ஜனவரி முதலாம் திகதி க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் ஜனாதிபதி அநுரவால் தொடங்கி வைக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் மறக்கப்பட்டது.
ஜனவரி 25ஆம் திகதி யோஷித ராஜபக்ச நிதி மோசடி கேஸில் மாட்ட, அவனது 90 வயசுப் பாட்டியை அவன் பலிக்கடாவாக்கிவிட, அந்தக் கிழவி இன்னும் ஜெயிலுக்குள்ள கிடக்குது.
பெப்ரவரி நான்காம் திகதி தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டபோது தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்று பேரினவாதிகள் சத்தம் போட , தேசிய ஒருமைப்பாடு பல்லிளித்தது.
பெப்ரவரி ஒன்பதாம் திகதி நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டது. குரங்கு ஒன்று குறுக்கே பாய்ந்ததே அதற்குக் காரணம் என்று அரசாங்கம் அறிவிக்க, உலகச் செய்திகளில் இலங்கைக் குரங்குகளுடன் சேர்ந்து நாமும் கேலிப் பொருளானோம்.
பெப்ரவரி 19ஆம் திகதி கோர்ட்டில் வைத்து துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட , துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியவன் பார்க்க அழகாய் இருப்பதாக சில இலங்கைக் குந்தாணிகள் பயர் விட்டனர்.
பெப்ரவரி 20ஆம் திகதியில் இருந்து இஷாரா செவ்வந்தியை தேடிக்கொண்டிருந்த பொலிஸார் , பெப்ரவரி 27 ஆம் திகதியில் இருந்து பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனையும் காணவில்லை என்று தேட, அவர்கள் இருவரும் பாசிக்குடா கடற்கரையில் ஜோடியாக இருப்பார்கள் என்று பலர் எண்ணிப் பார்த்தனர்.
மார்ச் 25 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாளேந்திரன் குற்றப் புலனாய்வுத் துறையால் கைதுசெய்யப்பட்டதற்கு மட்டக்களப்பில் புதுவருடக் கொண்டாட்டம் இரண்டாவது முறை பட்டாசு கொளுத்திக் கொண்டாடப்பட்டது.
ஏப்ரல் 4 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தந்ததற்கு தண்டனையளிக்கும் விதமாக சஜித் பிரேமதாச, தான் எடுத்த புகைப்படமொன்றை ப்ரேம் பண்ணி மோடிக்கு பரிசளித்தார்.
ஏப்ரல் 8 ஆம் திகதி பிள்ளையானும் குற்றப் புலனாய்வுத் துறையால் கைதுசெய்யப்பட, பிள்ளையானும், வியாழேந்திரனும் சிறையில் "தென் மதுரை வைகை நதி" பாடலுக்கு ஒன்றாக ஆடுவார்கள் என்று அவர்களது விசிறிகள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
ஏப்ரல் 18ஆம் திகதி தலதா மாளிகையிலுள்ள புத்தரின் புனித தந்த தாது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் கண்டியை நோக்கி பெளத்த மக்கள் படையெடுக்க , அத்தனை மக்களுக்கும் தங்க வசதியளிக்க முடியாமல் கண்டி மாநகரம் தத்தளிக்க, கண்டி 10 நாட்கள் சென்னையாகி, கண்டி மாநகரத் தெருவெங்கும் பீக்கோலம் பூண்டது.
மே 11 ஆம் திகதி கொத்மலையில் பேருந்து விபத்து ஏற்பட்டு 21 பேர் பலியாக , இலங்கையின் பேருந்துகள் மற்றும் சாரதிகளின் தரம் பற்றி பல ஆய்வுக்கு கட்டுரைகள் எழுதப்பட்டு அத்தனையும் ஒரு வாரத்துக்குள் மறக்கடிக்கப்பட்டன.
ஜூன் 27 ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் பணிப்பாளர் நிஷாந்த விக்ரமசிங்க ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட , "அடப்பாவிகளா இதையே இப்பதானாடா கண்டுபிடிச்சீங்க?" என்று பொதுமக்கள் ரமணா பட பொலிஸ் கான்ஸ்டபிள் மாதிரி ரியாக்சன் கொடுத்தனர்.
