கடற்புலி வைதேகியும் BBC தயாரிப்பாளரும்:
வீரமும் துணிச்சலும் நிறைந்த அந்த தேவதை வீரமரணம்!
வைதேகியை நான் சந்தித்தது 2005 ஆம் ஆண்டு.
அதன் பின்னர் சந்திக்கவில்லை. 2009 க்குப் பின்னர் இவருக்கு என்ன நடந்ததோ என நான் அப்பப்போ நினைப்பதுண்டு…
நேற்று அவர் அவுஸ்திரேலியாவில் இயற்கை எய்தினார் என்னும் செய்தியைக் கண்டு துவண்டு போனேன்.
2005 ஆம் ஆண்டு “சுனாமி பேரலை” இன் முதலாவது ஆண்டினை முன்னிட்டு BBC தொலைக்காட்சிக்காக ஒரு ஆவணப்படத்தை தயாரிக்க ஒரு ஆவணப்படக் குழு பிரித்தானியாவில் இருந்து வந்திருந்தார்கள்.
BOXING DAY TSUNAMI
சுனாமி அலை இந்தோனேசியாவில் உருவெடுத்த கணம் முதல் அது சென்று தாக்கிய சகல நாடுகளிலும் சமநேரத்தில் என்ன நடந்தது என்பதே அந்த ஆவணப்படத்தின் கதை. அந்தவகையில் முல்லைத்தீவு கரையோரப் பிரதேசத்தில் என்ன நடந்தது என்பதை பதிவு செய்ய அந்த படக்குழு என்னை அணுகியது. நான் அவர்களை கடற்புலிகளிடம் அழைத்துச் சென்றேன். அந்த வேளை எனக்கு அறிமுகமானவர்தான்,
கடற்புலி வைதேகி.
ஆவணப்படங்களிலும் உணர்வுபூர்வமான ஒரு கதை ஓட்டம் இருக்க வேண்டும். அப்படிக் கதை இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு மையப்பாத்திரம் (HERO) வேண்டும்.
தமிழ்ப்பகுதியின் சுனாமிப் பேரலைக் கதையைச் சொல்வதற்கு BBC ஆவணப்படக் குழு தேரந்தெடுத்த மையப்பாத்திரம்:
கடற்புலி வைதேகி
காரணம்:
சுனாமிப் பேரலையின் சாட்சியம் மட்டுமின்றி…
அந்தப் பேரலையின் போது கடற்புலிகள் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகளின் சாட்சியம் மட்டுமின்றி…
அந்த மீட்புப் பணியைப் மேற்கொண்ட ஒரு “நாயகியாவும்” அவர் இருந்தார்.
இங்கு நான் “மீட்புப் பணி” எனக் குறிப்பிடுவது, எல்லாம் முடிந்த பின்னர் சடலங்களையும் உடமைகளையும் மீட்டெடுக்கும் பணியல்ல.
மாறாக,
சுனாமிப் பேரலை முல்லைத்தீவைத் தாக்கிய அதே கணப்பொழுதில் கடலோர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகள் செய்த RESCUE OPERATION - உயிர்களை சாவில் இருந்து காப்பாற்றிய துணிச்சல் மிக்க ஆபத்து நிறைந்த உயிர் காத்தல் பணி!
உண்மையில் அத்தகைய RESCUE OPERATION - சுனாமியால் பாதிக்கப்பட்ட வேறு எந்த நாட்டிலும் இடம் பெறவில்லை என BCC ஆவணப்படக் குழுவே வியந்தனர். சிறீ லங்கா கடற்படையினர் கூட அவ்வாறான RESCUE OPERATION எதையும் செய்யவில்லை.
வைதேகி அவர்களை BBC படக்குழு நாயகியாகத் தேர்வு செய்ய இன்னொரு முக்கிய காரணம்:
அவருடைய பேச்சாற்றல், அழகு மற்றும் ஆளுமை!
அந்த ஆவணப்படத்தின் தயாரிப்பாளரின் பெயர் Juliana Ruhfus. (படம் 2)
Juliana Ruhfus பின்னர் Al Jazeera இல் இணைந்து கொண்டார். Al Jazeera தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு குறிப்பாக போர் சார்ந்த செய்திகள், ஆவணப்படங்கள் பார்ப்வர்களுக்கு Juliana Ruhfus ஐ தெரியாமல் இருக்க முடியாது.
படப்பிடிப்பு முடிந்த பின்னர், Juliana Ruhfus அவர்கள் என்னிடம் சொன்ன வார்த்தை:
“She is really an ANGEL”
வீரமும் துணிச்சலும் நிறைந்த அந்த தேவதை குறைந்த வயதில் இவ்வுலகை விட்டுப் பிரித்துவிட்டார்.
தேவதைகள் இவ்வலகில் நீண்டகாலம் தங்குவதில்லை!






0 comments:
Post a Comment