தேடலில் இணைந்தவர்கள் : சு. குணேஸ்வரன் (ஆசிரியர்), செல்லத்துரை சுதர்சன்(விரிவுரையாளர்), வே. பவதாரணன்(தனு வெளியீட்டகம்)
சித்தர்களின் சமாதிகளையும் கரும்பாவளிக் கேணிக்கு அருகில் மேலும் ஒரு ஆவுரஞ்சிக்கல்லையும் அண்மையில் நண்பர்கள் மூவர் தேடிக் கண்டுகொண்டோம். கடந்த 07.08.2018 அன்று சு. குணேஸ்வரன், செல்லத்துரை சுதர்சன், வே. பவதாரணன், ஆகிய மூவரும் வரலாற்றுத் தொன்மை மிகுந்த கரும்பாவளிப் பிரதேசத்திற்கு ஒரு தேடலுக்காகச் சென்றோம்.
பண்பாட்டுப் பாரம்பரியமும் வரலாற்றுத் தொன்மையும் மிகுந்த தொண்டைமானாறு பிரதேசத்தில் அண்மையில் கரும்பாவளி கேணி மற்றும் ஆவுரஞ்சிக் கல் தொடர்பான செய்திகளும் கரும்பாவளி என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்ட செய்தியும் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.
கடந்த வாரம் கரும்பாவளியில் குப்பைகளுக்கு மத்தியிலும் பற்றைகளுக்கு மத்தியிலும் அமிழ்ந்து போயிருக்கும் மேலும் பல வரலாற்றுத் தொன்மை வாய்ந்த எச்சங்கள் இருந்திருக்கின்றன என்ற மூத்தவர்களின் கதைகளைக் கேட்டபின்னர் அங்கு ஒரு தேடுதலைச் செய்வதற்காகத் திட்டமிட்டுச் சென்றோம்.
உடுப்பிட்டி வீராத்தை அமைத்த கேணிக்கு அருகில் மூன்று வரையான ஆவுரஞ்சிக் கற்கள் இருந்தனவெனினும் கடந்த 2012 ஆம் ஆண்டு பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் உள்ளிட்ட குழுவினர் ஒரு ஆவுரஞ்சிக் கல்லையே அடையாளப்படுத்தினர். அக்கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்டே அக்குளத்தை வீராத்தை அமைத்த செய்தியையும் எடுத்துக்காட்டினார். எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அந்த ஒரு ஆவுரஞ்சிக்கல்லை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு எடுத்துக்கொடுத்ததாக தொல்லியல் ஆய்வாளர் மணிமாறன் ‘கரும்பவாளி’ என்ற ஆவணப்படத்தில் குறிப்பிடுகிறார்.
கடந்த வாரம் கரும்பாவளியில் நாங்கள் தேடுதல் நடத்தியபோது மேலும் ஒரு ஆவுரஞ்சிக்கல்லை புன்னைமரங்கள், ஈச்சம்பற்றைகள், முட்செடிகள் மத்தியில் கண்டு பிரமித்துப் போனோம். (அக்கல் அழுத்தமாகக் காணப்படவில்லை. சிலவேளை சுமைதாங்கியாகவும் இருந்திருக்கக்கூடும்.) கரும்பாவளிக்குளத்திற்கு வடமேற்கு எல்லையில் 15 அடி தூரமளவில் ஒரு கல் காணப்பட்டது. பற்றைகளை வெட்டி அக்கல்லை நாங்கள் இனங்கண்டு கொண்டோம். இக்கல்லும் வீராத்தை அமைத்ததாக இருக்கலாம்.
தொடர்ந்து கரும்பாவளி இந்து மயானத்தின் அருகில் தொண்டைமானாறு கடனீரேரிக்கு அருகில் பற்றைகள் சூழ்ந்திருக்கும் இடத்தில் சமாதிகள் இருந்த தகவலை ஏற்கனவே அறிந்திருந்தோம். அங்கு வல்வை நகரசபை தான் சேகரிக்கும் குப்பைகளைக் கொட்டி பெரிய குப்பைமேடு ஒன்றை அமைத்திருக்கிறது. அக்குப்பைமேட்டுக்கு தெற்குப் புறத்தில் மிக இலகுவாக கண்ணுக்குத் தென்படும் வகையில் நான்கு சமாதிகளைக் கொண்ட கட்டடிடங்களைக் கண்டு கொண்டோம்.
