திமுகவும், விடுதலைப் புலிகளும் ஒருவரையொருவர் முழுமையாக ஆதரிக்கவும் இல்லை, அதேநேரம் ஒருவரையொருவர் எதிர்க்கவுமில்லை என பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அவர் தொடர்பில் பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகிய இரு தரப்பிற்கும் இடையிலான உறவு தொடர்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் இந்திய ஊடகமொன்றிட்கு வழங்கிய நேர்காணல் பகிரப்பட்டு வருகிறது.
அந்த நேர்காணலில்,
கேள்வி: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அதிகளவில் விமர்சனங்களை சுமக்க வேண்டிய விவகாரமாக ஈழத்தமிழர் பிரச்சினை இருந்தது. கருணாநிதி ஏதோவொரு வகையில் தவறிழைத்துவிட்டார் என நீங்கள் நினைக்கின்றீர்களா?
பதில்: கருணாநிதி தவறிழைத்து விட்டார் என்று நான் நினைத்திருந்தால் தொடர்ந்து அவருடன் இருந்திருக்க மாட்டேன். சரியாகச் சொன்னால் ஐயாவின் மீது பல பழிகள் அந்த ஈழ சிக்கலில் சுமத்தப்பட்டன.
ஐயாவோடு இருந்ததற்காக என்மீதும் சுமத்தப்பட்டது. ஈழத் தமிழர்களே என்மீது கோவம் கொண்ட நேரமெல்லாம் உள்ளன. ஆனால் பல உண்மைகள் சொல்லப்படவில்லை.
எவ்வளவு தூரம் அவர் அதில் ஈடுபாட்டுடன் இருந்தார் என்பதை நான் அறிவேன். உண்மையான நிகழ்வு என்னவென்பதை நான் மக்களுக்காகவாவது சொல்ல வேண்டும்.
2009 ஜனவரி தொடக்கத்தில் கிளிநொச்சி விழுந்து விட்டது. உடனே அதனை எதிர்த்து ஐக்கிய நாடுகள் அவையில் குரல் கொடுத்த நாடு மெக்சிகோ.
அதற்கு பிறகு ஸ்வீடன் தங்களின் முன்னால் பிரதமர் கால்ட் பீட் என்பவரை இலங்கைக்கு அனுப்பி சமாதானம் செய்யச் சொன்னது. என்ன கொடுமை பாருங்கள் ஒரு முன்னால் பிரதமருக்கு இலங்கை அரசு வீசா கொடுக்க மறுத்துவிட்டது.
இது நடந்து 2009 பெப்ரவரியில். இதன்பின் மார்ச் மாதம் இங்கிலாந்து, பிரான்ஸ் என்கின்ற இரண்டு வல்லரசு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இலங்கைக்கு போகின்றார்கள்.
ஒருவருடைய பெயர் டேவிட் மிலிபாண்ட், பிரான்ஸ் நாட்டு அமைச்சரின் பெயர் பெண்ணாட் கூச்சனர். ஆனால் அவர்களுக்கே அந்த அரசு இணங்கவில்லை.
இதற்கு சர்வதேச அளவில் பல பின்புலங்கள் சிங்கள அரசிற்கு இருந்ததே காரணம். நான் என்ன கேட்கின்றேன் என்றால் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வல்லரசுகளால் சாதிக்க முடியாததை இந்தியாவினுடைய ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் சாதிக்க முடியும் என்கின்ற கருத்தை இவர்கள் பரப்பினார்களே. அது எவ்வளவு உண்மைக்கு மாறானது?
1987 ஜுலை 27இல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகின்றது. அதற்கு பின்னர் எம்.ஜி.ஆர் அதனை எதிர்க்கவில்லை. ஜுலை 29இல் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்தவர் கலைஞர் கருணாநிதி தான்.
அவர் வெளிப்படையாகச் சொன்னார். கந்தனிடமிருந்து, கருப்பன் நிலத்தை வாங்குகிறான் என்றால் இரண்டு பேரும் தான் கையெழுத்திட வேண்டும். வேண்டுமானால் சாட்சியாக இருக்கின்ற கடம்பன் கையெழுத்து போடலாம்.
ஆனால் விற்றவனையும், வாங்கியவனையும் விட்டு விட்டு சாட்சியினுடைய கையெழுத்தை மட்டும் வைத்துக் கொண்டு அது எப்படி பத்திரமாகும். அந்த ஒப்பந்தமே செல்லாது என சொன்னார்.
மிக கடுமையாக அதனை எதிர்த்தார். எங்களின் தமிழ் மக்களை கொன்றுவிட்டு வருகின்ற இராணுவத்தை வரவேற்க போகமாட்டேன் எனவும் கூறினார்.
மிக குறிப்பாக சில உதவிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பு கேட்ட போது, நான் வெளிப்படையாக ஒரு பெயரை மட்டும் சொல்கின்றேன். அண்ணன் குலத்தூர் மணி என்னிடத்தில் சொல்லி இதை (உதவியை நான் விளக்க முடியாது) செய்ய வேண்டும் என கேட்டார்.
முதலமைச்சரை உடனே நாங்கள் பார்க்க முடியாது, நீங்கள் பார்க்க வேண்டும் எனவும் கூறினார். அந்த உதவி வேண்டும் என்று கேட்டவுடனேயே இன்று மாலைக்குள் நடந்துவிடும் போ என்று சொன்னார் கருணாநிதி. அது போலவே நடந்தது.
