யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலுள்ள செங்கடகல பினான்ஸ் நிறுவனத்தில் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம், ஒரு நாடகம் என்பதையும், அதன் பிரதான சூத்திரதாரியான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்பக்கம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த பெண்ணின் காதலன், காதலனின் நண்பனும் கைதாகியுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தை பொலிசார் எப்படி துப்புதுலக்கினார்கள் என்ற விபரங்கள் வெளியாகியுள்ளன.
சாவகச்சேரியிலுள்ள
செங்கடகல பினான்ஸ் நிறுவனத்திற்குள் கத்தி முனையில் புகுந்த கொள்ளையர்கள் 1,891,110 ரூபாவை கத்தி முனையில் கொள்ளையிட்டதாக முறையிடப்பட்டிருந்தது.
சாவகச்சேரி மற்றும் மாவட்ட புலனாய்வு பொலிசார் இது தொடர்பில் விசாரணைகளை முடுக்கி விட்டனர். அன்றைய தினம் கத்திமுனையில் கொள்ளையிடப்பட்டது வெறும் 50,000 ரூபாதான் என்பதை முதலில் பொலிசார் கண்டறிந்தனர். இந்த நிதி நிறுவனத்தில் ஏற்கனவே இல்லாமல் போன 1,841,110 ரூபாவையும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, முழு தொகையையும் கத்திமுனையில் கொள்ளையிடப்பட்டதாக காண்பித்து, இழப்பீட்டு காப்புறுதி பெற்றுக்கொள்ளவே தனது ஆண் நண்பர் ஊடாக இந்த நாடகத்தை வங்கியின் பணியாளர் அரங்கேற்றியுள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து விசாரணைகளை முடுக்கி விட்ட பொலிசார் அந்த பகுதி பாதுகாப்பு கமராக்களை ஆராய்ந்தனர். இதில் கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டனர். எனினும், மோட்டார்சைக்கிள் இலக்கம் மூடி மறைக்கப்பட்டிருந்த காட்சிகளே பதிவாகியிருந்தது.
இதையடுத்து கொள்ளையர்கள் சென்ற வழியிலிருந்த சகல பாதுகாப்பு கமராக்களையும் ஆராய்ந்தனர். ஏ9 பிரதான வீதியில் ஏறும்போதே மோட்டார்சைக்கிள் இலக்கம் கண்டறியப்பட்டது. பின்னர் குருநகர் பகுதியில் உந்துருளியை கண்டறிந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு நிதி நிறுவன பெண் பணியாளர், அவரது காதலன், காதலனின் நண்பன் ஆகியோர் கைதாகினர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.
கடந்த 18ம் திகதியே- கொள்ளை நடந்ததற்கு முதல்நாள்- கொள்ளை நாடகத்தை அரங்கேற்ற இருந்ததாகவும், அந்த சமயத்தில் நிதி நிறுவனத்தில் ஏனைய உத்தியோகத்தர்கள் இருந்ததால், மறுநாள்- 19ம் திகதி- ஏனைய உத்தியோகத்தர்கள் வருவதற்கு முன்னதாக அரங்கேற்றப்பட்டுள்ளது.
காலை 8.25 மணியளவிலேயே கொள்ளை சம்பவம் நடந்தது.
கொள்ளையிலீடுபட்ட காதலனுடன், 18ம் திகதி இரவு சாவகச்சேரியிலிருந்து நிதி நிறுவன பணியாளரான பெண் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்ததும் கண்டறியப்பட்டது.
குறித்த
பெண் பணத்தேவையுடன் இருந்ததாகவும், சம்பவத்திற்கு சில நாட்கள் முன்னர் அலுவலத்தில் பலரிடம் பணம் கேட்டிருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து நேற்று மாலை மூவரையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் பொலிசார் முற்படுத்தினர். வரும் 9ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளிமாவட்டத்தை சேர்ந்த இந்த பெண் தற்போது சுன்னாகத்தில் தங்கியிருக்கிறார். அவர் ஒரு பிள்ளையின் தாய் ஆவார்.
0 comments:
Post a Comment