மனித குலம் தழைக்க அடுத்தடுத்த தலைமுறைகளை கொடுத்து உலகையே இயக்கிக்கொண்டிருக்கும் நெம்பர் ஒன் விஷயம், காமம்.. உலகிலேயே கொடூரமான, பயங்கரமான ஆயுதமும், அதே காமம்தான்..
காமம், ஆயுதமாக மாறும்போது அது நிகழ்த்தும் விளை வுகள் ஒவ்வொன்றும் மனிதனின் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டே இருக்கும்.. குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றிருக்கும் குன்றத்தூர் அபிராமி விவகாரமும் அப்படித்தான்.
அபிராமிகள் இருக்கும் இதே உலகில்தான் இன்றைக்கும் உங்கள் வீட்டிலும் எங்கள் வீட்டிலும் என கோடிக்கணக்கான பெண்கள் தங்கள் குழந்தைகளை எறும்புகூட கடிக்கவிடாதபடி பொத்திப்பொத்தி பாதுகாக்கிறார்கள்.. நாளையும் பாதுகாப்பார்கள். அந்த தாய்மார்களை நினைத்துப்பார்த்தால் அபிராமியெல்லாம் நொடிப்பொழுதில் மறைந்துவிடுவாள்.
குழந்தைகளை கொல்லாமல் வீட்டைவிட்டு ஓடிப்போக வாய்ப்பி ருக்கும்போது அபிராமி ஏன் இப்படி செய்தாள்? தாம் என்ன செய்கிறோம் என்பதே மரமண்டையில் ஏறாமல் செய்யும் காரியம் என்பார்களே.. அதுபோன்ற அரிதான வகைதான் இது.
இன்னும் சொல்லப்போனால், தாங்கள் எவ்வளவு பெரிய கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறோம் என்பது, முழுவதுமாக, கொலைகாரர்களான அபிராமிக்கும் அவளின் கள்ளக்காதலனுக்கும் புரிந்திருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது..
கணவனையும்,
குழந்தைகளையும் கணவரையும் கொன்றுவிட்டு வா என்கிறானே, அவன் மட்டும் ஏன் அவன் மனைவியை உயிரோடு விட்டுவிட்டு வரவேண்டும் என்று அபிராமி யோசிக்கவில்லையா?
இன்று நம்முடைய குடும்பத்தையே கொல்லச்சொல்பவன், நாளை நம்மையே ஏன் கொல்லமாட்டான் என்று அபிராமிக்கு தோன்றவில்லையா?
பெற்ற பிள்ளைகளையே உடல்சுகத்துக்காக கொல்பவள், நாளை இன்னொருத்தனுடன் ஓடுவதற்காக நம்மளையும் கொல்லமாட்டாள் என்பது என்ன நிச்சயம் என்று, கள்ளக்காதலனுக்கு உரைக்கவில்லையா? இப்படி எண்ணற்ற கேள்விகளை அடுக்கிக்கொண்டேபோகலாம். ஆனால் எந்த கேள்விக்கும் விடைகிடைக்காது.
அபிராமி போன்ற பெண்கள், அரிதிலும் அரிதாக அவர்களின் மனதளவில் தானாகவேத்தான் உருவெடுப்பார்கள்.. ‘’பத்துகோடி ரூபாய் தருகிறேன், நீ ஒரு கள்ளக்காதலனை உருவாக்கிக்கொண்டு உன் குழந்தைகளை கொன்றுவிடு என்று சொன்னால், எத்தனை பேர் அபிராமியாக மாறுவதற்கு ஓடிவருவார்கள்? ஒருத்தியும் வரமாட்டாள் என்பதே உண்மை..
தனி மனித வக்கிரத்தால் விளைகின்ற சம்பவத்தை ஒட்டு மொத்த சமூகத்தின் இயக்கத்தோடு ஒப்பிட்டு பதறுவதெல்லாம்
எப்படி மனம் வந்தது, வேற எதுவும் கிடைக்கலையா போன்ற காம்ப்ரமைஸ் மைண்ட் கேள்விகள் நம்முன் எழுந்துகொண்டேதான் இருக்கும்..
பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுக்க எப்படி மனசு வந்தது என்று கேட்கலாம். இதே அபிராமி அண்டாவில் தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் குழந்தையை தூக்கிப்போட்டு பெரிய தட்டைப்போட்டு மூடி கொன்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? ‘அடிப்பாவி, பால்ல கீல்ல எதாவது கலந்துகொடுத்திருந்தா அதுங்க பாட்டுக்கு நிம்மதியா தூக்கத்துலயே செத்து போயிருக்குமே’’ என்று ஸ்ருதி அப்படி போகும்..
எதற்கு சொல்கிறோம் என்றால் கொதிக்கும் அண்டாவில் குழந்தையை தூக்கிபோட்டு தாயே கொன்ற சம்பவங்களும் நடந்திருக்கின்றன என்பதை மனதில்வைத்துத்தான்.. நிறைய பெண்கள் அபிராமிக்கு முன்னாடியே கொடூரத்தில் சாகசம் காட்டியிருக்கிறார்கள்.
தற்கொலைக்காக ரயில்முன் பாய்ந்து ஒட்டவே முடியாத அளவுக்கு உடல் துண்டு துண்டாய் சிதறிப்போனவர்களை பார்த்து என்ன சொல்வார்கள்? போய் சேர்றதுன்னு முடிவு பண்ண மூதேவி, நாலு முழம் கயிறோ, அரளி விதையோ எலி மருந்தோ குடிச்சிட்டு போய் சேரவேண்டியதுதானே என்று சொல்வார்கள்.. அதேதான் இங்கும்..
