வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 70 ஆயிரம் ட்ரமடோல் ரக போதை மாத்திரைகள் மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான மாகந்துரே மதுஷ் என்பவர் உள்ளார் என சந்தேகம் எழுந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் காவல்துறை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
டுபாயிலிருந்து தமிழ்நாடு ஊடாக குறித்த போதை மாத்திரைகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், முகவர்களாக செயற்பட்டு குறித்த போதை மாத்திரைகளை மகிழுந்தில் கடத்திச் சென்ற தம்பதியினர் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சந்தேகத்துக்குரியவர்களான 18 வயதுடைய பெண்ணும் மற்றும் 24 வயதுடைய ஆணும் மாத்தளை மற்றும் களனி பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
குறித்த போதை மாத்திரைகள் இந்தியாவிலிருந்து கடல்வழியாக கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அவற்றை கொழும்பிற்கு கடத்திச் சென்ற போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து விற்பனை செய்வதற்காகவே இந்த போதை மாத்திரைகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment