சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் பிறந்தநாளையொட்டி, அவரை நேரில் சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து ஆசிபெற்றார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஜெயலலிதா உடன் போயஸ் கார்டன் வீட்டில் இருந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பின்பு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் அதிமுக-வில் இருந்து ஓரங்கட்டப்பட்டு ஈபிஎஸ்-ஒபிஎஸ் தலைமையில் அதிமுக அணிகள் ஒன்றிணைந்தன.
அதன்பின்னர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக் கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரன், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ளார். அக்கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா உள்ளார்.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா தனது 61-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு தனது குடும்பத்துடன் நேரில் சென்ற டிடிவி தினகரன், சசிகலாவை சந்தித்து வாழ்த்து கூறி ஆசி பெற்றார். சிறையிலுள்ள பிற கைதிகளுக்கும் அவர் இனிப்புகளை வழங்கி சசிகலாவின் பிறந்தநாளை கொண்டாடினார்.
0 comments:
Post a Comment