சிறைச்சாலை எனக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது என சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் வைத்தியசர் அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ் . தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தினை இன்றைய தினம் வியாழக்கிழமை செலுத்து வேட்புமனுவை பெற்று சென்ற போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில், யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்றைய தினம் கட்டுப்பணத்தினை செலுத்தி வேட்பு மனுவை வாங்கியுள்ளேன். நாளைய தினமே வேட்பு மனுவை கையளிக்க இறுதி நாள் என்பதால் அதற்கு முன்பதாக கையளித்து விடுவேன்.
தமிழ் தேசிய அரசியலுக்குள் துரோகிகளை அறிமுகப்படுத்தும் வரலாற்று தவறினை நான் செய்ய மாட்டேன். அதனால் எமது வேட்பாளர்களை நான் மிக கவனமாக தேர்ந்து எடுப்பேன்
தலைவருக்கு பின்னர் எனக்கு அரசியலில் நாட்டம் இல்லை. 2009 ஆம் ஆண்டுடன் அரசியலில் நாட்டம் இல்லாது இருந்தேன். இந்த முறை ஜனாதிபதி தேர்தலின் போதே வாக்களித்தேன்.
அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளேன். அதன் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். நாடாளுமன்ற தேர்தல் ஆறு மாத கால பகுதிக்கு பின்னரே நடைபெறும் என எதிர்பார்த்தேன். ஆனால் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டமையால் ,எனது கட்சி பதிவு செய்யப்படாததால் , சுயேட்சையாக இம்முறை போட்டியிடவுள்ளோம்.
கடந்த சில நாட்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பலதை கற்றுக்கொண்டேன். சிறையில் சிறு வயதுகளில் போதைக்கு அடிமையாக உள்ளவர்களுடன் பேசினேன். அதுபோன்று சிறு வயதிலையே குற்றங்களை செய்து சிறை தண்டனை அனுபவிப்பவர்களை பார்த்தேன். எனது சிறை அனுபவம் பலதை எனக்கு கற்றுக்கொடுத்தது. அதில் இருந்து ஏழைகளுக்காக அவர்களின் வாழ்வை உயர்த்துவதாக எனது அரசியல் பயணம் அமையும் என தெரிவித்தார்.
வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியவமை , அவதூறுகளை பரப்பியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வைத்தியர் அருச்சுனாவிற்கு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் , பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 13 நாட்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வைத்தியரை நேற்றைய தினம் புதன்கிழமையே பிணையில் செல்ல மன்று அனுமதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment