பாஜவின் மாபெரும் பிதாமகரும், 3 முறை பிரதமர் பதவியை வகித்தவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 94. நீண்ட காலமாக உடல் நலம் குன்றிய நிலையில் வீட்டிலும், மருத்துவமனையிலுமாக சிகிச்சை வந்தார் வாஜ்பாய் இந்த நிலையில் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் உயிர் பிரிந்தது.
1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி குவாலியரில் பிறந்த வாஜ்பாய், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 1942-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். தீவிர இந்துத்துவா அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர், 1957-ம் ஆண்டு பல்ராம்பூர் தொகுதியில் இருந்து இன்றைய பா.ஜ.க.வுக்கு முன்னோடி அமைப்பான பாரதிய ஜன சங் எம்.பி.யாக முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 9 முறை லோக்சபா, 2 முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்து காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருந்தார்.
1975-ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது, அதனை எதிர்த்து போராடி, கைதாகி சிறை சென்ற அரசியல் தலைவர்களில் வாஜ்பாயும் ஒருவர் ஆவார்.
1970களில் பாரதிய ஜன சங், ஜன சங்கமானது. பின்னர் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா கட்சி உதயமானது ஜனசங்கமும் அதில் சங்கமமானது. அப்போது 1970களின் இறுதியில் அமைக்கப்பட்ட மொரார்ஜி தேசாய் அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார் வாஜ்பாய்.
பின்னர் ஜனதா கட்சி உடைய பாரதிய ஜனதா கட்சி உதயமானது. அதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார் வாஜ்பாய். காங்கிரஸுக்கு மாற்று சக்தியாக பாஜக வளரத் தொடங்கியது. இந்தியாவின் 10-வது பிரதமராக 1996-ம் ஆண்டு பதவி ஏற்றார். எனினும், நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனதை தொடர்ந்து 13 நாட்களிலேயே அவர் பதவி விலக நேர்ந்தது.
1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி, இரண்டாவது முறை பிரதமராக பதவி ஏற்றார். 1999-ல் மீண்டும் பிரதமராக பதவியேற்ற வாஜ்பாய், பொக்ரான் அணு குண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார்.
இந்த வெற்றிகளின் மூலம் இந்தியாவின் ஆற்றலையும், பெருமையயும் உலக நாடுகள் அறியச் செய்தார். பாகிஸ்தானுடனான நல்லுறவை ஏற்படுத்த பேருந்து போக்குவரத்து, அமைதி பேச்சு வார்த்தை என பல்வேறு நடவடிக்கைகளை வாஜ்பாய் எடுத்தார்.
ஆனாலும், காந்தகார் விமான கடத்தல், தீவிரவாதிகள் விடுதலை, நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல், குஜராத் இனக்கலவரம் உள்ளிட்டவை வாஜ்பாய் அரசுக்கு கரும்புள்ளியாக அமைந்தன. 2004-ம் ஆண்டு பிரதமராக தனது 5 ஆண்டு கால பதவியை நிறைவு செய்த வாஜ்பாய், 2005-ம் ஆண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
கடந்த 2002-ல் குஜராத்தில் கோத்ரா படுகொலைகள் நடைபெற்றபோது மோடி அங்கே முதல்வராக இருந்தார். அப்போது, யாராக இருந்தாலும் ராஜதர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியது பெரும் பாராட்டைப் பெற்றது. நாட்டிலேயே மிகவும் உயரியதான பாரத ரத்னா விருது வாஜ்பாய்க்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.
மரபுகளை புறந்தள்ளி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லம் தேடிச்சென்று சிறப்புக்குரிய இந்த விருதினை அவருக்கு வழங்கினார். அனைத்துக் கட்சியினராலும் பாராட்டப்பட்ட முக்கியமான பாஜக தலைவர் வாஜ்பாய். சமீபத்தில்தான் நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதியை தேசம் இழந்தது. இப்போது இன்னொரு முக்கிய அரசியல் பிதாமகரான வாஜ்பாயை நாடு இழந்துள்ளது.
வாஜ்பாய் பற்றி அறிய வேண்டிய 7 முக்கிய தகவல்கள்!
இந்தியா கண்ட சிறந்த பிரதமர்களில் ஒருவர் அடல் பிகாரி வாஜ்பாய். கடுமை, கருணை, நிர்வாகத்திறன் போன்றவை வாஜ்பாய் டிரேட் மார்க். வாஜ்பாய் குறித்து இன்றைய இளைஞர்கள் அறிந்திராத பல சுவாரசிய தகவல்கள் உண்டு. அதில் அறிய வேண்டிய ஏழு விஷயங்கள் குறித்த ஒரு பார்வைதான் இந்த தகவல்:
ஆசிரியர் மகன்
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி ஆசிரியரின் மகனாக பிறந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு பெற்றதன் மூலம் அரசியலில் நுழைந்தார் வாஜ்பாய். குவாலியர் நகரில் உள்ள விக்டோரியா கல்லூரியில் அரசியல் சயின்ஸ் பட்டப் படிப்பை முடித்தார் வாஜ்பாய்.
13 நாட்கள் நீடித்த அரசு
1996ம் ஆண்டு மே 16ஆம் தேதி முதல் முறையாக வாஜ்பாய் பிரதமராக பதவி ஏற்றார். அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்திருந்தார். இந்த அரசு 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. கூட்டணி கட்சிகள் ஆதரவு விலகியதை அடுத்து ஆட்சி கலைந்தது.
ஒரு ஓட்டில் தோல்வி
1999ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. மத்திய அரசு ஒன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழ்க்கப்பட்டது அதுதான் முதல் முறை. இந்த ஆட்சி 13 மாதங்கள் நீடித்திருந்தது.
அணுகுண்டு சோதனை
இந்த ஆட்சிக் காலத்தின் போது தான் அதிரடி நடவடிக்கைகள் பலவற்றை கொண்டார் வாஜ்பாய் 1998-ம் ஆண்டு மே 11-ம் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது. நாடு நடத்திய இரண்டாவது அணுகுண்டு சோதனை அதுவாகும். அணுகுண்டு சோதனைக்கு பிறகு 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லாகூருக்கு பஸ் மூலம் பயணித்து பாகிஸ்தானுடன் உறவை விரும்பியவர் வாஜ்பாய். ஆனால் இதன் பிறகு மூன்று மாதத்திலேயே அதாவது, மே மாதம் பாகிஸ்தான் ராணுவம், கார்கில் பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது. பதிலடி கொடுத்து, இந்தியா வெற்றிக் கொடி நாட்டியது.
நட்பு விரும்பி
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1999 ஆம் ஆண்டு 303 லோக்சபா தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அக்டோபர் 16ம் தேதி வாஜ்பாய் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். கார்கில் போரின் போது பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷரப் அப்போது பாகிஸ்தான் அதிபராக இருந்தார். இருப்பினும் ஆக்ராவில் இரு நாட்டு நல்லுறவை மேம்படுத்தும் வகையில் 2001 ஆம் ஆண்டில் உச்சி மாநாடு ஏற்பாடு செய்தார் வாஜ்பாய். அதற்கு முஷ்ரப்புக்கு சிறப்பை அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும் அந்த உச்சி மாநாடு தோல்வியில் முடிவடைந்தது.
மோடியை எச்சரித்தார்
நரேந்திர மோடிக்கும் வாஜ்பாய்க்கும் நடுவே பெரிய நல்லுறவு இருந்ததாகக் கூற முடியாது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மத கலவரம் ஏற்பட்டது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த, நரேந்திர மோடியைப் பார்த்து ராஜ தர்மத்துடன் நடந்து கொள்ளுமாறு எச்சரிக்கை செய்தார் வாஜ்பாய். கலவரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு மோடிக்கு நெருக்கடி கொடுத்தார் வாஜ்பாய். ஆனால் அப்போது மோடிக்கு பக்கபலமாக இருந்து பாதுகாத்தவர் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி.
மதச்சார்பற்ற தலைவர்
இந்துத்துவாவை வலியுறுத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஈர்க்கபட்டவர்தான் என்றபோதிலும், மதசார்பற்ற தலைவராகத்தான் விளங்கினார் வாஜ்பாய். 1991 ஆம் ஆண்டு அத்வானி நடத்திய ரத யாத்திரையில், வாஜ்பாய்க்கு ஒப்புதல் இல்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது கூட வாஜ்பாய் அயோத்திக்கு செல்லவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருக்க கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தார் வாஜ்பாய்.
0 comments:
Post a Comment