அதற்கு பிறகு விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து நடேசனே தொலைபேசியூடாக அழைப்பினை ஏற்படுத்தி, “அண்ணன் மணி சொன்னார். முதலமைச்சர் இவ்வளவு விரைவில் உதவியை செய்வார் என நாங்கள் கூட நினைக்கவில்லை” என தெரிவித்தார்.
மத்திய அரசிடம் கூறி கருணாநிதி அந்த உதவியை செய்தார். அவரால் முடிந்தவற்றை கண்டிப்பாக செய்தார். ஆனால் இதையெல்லாம் எங்களால் அப்போது சொல்ல முடியவில்லை.
ஏனென்றால் ஏற்கனவே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்த அரசு என்று சொல்லித்தான் 91இல் ஆட்சி கலைக்கப்பட்டது.
அதற்காக ஒரு அணியினர் காத்திருந்தார்கள், இப்படி சில செய்திகள் வர வேண்டுமென்றும். எனவே நானே செய்த உதவியை வெளியில் சொல்லி அரசிற்கு ஒரு கேடு வந்துவிடக்கூடாது என்பதால் அன்றும் சொல்லவில்லை, இன்றும் சொல்லவில்லை.
ஆனால் ஒரு உண்மை அதில் இருக்கிறது என்பதற்காக சாட்சிக்கு ஒரு பெயரை நான் சொல்லி வைத்தேன்.
கேள்வி: புலிகளுடன் உங்களுக்கும் பல வகைகளில் நட்பு இருந்திருக்கிறது. ஆனால் அந்த தரப்பில், தமக்கு உதவவில்லை, தமது பக்கம் நிற்கவில்லை என கவலையோடு கருணாநிதியை பார்த்தார்கள் என்ற ஒரு விடயம் இருக்கின்றது. அது உண்மையா?
பதில்: அதாவது திமுகவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இருந்த உறவை நான் இப்படித்தான் பார்க்கிறேன். இரண்டு பேரும் ஒருவரையொருவர் முழுமையாக ஆதரிக்கவும் இல்லை. ஒருவரையொருவர் எதிர்க்கவுமில்லை.
இந்த உண்மையை மறைக்கிறார்கள். புலிகள் எங்காவது திமுகழகத்தை தாக்கி அறிக்கை வெளியிட்டதுண்டா? எங்காவது திமுகழகம், விடுதலைப் புலிகளை தாக்கி அறிக்கை விட்டிருக்கின்றார்களா?
ஒருவருக்கொருவர் நேரடியாக ஆதரிக்கவுமில்லை. ஆதரிக்கவும் முடியாது. அவர்களின் தனி நாட்டு கோரிக்கையை இங்கே இருக்கின்ற அரசு ஆதரிக்க முடியாது.
நேரடியாக ஆதரிக்கவுமில்லை, நேரடியாக எதிர்க்கவுமில்லை. மறைமுகமாக செய்யக் கூடிய உதவிகளை ஒருவருக்கொருவர் செய்து கொண்டார்கள். அதுவும் இங்கிருந்து தான் அங்கு உதவ முடியும்.
கேள்வி: அவ்வாறு கோரப்பட்ட உதவிகளில் முக்கியமான உதவியொன்று மறுக்கப்பட்டதாக கருணாநிதி மீது குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய தாயார் பார்வதியம்மாவிற்கு தேவைப்பட்ட மருத்துவ உதவி இந்தியாவின் தமிழ் நாட்டில் கிடைக்காமல் விமானத்தில் அவர் திரும்பி போன சம்பவம். அதில் உங்கள் பெயர் கூட பேசப்படுவதுண்டு. என்ன நடந்தது? எதனால் உதவ முடியவில்லை?
பதில்: இரவு ஒரு மணிக்கு தோழர் தியாகுதான் தொலைபேசியினூடாக அந்த செய்தியை என்னிடத்தில் சொன்னார். நான் உடனடியாக “தலைவரிடத்தில் நள்ளிரவு என்பதால் சொல்ல முடியாது. எனவே காலையில் சொல்லி விடுகின்றேன்” என தெரிவித்தேன்.
காலை ஆறு மணிக்கு கோபாலபுரத்திலுள்ள தலைவரின் வீட்டிற்கு சென்றேன். தலைவரிடம் போய் விடயத்தை சொன்னேன். இதன்போது கருணாநிதி சொன்ன விடயத்தை நான் பதிவிடுகின்றேன் “வருகின்ற செய்தியை அரசிற்கு புலிகள் தரப்பினர் தெரிவிக்கவேயில்லை”.
சட்டமன்றத்திலேயே தலைவர் கருணாநிதி அறிவித்தார். பார்வதியம்மா நடந்து போன நிகழ்வு என்பது எங்களுக்கு சொல்லப்படாமலேயே மத்திய அரசிற்கு நேரடியாக சொல்லி நடந்துவிட்ட நிகழ்வு.
மறுபடியும் அவர் வந்தால் அவருக்கான மருத்துவச் செலவு பொறுப்புகள் அனைத்தையும் நாங்கள் கவனித்துக் கொள்கின்றோம்.
தமிழக அரசு அடிப்படையில் முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு தானே முதலில் சொல்லியிருக்க வேண்டும். கலைஞருக்கு முறைப்படி அந்த செய்தி சொல்லப்படவேயில்லை என பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment