வரலட்சுமி விரதம்.
வரலட்சுமி விரதம் என அழைக்கப்படும் இவ்விரதத்தை விவாகமாகி சுமங்கலியாக வாழும் சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான இலட்சுமி தேவியைக் குறித்துச் அனுஷ்டிக்கும் மிகச் சிறப்பான விரதமாகும். ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் வருகிறது. இவ்விரதம் இவ்வருடம் ஆகஸ்ட் 28-ந்தேதி வெள்ளிக்கிழமை அமைவதாக சோதிடம் கணித்துள்ளது. சகல சௌபாக்கியங்களையும் தரும் லக்ஷ்மியை வணங்குவதால் வரலக்ஷ்மி விரதம் என்றழைக்கப்பெறுகின்றது.
இந்த விரதம் குறித்து ஒரு கதை கூறப்படுகிறது. மகத தேசத்தில் குண்டினா என்னும் ஊரில் சாருமதி என்ற பெண் லட்சுமிதேவியின் பக்தையாக இருந்தாள். அவளது கனவில் தோன்றிய தேவி, தன்னை வரலட்சுமியாக வழிபட்டால், வேண்டிய வரங்களைத் தருவதாக அருளினாள். சாருமதியும் தன் குடும்பத்தினரிடம் இதை தெரிவித்து, ஒரு வெள்ளிக்கிழமையில் வழிபாடு செய்தாள். மற்ற பெண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளத் தொடங்கினர்.
விரதம் மேற்கொள்ளும் முறை:
முதல்நாளே, வீட்டை நன்றாக மெழுகித் துடைத்துக் கோலம் போட வேண்டும். வீட்டுக் கூடத்தில், சுவர் ஓரமாக ஒரு சுத்தமான பலகையை வைத்து, அதன் மேலும் கோலம் போட வேண்டும். ஒரு சுத்தமான செம்பின் மேல் மஞ்சள் தடவி, அதனுள் அரிசி, பருப்பு இரண்டையும் கலந்து கால்பங்கு நிரப்ப வேண்டும். அதனுள் கருகமணி, வளையல், சின்ன சீப்பு, குட்டிக்கண்ணாடி, எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம் நிரப்பிய குங்குமச்சிமிழ், சில நாணயங்கள் (வெள்ளி, தங்கக்காசு இருந்தால் அதையும் போடலாம்), வெற்றிலை, பாக்கு அனைத்தையும் போட வேண்டும்.
கலசத்து மேல் மாவிலைச் செருகி, மஞ்சள் குங்குமம் பூசிய தேங்காயை அதற்கு நடுவில் வைக்க வேண்டும். மஞ்சள் ஒன்றை மஞ்சள் சரடில் கட்டி, அதைக் கலசத்தில் கட்ட வேண்டும். பிறகு அம்மன் முகத்தை (படமாகக் கிடைக்கும்) தேங்காயில் பதித்து, கருகமணி, பொட்டு, மாலை சார்த்த வேண்டும். கலசத்துக்கு வெண்பட்டு (உங்கள் வசதிக்கேற்ப சாதாரண ரவிக்கைத்துண்டு கூடப் போதும்) சாற்றி, பூமாலை போட வேண்டும். இந்தக் கலசத்தில் மஹாலட்சுமி எழுந்தருள்வதாக ஐதீகம். அதனால், கால்படாத இடத்தில் ஓரமாக நாம் வைத்திருக்கும் பலகை மேல், இந்தக் கலசத்தை வைத்து, அதன் முன்னால் விளக்கேற்றி, கற்பூரம் காட்டி, வெண்பொங்கல் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
மறுநாள் விரதத்தன்று காலையில் எழுந்து மஞ்சள் பூசி குளித்து, பூஜையறையில் சிறிய மண்டபம் மாதிரி அமைக்க வேண்டும் ஒரு ஸ்டூல் போட்டு, அதன் கால்களில் பூ சுற்றி மேலே கோலம் போட்டு அலங்கரித்தால் கூடப் போதும். அதன் மேல், ஒரு நுனி வாழை இலையைப் போட்டு அதில் அரிசியைப் பரப்பி வைக்க வேண்டும்.
பிறகு நல்ல நேரத்தில் இரண்டு சுமங்கலி பெண்கள் சேர்ந்து, கலசத்தைப் பலகையோடு தூக்கி வந்து, அரிசி பரப்பிய இலையின் நடுவில் வைக்க வேண்டும். பூ, மாலை சாத்தி, விளக்கேற்ற வேண்டும். மெல்லிசான நூலில் மஞ்சள் தடவி, நோன்புச் சரடு தயாரிக்க வேண்டும். ஒவ்வொரு சரடிலும் ஒன்பது முடிச்சுகளைப் போட்டு அதன் நடுவில் ஒரு பூவையும் முடிந்து வைக்க வேண்டும்.
இந்தச் சரடுகளையும் கலசத்துடன் வைத்து, ''என் வீட்டுக்கு வந்திருக்கும் வரலக்ஷ்மியே, என்றைக்கும் நீங்காமல் இருந்து வரம் கொடு தாயே'' என்று வேண்டிக் கொண்டு, தீபாராதனை காட்ட வேண்டும். இனிப்புக் கொழுக்கட்டை (அடை) செய்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.
பிறகு, அம்மனைக் கும்பிட்டு, நோன்புச் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் கட்டிக் கொள்ள வேண்டும் (சுமங்கலிகள், கணவர் கையால் கழுத்திலும் கட்டிக் கொள்ளலாம்). இதற்குப் பிறகுதான் சாப்பிட வேண்டும். ரொம்பவும் வயதானவர்கள் கொஞ்சம் பால், பழம் சாப்பிடுவதில் தவறில்லை. அன்று முழுவதும் முழு மனதுடன் மஹாலக்ஷ்மியை நினைத்து லக்ஷ்மி ஸ்லோகம் சொல்ல வேண்டும். மற்ற சுமங்கலிப் பெண்களை அழைத்து பிரசாதத்தை அனைவருக்கும் தர வேண்டும்.
விரதத்தன்று மாலை (அல்லது) மறுநாள் காலை அம்மனுக்கு பூஜை செய்து, பால் நைவேத்தியம் செய்து, விரதத்தை நிறைவு செய்யலாம். பிறகு இந்தக் கலசத்துக்குக் கீழே பரப்பியிருந்த அரிசியை ஒரு துணியில் முடிந்து அரிசிப் பானையில் போட்டு வைக்க, அன்ன பூரணியுடைய அருள் என்றும் நிறைந்திருக்கும். கலசத்தில் வைத்த தேங்காயை, மறு வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமையன்று உடைத்து பாயசம் செய்து, சுவாமிக்கு பூஜை செய்து நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகு, இந்தப் பிரசாதத்தை மற்ற சுமங்கலிப் பெண்களுக்கும் தர வேண்டும்.
சுமங்கலியாக நீண்டகாலம் வாழ்வதென்பது பெறுதற்கரிய பேறாகும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதனால், கணவன் ஆரோக்கியத்தோடு நீண்ட நாள் உயிர் வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுவதுடன், இல்லத்தில் செல்வம் கொழித்துக் களித்தோங்கும்.
சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தின் போது தாலிக்கயிற்றை வைத்து பூஜை செய்து அதனை அணிந்து கொள்ள வேண்டும். வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் சேரும். கன்னிப்பெண் களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும். அம்பாள் அருளால் விரும்பிய நலன்கள் அனைத்தும் கிடைத்து வாழ்வே வளமாகும்.
விரத பலன்கள்:
1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
3. மங்கல வாழ்வு அமையும்.
4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
வரலக்ஷ்மி பூஜைக்குரிய எளிய பூஜா மந்திரங்கள்:
திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ
வருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம்பெரிது
தருமகளே தமியேன் தலைமீது நின்தாளை வையே
- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்..
மகாலெக்ஷ்மி காயத்ரீ:
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்.
அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோமாக!
0 comments:
Post a Comment