சென்னை வளசரவாக்கத்தில் கழிவு நீர்க் கால்வாயில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்றை ஒரு பெண்மணி மீட்டெடுத்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்த சில நாட்கள் கூட கடந்திடாத நிலையில், ஒரு பச்சிளம் சிசுவை யாரோ கழிவு நீர்க் கால்வாயின் அடியில் ஒரு துணியை சொரித்து வைப்பது போல், வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அப்பகுதியில் இருந்த கீதா என்கிற பெண்மணியும் அவரது மகளும் குழந்தையின் அழுகுரல் கேட்டு தேடியிருக்கின்றனர்.
பிறகு அழுகுரலானது கழிவுநீர்க் கால்வாயின் அடியில் இருந்து வருவதைக் கண்டறிந்த அந்த தாயும் மகளும், அதன் அருகே சென்று பார்த்துவிட்டு அதிர்ச்சியாகியுள்ளனர். கீதாவோ, படுத்துக்கொண்டபடி, கழிவுநீர்க் கால்வாயின் இடுக்கில் பார்த்து குழந்தை இருப்பதை உறுதி செய்து, அதிர்ச்சியுடன் அந்த குழந்தையை கையைவிட்டு வெளியே எடுத்துள்ளார். இதனை வீடியோவும் எடுத்துள்ளனர்.
நீண்ட நேரம் மூச்சுத் திணறிய நிலையிலும், உடலின் மேல் கழிவுகள் ஏறியும் இருந்த குழந்தையை உடனடியாக கழுவி, அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மீட்டுள்ளனர். மேலும் சுதந்திர தினத்தன்று பாரத மாதாவே கொடுத்த அந்த குழந்தை என நினைக்கும் கீதா, அந்த குழந்தைக்கு ‘சுதந்திரம்’ என பெயரிட்டு மகிழ்ச்சியடைந்தார்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, கீதாவின் இந்த நன்மதிப்பான செயலுக்கு சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கீதாவை நேரில் அழைத்துப் பாராட்டளித்துள்ளார்.
பச்சிளம் குழந்தையினை இப்படி மனிதாபிமானம் அற்று கழிவுநீர்க்குழாயடியில் வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியினரின் நெஞ்சத்தை உலுக்கியுள்ளது.
0 comments:
Post a Comment