கிராதகி அபிராமி உள்ளே போய்விட்டாள். அவளை திட்டியோ சபித்தோ ஒரு பிரேயோஜனமும் ஆகப்போவதில்லை.. அவ்வளவு ஏன்? அவள் எதற்கு ஆசைப்பட்டு இவ்வளவு பயங்கரங்களை நிகழ்த்தினாளோ, அதுவே இனி அவளுக்கு கிடைக்கப்போவதில்லை. சட்டம் மற்றும் மனசாட்சி மார்க்கத்தில் அவளுக்கான தண்டனை பல வழிகளில் கிடைக்கலாம். அவளாச்சு..அவளுக்கான தண்டனையாச்சு..
ஒரு விஷயம் இப்போது சொன்னால் நம்பவே முடியாததாகக்கூட இருக்கும். அபிராமி மாதிரியான பெண்கள் கொஞ்ச நாளில் ஒருவேளை பெயில் கிடைத்து வெளியே வந்து, ‘’தப்பு செஞ்சிட்டேன்னு ஓவென்று அழுதால் அவளுக்கு மடி கொடுத்து ஆறுதல் சொல்லி படுக்கையை பகிர்ந்துகொள்ள இதே உலகில் நாலு பேர் தயாராகவே இருப்பார்கள்.. ‘’போடி கொலைகாரி.. உன் உடம்பை தொடுமளவுக்கு நான் கேவலமானவன் இல்லை’’ என்று அந்த நாலு பேர் சொல்வானா? சொல்லவேமாட்டார்கள். ஏனெனில் அவர்கள், ‘ ஆண் அபிராமிக்கள்’. அவ்வளவேதான்.
அந்த கருமாந்திர விஷயங்களை விட்டுவிட்டு முக்கிய விஷயத்தை பார்ப்போம். சாடிஸ்ட் அபிராபி விகாரத்தில், இந்த சமுதாயம் கை கொடுக்கவேண்டியது. நடத்தை கெட்டவளுக்கு வாழ்க்கைப்பட்டு, இரண்டு தளிர்களை இழந்து தவிக்கிற அவளின் கணவன் விஜய்க்குத்தான்.
விஜய்க்கு வீட்டை வாடகைக்கு விட்ட அந்த தம்பதியராலே குழந்தைகளிள் இழப்பை தாளமுடியாமல் தவிக்கிறார்கள். பாசத்தோட அரவணைப்பதில் அந்த குழந்தைகளுக்கு நி‘ஜமான தாத்தா பாட்டியாக அவர்கள் மாறியிருக்கிறார்கள் அவர்களின் வேதனையையும் கதறலையும் கேள்விப்படும்போதே, அந்த வலியின் கொடுமை புரிகிறது.
விஜய் வாடகையாக தந்த பணத்தில் திருப்பி கணிசமான அளவுக்கு அந்த குழந்தைகளுக்கே வீட்டின் உரிமையாளர் தம்பதி செலவிட்டிருப்பார்கள் என்றே தெரிகிறது. ஏனெனில் பிஞ்சுக்களின் அன்பு அத்தகைய இனிமையை தரக்கூடியது. பல இடங்களில் குழந்தைகளின் பாசம் வீட்டின் உரிமையாளர் குடும்பத்திற்கும் வாடகைதாரர் குடும்பத்திற்கும் இடையே உள்ள ‘கட்டாய மாதவாடகை’ என்பதின் கண்டிப்பையே மறக்கடித்துவிடும்.
வெளியாட்களான வீட்டு உரிமையாளர்களுக்கே இப்படியொரு சோகம், என்றால், பெற்ற தந்தையான விஜய்க்கு எப்படி இருக்கும்? நினைத்தே பார்க்கமுடியவில்லை.
காதலித்த கரம் பிடித்த மனைவி எட்டாண்டு காலம், கட்டிலில், எவ்வளவு பேசி உறவாடியிருப்பாள்? எத்தனையெத்தனையோ மறக்க இனிமையான தருணங்கள் வீட்டில் நிகழ்ச்சிகளாக நடந்திருக்கும்..அனைத்து நினைவுகளிலும் மனைவியும் மழலைகளும் மாறிமாறி நினைவில் வந்து போவார்கள்.. இதையெல்லாம் மறக்க நிறைய பாடுபடவேண்டியதிருக்கும்.
ஒரு ஆண்மகனுக்கு நேரக்கூடாத ஒரு கொடுமை, அபிராமியை மணந்தவனுக்கு நடந்திருக்கிறது.. எந்த மூன்று பேருக்காக ஓடி ஓடி உழைத்தாரோ விஜய், அந்த மூன்று பேருமே திரும்பி வரமுடியாத இடத்திற்கு போய்விட்டார்கள்..
குழந்தைகளுக்காக அழுவதா, நடத்தைகெட்டு கொலைகாரியான மனைவிக்காக கோபப்படுவதா என தவிக்கும் மனநிலை உலகில் மிகவும் கொடியது. அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் விஜய்க்கு வாழ்க்கையின்மேல் நம்பிக்கையூட்ட வேண்டியது இந்த சமுதாயத்தின் கடமை. அவரை சுற்றியுள்ளவர்களுக்கோ, மறுபடியும் சந்தோஷமான மனிதனாக அவரை மாற்றுவது கட்டாயத்திலும் கட்டாயமான கடமை.
நாம் அடிக்கடி சொல்வதுதான். எப்பேர்பட்ட கொடுமையான காயத்தையும் ஆற்றி வலியை மறக்கச்செய்து மகிழ்ச்சியை மலரவிடும் ஆற்றல் காலத்திடம் நிச்சயம் உண்டு
0 comments:
Post a Comment