மத்தியில் ஆளும் பாஜக அரசினை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கும் தமிழ்ப்பெண் சோபியா ஒரே இரவில் தேசிய ஊடகங்கள் அனைத்திலும் தலைப்பு செய்தியாக இடம்பிடித்துள்ளார்.
தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கி விமானத்தில் பயணம் செய்தார்.
அதே விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற இளம்பெண், 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என கோஷமிட்டதாக தெரிகிறது.
இந்த சம்பவம் தூத்துக்குடி விமான நிலையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்த, நேற்று இரவு கைது செய்யப்பட்ட சோபியா 15 நாட்கள் சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.
கருத்து சுதந்திரத்திற்கு எதிராக செயல்பட்ட பாஜக அரசினை கடுமையாக விமர்சித்து, தேசிய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் 5 இடத்தில் பாஜகவிற்கு எதிராக தமிழர்கள் கருத்து பதிவிட்டு தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இதனையடுத்து யார் இந்த சோபியா என்பதை பற்றிய செய்திகள் தேசிய ஊடகங்கள் அனைத்திலும் தலைப்பு செய்தியாக இடம்பெற்றன.
யார் இந்த சோபியா?
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சோபியா, சாமி- மனோகரி என்ற தம்பதியினருக்கு பிறந்தவர். இவருக்கு கிங்ஸ்டன் என்ற சகோதரர் இருக்கிறார்.
சாமி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாய் மனோகரி தலைமை செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
சோபியா தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். பள்ளி படிப்பை தூத்துக்குடியில் முடித்த சோபியா தன்னுடைய இயற்பியல் முதுகலை பட்டத்தை ஜெர்மனியிலும், கனடாவில் கணிதத்தில் முதுகலை பட்டமும் முடித்தார்.
இவர் தற்போது கனடாவில் உள்ள மாண்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பும் படித்து வருகிறார்.
சமூகத்தில் நடக்கும் அவலங்கள் அனைத்திற்கும் எதிராக தன்னுடைய முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வந்த சோபியா, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார்.
முன்னதாகி விமான நிலையத்தில் தமிழிசைக்கு எதிராக குரல்கொடுப்பதற்கு முன்பு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாஜகவிற்கு எதிராக குரல்கொடுக்க போகிறேன் என கருத்து பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment