கிளிநொச்சி ஆசிரியரை குடையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர்-மாணவர்களின் பெயர் விபரங்களை வழங்க மறுத்த ஆசிரியர்..!
பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவரிடம் மீண்டும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) பயன்படுத்தி நீண்ட நேரம் விசாரணை செய்துள்ளனர்.
கடந்த வருடம் கிளிநொச்சி, கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின்போது தமிழர்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் வகையிலான இலங்கையின் வரைபடத்தை ஒத்த வடிவமைப்பு ஒன்றின் ஊடாக இல்லம் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்த விடயம் தொடர்பில், பாடசாலையின் ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பரந்தன் பிரிவினரால் மார்ச் மாதம் 3 ஆம் திகதி சுமார் 8 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலனிடம் இருந்து 2024 டிசம்பர் 11 ஆம் திகதி வாய்மூலமாகப் பெறப்பட்ட பதில் தொடர்பில் மேலும் விசாரிப்பதற்காக 2025 பெப்ரவரி 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பு 01 இல் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த விடயம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் டி.கனகராஜுக்கு அறிவிக்கப்பட்டதுடன், அவரது தலையீட்டினை அடுத்து, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள், பரந்தன் பிரிவில் வாக்குமூலம் அளிக்க ஆசிரியருக்கு வாய்ப்பளித்தனர்.
0 comments:
Post a Comment