ஆனால் மேற்குப் புறத்தில் பற்றைகள் மூடியநிலையில் பல சமாதிகள் இருப்பதை ஊகித்து பற்றைகளை வெட்டித்துப்பரவாக்கிச் சென்றபோது பத்துக்கும் மேற்பட்ட சமாதிகள் இருப்பது எமக்குத் தெரியவந்தது. இரண்டு அடுக்கு சதுர வடிவமும் மேலே சிவலிங்க வடிவமும் கொண்ட மூன்று சமாதிகளை பற்றைகளை வெட்டித் துப்பரவு செய்து கண்டுகொண்டோம். மேலும் உள்ளே பல சமாதிகள் இருப்பதும் அதற்குள் சற்று உயரமாக ஆறடி உயரம் வரையான கட்டடிடம் ஒன்றும் இருப்பது கண்டுகொண்டோம்.
இவை அனைத்தும் குப்பைமேட்டிலிருந்து 5- 10 அடி வரையான தூரத்திலும் கரும்பாவளிக் கேணியில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளன.
செல்வச்சந்நிதி ஆலயத்தில் சித்தர்களாகவும் அருளாளர்களாகவும் வாழ்ந்து மறைந்தவர்களையும் தற்போதும் சந்நிதியில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற சித்தர்கள் அருளார்கள் என 30ற்கும் மேற்பட்டவர்களை “சந்நிதியில் சித்தர்கள்” என்ற நூலில் ந. அரியரட்ணம் அவர்கள் பதிவு செய்துள்ளார்.
அவர்களில் பலர் தொண்டைமானாற்றின் தெற்குப் புறத்தில் சமாதியடைந்த செய்திகள் அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களில் ஐராவசு முனிவரே சந்நிதியில் சமாதியடைந்த முதற்சித்தராவார். அவரைத் தொடர்ந்து மருதர் கதிர்காமர், இடைக்காட்டுச் சித்தர் முதலானவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களின் வரிசையில் தொண்டைமானாற்றில் சமாதியடைந்த வைரமுத்துச் சுவாமிகள், பீற்றர் யேச்சிம் ஸ்கொன் என்ற இயற்பெயர் கொண்ட ஜேர்மன் சுவாமிகள், முருகேசு சுவாமிகள், செல்லத்துரை சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். ஆனால் அந்தச் சமாதிகளை மூடியிருக்கும் முழுப்பற்றைகளையும் துப்பரவுசெய்யும்போது மேலும் பல தகவல்கள் கிடைக்கக்கூடும் என நம்பலாம். இங்கே யார் யாரின் சமாதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அமைத்தவர்கள் யாவர் என்ற விபரங்கள் எவையும் கிடைக்கவில்லை.
எமது பண்பாட்டின் எச்சங்களாகவும் மக்களின் வாழ்வுடன் கூடிய தொல்பொருட்சின்னங்களும் இருக்கக்கூடிய கரும்பாவளியை ஆறறிவு படைத்த மனிதர்கள் எதற்காக குப்பைகொட்டும் இடமாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது.
இதற்கூடாக நாங்கள் செய்யவேண்டிய முதற்பணி வல்வை நகரசபையினர் கரும்பாவளியில் இருந்து குப்பைகொட்டும் நடவடிக்கையை முதலில் நிறுத்தவேண்டியதும் அங்கு கொட்டிய குப்பைகளை வேறு இடத்திற்கு பொருத்தமான முறையில் மாற்றவேண்டியதுமாகும்.
அடுத்தபணி கரும்பாவளிப் பிரதேசம் தொல்பொருள் சின்னங்கள் கொண்ட பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டு பேணிப்பாதுகாக்கவேண்டியதுமாகும்.
0 comments:
Post a Comment