நாட்டில் உள்ள 13 இலட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு நாம் மாதாந்தம் 93 பில்லியன் ரூபாவை சம்பளமாக வழங்குகின்றோம். தற்போது மேலும் கொடுப்பனவு 10ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அதற்காக மேலும் 13 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அரச ஊழியர்களுக்கான அந்த 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை வழங்க முடியாது. ஆனால், அந்த நிலுவை கொடுப்பனவுகள் அனைத்தும் வருட இறுதியில் வழங்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வரிகளை குறைக்குமாறு கோரிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியினால் இம்முறை புரட்சிகரமான வரவு செலவுத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2,851 பில்லியன் ரூபாவை வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறையாக முன்னெடுப்பதே எமது எதிர்பார்ப்பு.
அண்மைக்காலங்களில் பல்வேறு குழுக்கள் நிதியமைச்சுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தின. அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியவர்களில் 10 தொழிற்சங்கங்களும் உள்ளடங்கும். தொழிற்சங்கங்கள் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தன. மற்றுமொரு குழு சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் வரிகளை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது.
ஒருபுறம் தொழிற்சங்கங்கள் சம்பள அதிகரிப்பை கோரியபோது மறுபுறம் வர்த்தகர்கள் வரிக் குறைப்பை கோரினர். இது அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக அமைந்தது. எனினும் ஜனாதிபதி அந்த சவாலை வெற்றி கொண்டுள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தபோது கணிசமான அளவு சம்பள அதிகரிப்பை வழங்குவதாக தெரிவித்தார். அதன்படி இம்முறை பத்தாயிரம் ரூபா அதிகரிப்பை வரவு செலவு திட்டத்தின் மூலம் முன் வைத்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஜனாதிபதியின் யோசனை
நாட்டிலுள்ள 13 இலட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு நாம் மாதாந்தம் 93 பில்லியன் ரூபாவை சம்பளமாக வழங்குகின்றோம். தற்போது மேலும் பத்தாயிரம் ரூபா அதிகரிப்பு இடம்பெறும் போது அதற்காக மேலும் 13 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது.
அரச ஊழியர்களுக்கான 10ஆயிரம் ரூபா அதிகரிப்பை முதல் மூன்று மாதங்களுக்கு எம்மால் வழங்க முடியாமைக்குக் காரணம், எமது வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே வரி வருமானம் கிடைக்கின்றது. குறிப்பிட்ட தினத்திலேயே அது கிடைக்கும். எனினும் அந்த நிலுவை வருட இறுதியில் வழங்கப்படும்.
அதேவேளை ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவையும் அரசாங்கம் அதிகரித்துள்ளது. அது பெரும் புரட்சிகரமான செயற்பாடாகும்.
அரசாங்கம் என்ற வகையில் நாம் தேசிய வருமான வரி திணைக்களம், கலால் திணைக்களம் மற்றும் சுங்கத்திணைக்களத்திற்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். நாம் கடந்த வாரமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். வருமான அதிகார சபை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் அதன் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
அடுத்ததாக சுற்றுலாத்துறை நாட்டுக்கு பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு துறை என்பதால் அந்த துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி கேகாலை மாவட்டத்தில் பின்னவல, கிதுல்கல போன்ற சுற்றுலாப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.
எனவே தொடர்ந்தும் ஏனைய நாடுகளில் தங்கியிருக்கும் நாடாக நாம் முன் செல்ல முடியாது. அந்த வகையில் இம்முறை வரவு செலவுத் திட்டம் புரட்சிகரமான ஒரு வரவு செலவுத் திட்டம் என்றே குறிப்பிட முடியும் என குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment