வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை(23) காலை சிறப்பாக இடம்பெற்றது.
துர்க்காதேவியின் தேர் இருப்பிடத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆலயத்தை நோக்கிப் பல எண்ணிக்கையான பறவைக்காவடிகள், தூக்குக்காவடிகள், செதில் காவடிகள் என்பன ஆலயத்தை நோக்கி வரிசையாக வந்து கொண்டிருந்தன.
இந்தநிலையில் முற்பகல்-11 மணியளவில் ஆலயத்தை நோக்கி வந்த பறவைக்காவடி அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரதும் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
அந்தப் பறவைக்காவடியை எடுத்து வந்தவர் துர்க்காதேவி போல பட்டுச் சேலை அணிந்திருந்ததுடன் தலையில் அலங்கரிக்கப்பட்ட கிரீடமும் அணிந்திருந்தார். அத்துடன் தனது கையில் வேலும், வேப்பமிலையும் வைத்திருந்தார்.
இவ்வாறு அலங்கரிக்கப்பட்ட நிலையில் பறவைக்காவடி எடுத்து வந்தவருக்குத் துர்க்காதேவியின் வேடம் நன்றாகவும் பொருந்தியிருந்தது. எனவே, தூக்குக் காவடி எடுத்து வந்தவர் ஒரு பெண்ணெனவே பலரும் நம்பினார்கள்.
குறித்த காவடி ஆலய வளாகத்திற்குள் பிரவேசித்தவுடனேயே பலரதும் பார்வையும் பறவைக்காவடியில் வந்த துர்க்காதேவி மீது திரும்பியிருந்தது.இந்த நிலையில் ஆலய முன்றலுக்குப் பறவைக்காவடி மெல்ல மெல்ல ஆடிவந்த போது ஒரு பெரும் கூட்டமே குறித்த காவடியைச் சுற்றிக் கூடி நின்றது.
ஆண் அடியவர்கள் மட்டுமல்ல பெண் அடியவர்கள் பலரும் தங்கள் கைத்தொலைபேசிகளில் குறித்த காட்சியைப் பதிவு செய்ததுடன் சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குறித்த காட்சியைக் கண்டு பரவசமடைந்தனர்.
0 comments:
Post a Comment