பெரும் பூனைகள் 16
சீனப் பகுதியில் சுதந்திரமாக காட்டில் வாழும் புலிகளை 1976 க்குப் பின் பார்த்ததாக எந்தவிதமான பதிவும் இல்லை. அதற்கு முன் ஏராளமான அளவில் இருந்த புலிகளை கொஞ்சம் கொஞ்சமாக பாரம்பரிய மருத்துவம் என்கிற பெயரில் தின்றே அழித்துவிட்டார்கள்....
சட்டவிரோதமான புலி மருத்துவ வியாபாரம் மெதுவாக கீழ்நோக்கிச் சென்றது. மூலப் பொருள் இல்லாத நிலையும், பற்றாக்குறையும் பணங்கொட்டக்கூடிய மிகப் பெரிய வாய்பை உருவாக்கியது. அதனை இயக்கும் திரைமறைவு மாஃபியா கும்பல் சும்மா இருக்குமா ? பார்த்தார்கள் 1980 லிருந்து நம்ம ஊரில் கறிக்கோழிகளை வளர்ப்பதைப் போலவே புலிகளை செயற்கையாக வளர்க்கத் துவங்கினார்கள்...
அந்தப் புலிகள் நம்ம ஊர் பிராய்லர் கோழிகளைப் போலவே மரபணு ரீதியாக மாற்றம் உருவாகி, வெளியே விட்டால் தன்னிச்சையாக உயிர்வாழ முடியாத நிலைக்கு போய்விட்டது. சுதந்திரமாக ஓடியாடித் திரியும் புலிகள் நெருக்கமான கூண்டில் அடைத்து வளர்ப்பதால் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகுந்த பாதிப்புக்குள்ளான வகையிலேயே இருக்கின்றன...
உலகளவில் வனத்தில் வாழ்கிற புலிகளின் எண்ணிக்கை இப்போதைக்கு வெறும் நான்காயிரத்திற்கு கீழாகவே இருக்கிறது. ஆனால் இப்படி சீனாவைச் சுற்றி பண்ணைகளில் வளர்க்கப் படுகிற புலிகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் ஆறாயிரம் வரை இருக்கலாம் எனச் சொல்கிறார்கள்....
சரி, அது நம்ம ஊரு பண்ணைக் கறிக்கோழிகளைப் போல, அவர்களால் கிட்டத்தட்ட உற்பத்தி செய்யப் படுகிறது. அதுபற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. இதுவெல்லாம் விசயமில்லை. இப்போதைக்கு, விரைப்பு விரும்பி வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு கேனத்தனமான விழிப்புணர்வு வந்துவிட்டதே பெரிய ஆபத்து....
அது என்னவென்றால், நம்ம ஊரில் இப்போதைக்கு, பிராய்லர் கோழி சாப்பிட்டால் கோழி சாப்பிட்ட திருப்தியில்லை. இயற்கையாக சுற்றித் திரிந்து புழு, பூச்சிகள் மற்றும் கரையான்கள், இலைகள் தானியங்களைத் தின்னும் நாட்டுக் கோழிகளை அடித்து மண்சட்டியில் சமைத்து தின்றால்தான் கோழி சாப்பிட்ட முழுப் பலன் கிடைக்கும் என்பதைப்போல, அவர்களும் "புலிமாதிரி" உருவாக்குகிற புலிகள் மீதான ஆர்வம் குறைந்து விட்டது. காடுகளில் சுதந்திரமாக சுற்றித் திரிந்து வேட்டையாடி வாழ்கிற, புலிகளின் உடல் பாகங்களால் உருவாக்கப் படுகிற மருந்துகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே மருத்துவத்தின் முழுப்பலன் கிடைக்கும். என்கிற கூமுட்டைத் தனமான அறிவு அவர்களுக்கு வந்ததே பெரிய ஆபத்து....
புலிகள் இல்லாத ஊரில் புலிகள் எங்கிருந்து கிடைக்கும். அவர்கள் இலக்கு நம்மைப்போன்ற நாடுகளில் உள்ள நான்காயிரத்திற்கும் குறைவான புலிகளைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ? இந்த டிமாண்ட் இருப்பதால் தான் இங்கிருந்து கடத்தக் கூடிய புலிகளின் விலை கோடிகளைத் தாண்டுகிறது....
அதற்கென்றே கடத்தல் வியாபார வலைப்பின்னல் பெரிய அளவில் செயல் படுகிறது. அவ்வப்போது இதில் கீழ்நிலையில் உள்ள சில ஆயிரங்களுக்காக இயங்குபவர்கள் அகப்படுகிறார்கள். தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையே தொடர்கிறது...
இந்த வியாபாரக் கும்பல் சீனா மட்டுமல்லாமல் கிழக்காசிய நாடுகள் பலவற்றில் இயங்குகிறது. அவர்களை மட்டுமே குற்றம் சொல்வதும் நியாயமில்லை. சீனாவில் பாரம்பரிய மருத்துவ நம்பிக்கையில் இதைப் பயன்படுத்துவோர் வெறும் பத்து சதவிகித அளவிலானவர்கள்தான். அவர்கள் போடும் காசிற்கு, புலியை பிடித்துக் கொடுக்கும் நம்ம மனிதர்களே முதல் குற்றவாளிகள் என்பதையும் நாம் ஒத்துக் கொள்ளவேண்டும்....
இங்கு கடுமையான கண்காணிப்பு, பிடிபட்டால் தண்டனை, சர்வதேச சட்டச் சிக்கல்கள் என நெருக்கடியான சூழல் இருக்கிறபோது. இதன் உடல்பாகங்களுக்கும் இப்போது போலிகளை கண்டு பிடித்து விட்டார்கள். அது என்னவென்று அடுத்த பதிவில் பார்ப்போம்...
தேடலுடன்,
Ramamurthi Ram
(இந்த தொடர்பற்றி மனந்திறந்த கருத்துகளைக் கூறுங்கள். முடித்துவிடலாம் என்கிற போது, சில கேள்விகளால், நீண்டு கொண்டே செல்கிறது-இது பற்றிய உங்களது கருத்துகளையும் எதிர் பார்க்கிறேன்)
0 comments:
Post a Comment