அதிபர் மைத்திரி தெரிவித்துள்ள சர்ச்சை மிகு கருத்து
வடக்கில் நடந்த போரின் இறுதி இரண்டு வாரங்களில், விடுதலைப் புலிகள் கொழும்பில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததால், மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சரத் பொன்சேகா போன்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர் என்று போட்டுடைத்துள்ளார் அதிபர் மைத்திரிபால சிறிசேன.
அமெரிக்காவில் அதிபர் மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்கில், இலங்கை சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
போரின் இறுதி இரண்டு வாரங்களில், சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானத்தைப் பயன்படுத்தி கொழும்பு நகரில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
அதனால் தான், போர்க்காலத்தில் உயர்மட்டத் தலைவர்களாக இருந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போன்றவர்கள் போரின் இறுதி இரண்டு வாரங்களிலும் நாட்டில் இருக்கவில்லை.
அவர்கள் நாடு திரும்பும் வரை, பதில் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு என்னிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது என்றும் போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த இறுதிக் கட்டத்தில் இவர்கள் எல்லோரும் ஏன் நாட்டை விட்டு வெளியேறினர் என்பது எவருக்கும் தெரியாது.
ஆனால் எனக்குத் தெரியும் என்றும் எனவே, போரின் இறுதி இரண்டு வாரங்களில் என்ன நடந்தது என்பது ஏனையவர்களை விட எனக்குத் தெரியும் என்றும் அதிபர் மைத்திரி தெரிவித்துள்ளார்.
அதிபரின் இந்த உரை மகிந்த, கோத்தபாய, சரத்பொன்சேகா ஆகியோரிடையே சூட்டைக் கிளப்பியுள்ளது. தாங்கள் எங்கும் ஓடி ஒழியவில்லை என்று முன்னாள் அதிபர் மகிந்தவும் தானும் உத்தியோகபூர்வ பயணமாகவே நாட்டில் இல்லை என்றும் கோத்தபாய நாட்டில் இருந்தார் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதே போன்று முன்னாள் அதிபர் மகிந்த மற்றும் கோத்தபாய ஆகியோர் அதிபர் மைத்திரியின் உரைக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அதாவது வடக்கில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் சென்னையில் இருந்து விமான மார்க்கமாக கொத்தணிக் குண்டுகள் மூலமாக கொழும்பு நகரை தாக்குவதற்கு திட்டமிட்டிருந்தார்கள் அதனால் அப்போதைய அதிபர் மகிந்த பாதுகாப்பு செயலர் கோத்தபாய மற்றும் அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் நாட்டில் இருக்கவில்லை என்றும் அத்துடன் தான்தான் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன் என்றும் ஒரு ஒப்புதல் வாக்கு போன்று அந்த பேச்சு அமைந்துள்ளது.
அப்போது புலிகளின் கையில் சிறிய ரக விமானம் இருந்தது உண்மைதான். அப்போது புலிகள் தங்களது சிறிய ரக விமான தாக்குதல் செய்திருந்தார்கள் என்பதும் உண்மைதான், ஆனால் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தோ அல்லது சென்னையில் இருந்தோ புலிகள் ஒரு போதும் விமான தாக்குதல் நடத்தியிருக்க முடியாது.
இந்தியாவின் சகல விமான நிலையங்களும் மத்திய அரசின் பாதுகாப்பு படைகளால் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ளது இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஒரு போதும் எந்தவொரு தாக்குதலும் நடத்துவதற்கான ஒரு வீத வாய்ப்பும் ஒரு போதும் இருந்ததில்லை.
இந்தியாவின் “ ராடார் ” கருவிகள் மிகவும் சக்தி வாய்ந்தவைகள். அதனால் இந்தியாவுக்கு தெரியாமல் இந்திய வான்பரப்பில் எந்தவொரு விமானமும் பறக்க முடியாது.
ஆனால் அப்போது புலிகள் வான் தாக்குதல் செய்வார்கள் என்ற ஒரு அச்சம் இருந்து வந்தது.
புலிகளை அழிப்பதில் அப்போதைய சோனியா, மன்மோகன் அரசு தீவிரமாக செயல்பட்ட நிலையில் அப்போது பாக்குநீரிணை வழியாக வடக்கு நோக்கி வந்த புலிகளின் அதிநவீனரக பல ஆயுதக் கப்பல்களை இலங்கை நேவிக்கு காட்டிக் கொடுத்து அழித்த நிலையில் இப்படியான விமான தாக்குதலை இந்தியாவில் இருந்து செய்வதற்கு ஒரு போதும் இந்தியா விட்டிருக்காது என்பது நிச்சயம்.
முக்கோணப் போர் ! மறுக்கும் மகிந்த கோதபாய சரத்பொன்சேகா
போரின் இறுதி இரண்டு வாரங்களில் விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் அச்சத்தினால், இலங்கையின் அரசியல், இராணுவத் தலைமைகள் வெளிநாட்டில் ஓடி ஒழிந்து கொண்டதாக இலங்கை அதிபர் கூறியிருந்த தகவலை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.
அப்போது இராணுவத் தளபதியாக இருந்த தற்போதைய அமைச்சர் சரத் பொன்சேகா, நியூயோர்க்கில் அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்களை முற்றாக நிராகரித்திருக்கிறார்.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அதிகாரபூர்வ பயணமாகவே வெளிநாடு சென்றிருந்தார். அவர், 2009 மே 16ஆம் நாள் நாடு திரும்பினார். அதிகாரபூர்வ விடயமாக நானும் சீனாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது. எந்த அழுத்தங்களாலும் நாங்கள் இந்தப் பயணங்களை மேற்கொள்ளவில்லை.
அந்தக் கட்டத்தில் எல்லாமே மிக கவனமாக திட்டமிடப்பட்டிருந்தது. விளைவு நிச்சயம் உறுதியாகி விட்டது. போரின் இறுதி இரண்டு வாரங்களில், கோப்ரல்களும் சார்ஜன்ட்களும் தான் நிறைய வேலை செய்தனர். களத்தில் எமது கட்டளைகளை அவர்களை நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போர் இரண்டரை ஆண்டுகள் நீடித்த ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை. இரண்டு ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்ட போரின் சிக்கல்களை இரண்டு வாரங்கள் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஒருவரால் புரிந்து கொள்ள முடியுமா? என்றும் கேட்டுள்ளார்.
போரின் இறுதி இரண்டு வாரங்களிலும், கோத்தபாய ராஜபக்ச வெளிநாட்டுக்குச் செல்லவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த மற்றும் கோத்தபாய மீது சரத்பொன்சேகா பெருத்த கடுப்பில் இருந்தாலும் இப்போது அதிபர் மைத்திரி தெரிவித்துள்ள இந்தக் கருத்தினால் அதிபர் மைத்திரிக்கு எதிரான கருத்துக்களை இந்த 3 பேரும் தெரிவித்துள்ளார்கள்.
இந்த விடயத்தில் இந்த 3 பேரும் எதிர்வரும் காலங்களில் அதிபர் மைத்திரிக்கு எதிராக ஒரு முக்கோண கருத்துக்களை எதிர் தாக்குதலாக தொடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை, அத்துடன் இந்த விடயம் பெரும் பேசு பொருளாகவும் அமையப் போகின்றது..