கனமழையால் முடங்கியுள்ள கேரளாவில், அரசியல் பிரமுகர்கள் பலர் மக்களோடு மக்களாகக் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த இரண்டு வாரங்களாகச் சமூக வலைதளங்களில் கேரளாவை பற்றிய செய்திகள்தான் அதிகம் பகிரப்படுகிறது.
நீரில் மிதக்கும் கட்டடங்கள், சாலைகளில் விரிசல், நிலச்சரிவுகள் எனக் கேரள நெட்டிசன்கள் பகிரும் வீடியோக்கள் மனதைப் பதைபதைக்க வைக்கிறது. ஆனாலும், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மக்களை மிகுந்த அக்கறையுடன் நடத்தும் காட்சிகள் ஆறுதல் அளிக்கின்றன.
குறிப்பாக, சில கேரள அமைச்சர்கள் களத்தில் இறங்கி மீட்புப் பணிகள் மேற்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முதல்வர் பினராயி விஜயன் ஒவ்வொரு மாவட்டத்திலும் கனமழை பாதிப்புகளைக் கண்காணிக்கவும் நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் ஓர் அமைச்சரை நியமித்துள்ளார்.
அதாவது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வோர் அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சருக்கு உதவியாகச் செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரை தொடர்புகொண்டு உதவிக் கோரலாம். அமைச்சர்கள் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மாவட்ட ஆட்சியர்களுக்கு உதவ ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் மக்களை சந்திக்கும்போது பாதுகாப்பு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் என்று புடைசூழ போவதுதான் வழக்கம். ஆனால், கேரள அமைச்சர்கள் சற்று வித்தியாசமானவர்கள் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார்கள்.
நிவாரண பணிகளுக்காகத் தனித்தனியாக மக்களைச் சென்று சந்தித்து, வெள்ளப் பாதிப்புகளையும் பார்வையிட்டுள்ளனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஜி.சுதாகரன், நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் உள்ளிட்டோர் இரண்டு மூன்று பேருடன் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்ட புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன.
தாமஸ் ஐசக் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டபோது குளிரில் நடுங்கிய பச்சிளம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கண் கலங்கியுள்ளார். இந்தக் காட்சியை அங்கிருந்த சிலர் புகைப்படம் எடுத்து பகிர்ந்தனர். நெட்டிசன்கள் அவரை மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
0 comments:
Post a Comment