உலகம், அறிவியலில், மருத்துவத்துறையில் எவ்வளவோ முன்னேறியுள்ளது. ஆனாலும், இன்றுவரை சில நோய்களால் ஏற்படும் உயிரிழப்புக்களைத் தவிர்க்கமுடியவில்லை என்பது உண்மையிலேயே வருந்தத்தக்க விடயம்தான்...
மருந்தே நஞ்சாகி உயிரைப் பறித்த பயங்கரம்
சிலவகை புற்றுநோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. என்றாலும், அவற்றை புற்றுநோய் பாதித்த எல்லா நோயாளிகளுக்கும் கொடுக்கமுடியாது. காரணம் பக்க விளைவுகள்.
ஆக, புற்றுநோய் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள், புற்றுநோயால் உயிரிழ்ப்பதைவிட, புற்றுநோய்க்கான சிகிச்சையின், அல்லது மருந்துகளின் பக்கவிளைவுகளால் உயிரிழக்கிறார்கள் என்பது ஜீரணிக்கமுடியாத உண்மை.
அவ்வகையில், கனடாவில் பிரபல மருத்துவராக பணியாற்றிவந்த இந்திய வம்சாவளியினர் ஒருவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட மருந்து ஒன்றே அவரது உயிரைப் பறித்துவிட்டது.
அதிர்ச்சிக்குரிய ஒரு விடயம் என்னவென்றால், ஒரு வகையில், அவர் கனடாவில் வாழும் இந்தியர் என்பதாலேயே சீக்கிரமாக மரணமடைந்துவிட்டார் என்று கூட சொல்லமுடியும் என்பதுதான்!
புற்றுநோய் சிகிச்சையால் பலியான இந்திய வம்சாவளியினர்
Dr. அனில் கபூர் (Anil Kapoor, 58), கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Burlingtonஇனில் வாழ்ந்துவந்த நிலையில், அவரை பெருங்குடல் புற்றுநோய் தாக்கியது.
ஜனவரி மாதம் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்த நிலையில், அவருக்கு சிகிச்சை துவக்கப்பட்டது. அவர் குணமடைவார், இன்னும் பல ஆண்டுகள் தங்களுடன் வாழ்வார் என நம்பிக்கையுடன் இருந்த அவரது குடும்பத்தினர், எதிர்பாராத பெரிய அதிர்ச்சி ஒன்றை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆம், சிகிச்சை துவங்கி சில வாரங்களிலேயே, அதாவது பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி, Dr. அனில் கபூர் உயிரிழந்துவிட்டார்.
உயிரிழப்புக்குக் காரணம் புற்றுநோய் அல்ல, மருந்து...
இந்நிலையில், Dr. அனில் கபூரின் மரணத்துக்குக் காரணம், அவரது புற்றுநோய் பரவியது அல்ல, அவருக்குக் கொடுக்கப்பட்ட மருந்துதான் அவரது உயிரைப் பறித்துள்ளது என்கிறார்கள் மருத்துவத்துறை நிபுணர்கள்.
பெருங்குடல், மலக்குடல், வயிறு, மார்பு மற்றும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஆகிய புற்றுநோய்களின் சிகிச்சைகளில், 1970களிலிருந்தே Fluorouracil (5-FU) என்னும் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாத்திரை வடிவில் இந்த மருந்தின் பெயர் Capecitabine ஆகும்.
இந்த மருந்து கடுமையான பக்க விளைவுகளைக் கொண்டதாகும்.
இந்தியர் என்பதாலேயே சீக்கிரமாக மரணமடைந்துவிட்டார்?
அதாவது, இந்த மருந்தை ஒருவருக்கு கொடுக்கலாமா, அவருக்கு இந்த மருந்து ஒவ்வாமையை ஏற்படுத்துமா, பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதை அறிவதற்காக ஒரு பரிசோதனை செய்வார்கள்.
அப்படி செய்யப்பட்ட பரிசோதனையில், Dr. அனில் கபூருக்கு பாதகமான முடிவுகள் கிடைக்கவில்லை. ஆகவே, அவருக்கு அந்த மருந்து கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் உயிரிழந்துவிட்டார்.
அதற்குக் காரணம் என்னவென்றால், ஒருவருக்கு இந்த மருத்து ஒத்துக்கொள்ளுமா என்பதற்காக கனடா முதலான நாடுகளில் செய்யப்படும் பரிசோதனை, சில குறிப்பிட்ட மரபியல் மாறுபாடுகள் உள்ளவர்களுக்கு இந்த மருந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படுத்தும், அவ்வகையில் வெறும் நான்கு மரபியல் மாறுபாடுகளை மட்டுமே இந்த பரிசோதனையால் கண்டுபிடிக்கமுடியும்.
அந்த நான்கு மாறுபாடுகளுமே வெள்ளையர்களின் உடலில் மட்டுமே காணப்படுபவை. எளிமையாகக் கூறினால், அந்த பரிசோதனையால் ஆசியர்கள் உடலிலுள்ள மரபியல் மாறுபாட்டைக் கண்டுபிடிக்கமுடியாது.
ஆகவேதான் Dr. அனில் கபூருக்கு அந்த மருத்துவப் பரிசோதனை செய்தபோது, பரிசோதனை முடிவுகள் அவருக்கு பாதகமான முடிவைத் தரவில்லை. அதாவது, அந்த குறிப்பிட்ட பரிசோதனை தேடிய மரபியல் மாறுபாடு இந்தியர் உடலில் இருக்காது. அது வெள்ளையர்கள் உடலில் மட்டுமே இருக்கும்.
இன்னொரு வகையில் கூறினால், இந்தியர்கள் அல்லது ஆசியர்கள் உடலில் உள்ள மரபியல் மாறுபாட்டை அந்த பரிசோதனையால் கண்டுபிடிக்க முடியாது. ஆகவேதான், அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்து, சாதகமான பரிசோதனை முடிவையும் மீறி அவரை பலிவாங்கிவிட்டது.
உலகம் மருத்துவத் துறையில் எவ்வளவு முன்னேறினாலும், இன்னும் எல்லா வசதிகளும், சரிசமமாக எல்லாருக்கும் கிடைக்கவில்லை என்றே கூறலாம் போலிருக்கிறது.
0 comments:
Post a Comment