ஜூலை 2 ஆம் திகதி ஸ்டார்லிங்க் இலங்கையில் இணைய சேவையைத் தொடங்க, ரணில் விசிறிகள் எல்லாம் "த்தா ரணில்டா" என்று உருண்டு திரிந்தனர்.
ஆகஸ்ட் 22 ஆம் திகதி ரணில் கைதுசெய்யப்பட, ரணிலுக்கு இருக்கும் நோய்கள் என்று அவரது வக்கீல்கள் கொடுத்த நீண்ட லிஸ்ட்டை வைத்து இவ்வளவு நோய்கள் உள்ளவர் உயிர்வாழ்வதை கின்னஸ் சாதனையாகப் பதிய வேண்டுமென அவரது முட்டுக்கள் பெருமையுடன் கோரிக்கை விடுத்தனர்.
ஆகஸ்ட் 25 ஆம் திகதி இந்தோனேஷியாவில் பிரபல பாதாள உலகக்குழுத் தலைவன் கெஹெல்பத்தர பதமே அதிரடியாகக் கைதுசெய்யப்பட்ட பின்னர் இலங்கையில் பிடிபட்ட ஐஸ் போதைப்பொருள் வியாபாரிகள் எல்லோரும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் மஹிந்த அல்லது நாமலுடன் போட்டோ எடுத்திருப்பது எவருக்கும் ஆச்சரியமளிக்கவில்லை.
செப்டெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட விஷேட கொடுப்பனவுகள் நிறுத்தப்பட, திருட்டு ராஜபக்ச கும்பல் "விடுகதையா இந்த வாழ்க்கை" பாடலை ஒலிக்கவிட்டு, இத்தனை காலம் ஓசியில் இருந்த வீட்டை விட்டு வெளியேறினர்.
அக்டோபர் 13 ஆம் திகதி இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைதுசெய்யப்பட, பல தமிழ், முஸ்லிம் டான்களின் பெயர்களும் வெளியாகி சிறுபான்மையினரான எமக்கு "எங்ககிட்டயும் ஒரு படை இருக்குது" என்ற பெருமையைக் கொடுத்தது.
நவம்பர் 26-30 ஆம் திகதி டிட்வா புயலின் பாதிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பலர் உயிரிழந்து, காணாமல் போக முழு நாடும் சோகத்தில் மூழ்கியது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடங்களிலுள்ளவர்களுக்கு உதவ நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலிருந்தும் மக்கள் படையெடுத்து மனிதாபிமானம் மரிக்கவில்லை என்று மக்கள் நிரூபித்தனர்.
நாடே சோகத்தில் இருக்கும்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் "போன வருடம் நான் வாங்கிக் கொடுத்த நூடுல்ஸ்சுக்கு இன்னும் காசு தரவில்லை" என்று டிசம்பர் முதலாம் திகதி காமெடி பண்ண இலங்கை இயல்பு நிலைக்குத் திரும்பப் போவது கண்கூடாகத் தெரிந்தது.
அந்தக் காமெடி போதாதென்று திலித் ஜெயவீர என்ற மிகப்பெரும் இனவாதியுடன் ரவூப் ஹக்கீமும், மனோ கணேசனும் சேர்ந்து "கத்தாழக் கண்ணால குத்தாத" பாடலுக்கு குத்தாட்டம் போடும்போது அங்கே வந்த ஆமதுருவுக்கு ஹக்கீம் வளைந்து போட்ட வணக்கம், ஹக்கீமை முகநூலில் ஏழெட்டு நாட்களுக்கு அட்மிட் பண்ண காரணமாக இருந்தது.
வழமைபோல் இந்த வருடமும் பெளத்தர்கள் வாழாத இடங்களில் புத்தர் சிலைகளும், விகாரைகளும் புதிது புதிதாக முளைத்தது எதிர்பார்த்த மாதிரியே அமைந்தது.
நல்லூர் பிரதேச சபையால் குறிப்பிட்ட பிரதேசம் ஒன்றில் அசைவ உணவுக்கு தடை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு "இந்தியாவில் இருந்தாலும், இலங்கையில் இருந்தாலும் வடக்குச் சங்கி வடக்குச் சங்கிதான்யா" என்று வருடத்தை முடித்தது சிறப்பாக இருந்தது.






0 comments:
Post a Comment