் தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.இதனால் அவர் மீண்டும் தனியார் சிகிச்சை பெறச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஹொரண மாவட்ட பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பொகுணுவிட்ட, பண்டாரஹேன பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் உடலம் மீதான மரண பரிசோதனையை ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி சந்தகன் வடுகே மேற்கொண்டார்.
இதற்கமைய முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், இந்த மரணம் தொடர்பில் திறந்த தீர்ப்பை (Open Verdict) வழங்கிய ஹொரண மரண விசாரணை அதிகாரி சுமேத குணவர்தன, இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.






0 comments:
Post a Comment