தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், ஜப்பானில் நடைபெற உள்ள சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
தேனி மாவட்டம் அருகே பூதிப்புரம் மெயின் பஜாரில் வசிப்பவர் ஜோதிலட்சுமி. இவரது மகள் ராகவி(16), போடியில் உள்ள பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். குத்துச் சண்டையின் மீது ஆர்வம் கொண்ட ராகவி, 8ஆம் வகுப்பில் இருந்தே அதற்கான பயிற்சியை எடுத்து வந்துள்ளார்.
அதன் பிறகு பல போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்று சாதனை படைத்து வருகிறார். மாநில அளவிலான போட்டிகளில் 3 முறை தங்கம் வென்ற ராகவி, கடந்த 2016, 2017ஆம் ஆண்டுகளில் அசாம், கவுகாத்தில் நடந்த அகில இந்திய மகளிர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.
இந்நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு ராகவி தெரிவாகியுள்ளார். இவர் ஜப்பான் செல்வதற்கான விமான கட்டணத்தின் ஒரு பகுதியை, பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆனால், முழு செலவையும் ஏற்க முடியாத நிலையில், போட்டியில் எப்படி கலந்துகொள்வது என்ற கவலையில் மாணவி உள்ளார்.
இதுதொடர்பாக ராகவி கூறுகையில், ‘எனது தாய் ஜோதிலட்சுமி, அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவர் மிகவும் கஷ்டப்பட்டு என்னையும், என் சகோதரனையும் படிக்க வைத்து வருகிறார்.
அவரது வருமானத்தில் வாழ்க்கை நடத்துவதே மிகவும் சிரமம். இருந்தாலும் எனது ஆர்வத்திற்கு அவர் தடை போடவில்லை. தொடர்ந்து ஊக்கம் கொடுத்துக் கொண்டே இருந்தார். நான் சோர்ந்தாலும் அவர் விடுவதில்லை.
பயிற்சியாளர்களும் சலுகை கட்டணத்தில் பயிற்சியளித்தனர். தேசிய அளவில் தங்கம் வென்று சர்வதேச போட்டிக்கு தேர்வானாலும், ஜப்பான் சென்று வர போதிய பொருளாதார வசதியில்லை.
பள்ளி சார்பில் ஜப்பான் செல்ல விமான கட்டண செலவை ஏற்றுக்கொள்வதாக கூறினாலும், மற்ற செலவுகளுக்கு கூட என்னிடம் வசதியில்லை. என்ன செய்வதேன்று தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment