கிளிநொச்சியில் அண்மையில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் தற்பொழுது சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபரின் வாக்குமூலத்தில், குறித்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்தது. அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தை என்னுடையது தான். அதனால் அவள் தன்னை கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள்.
பின்னர் நாம் இருவரும் நஞ்சு குடித்து இறந்துவிடுவோம் என்று முடிவெடுத்து, கடந்த 28ஆம் திகதி அவள் கடமை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும் நான் எனது வீட்டில் இருந்து நடந்து வந்து அவளது மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டேன்.
பின்னர் அம்பாள்குள வீதியூடாக கிளிநொச்சி வந்து உள் பாதைகளால் கரடிப்போக்கு வந்து, பின்னர் மீண்டும் உள் பாதைகளால் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றோம்.
வரும் போதே அவள் மருந்துப் போத்தல் ஒன்றை வாங்கிவந்தாள். அங்கு சென்றதும் குடிப்போம் என்றதும் எமக்குள் சிறு பிரச்சினை வந்துவிட்டது என்றவாறாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரையில் அவர்களுக்கிடையில் எந்த விடயம் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டது என்பது தொடர்பிலான தகவல்கள் வெளியாகவில்லை.
தற்கொலை செய்வதற்காக சென்ற இருவருக்கிடையில் பிரச்சினை ஏற்பட்டு அது கொலையாக மாறியதால் அங்கு ஏற்பட்ட பிரச்சினை என்ன என்பது கட்டாயம் வெளிவர வேண்டிய விடயமாக இருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அந்த நபரின் வாக்குமூலத்தில் மேலும், அவள் பாதுகாப்பு உத்தியோகத்தர் உடையில் வந்தமையால் கழுத்தில், தொழில் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருந்தது.
கழுத்தில் இருந்த பட்டியைக் கொண்டே அவளது கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். பின்னர் இறந்தவள் பாதுகாப்பு உத்தியோகத்தர் என அடையாளம் காணக் கூடாது என்பதற்காக, அவளது ஆடைகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு, அவளது உடலை அருகில் இருந்த வயல் கால்வாய்க்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டேன்.
இதன் பின்னர், கனகபுரம் பகுதியில் அவளின் ஆடைகளை எறிந்துவிட்டு, கைப்பை மற்றும் மேல் சேட்டு என்பவற்றை அம்பாள் குளப்பகுதியில் எறிந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு போல வீட்டுக்கு வந்தேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை கொண்டு அந்த பெண் திட்டமிட்டு படுகொலை செய்ப்பட்டிருப்பதற்கான வாய்ப்பே அதிகமாக இருக்கிறது என்பது பலரின் கருத்தாகவும் அமைகிறது.
ஏனெனின் இவ்வளவு சாதுரியமாக கொலைக்கான தடயங்களை மறைத்து, விசாரணையினை திசை திருப்பும் வகையில் சந்தேகநபர் செயற்பட்டுள்ளமை தெரியவருகிறது.
அத்துடன் தொடர்ந்து வாக்குமூலத்தில் வந்து பின்பக்கமாக இருக்கும் அறையில் மோட்டார் சைக்கில், ஹெல்மட் என்பவற்றை ஒழித்து வைத்து விட்டு மருந்துப் போத்தலைக் கொண்டு வந்தேன்.
அதனை, குடித்து நானும் சாக வேண்டும் என நினைத்த போதிலும், பிறகு பிள்ளைகள் நினைவு வந்ததால் அதனையும் வீடுக்குள் மறைத்து வைத்துவிட்டேன்.
சம்பவ இடத்தில் இடுப்பு நாடா மற்றும் சில தடயங்களைத் தவிர மற்றது எல்லாவற்றையும் நானே கொண்டு வந்தேன். இக் கொலையை நான் மட்டுமே செய்தேன் என சந்தேகநபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை தொடர்பான தடயங்களை மறைப்பதற்காக அதி புத்திசாலித்தனமாக சந்தேகநபர் செயற்பட்டுள்ளமை தெரியவருகிறது.
இந்த நிலையில் குறித்த கொலைச் சம்பவம் தொடர்பான முழுமையான விபரங்கள் வெளிவராத நிலையில் பல மர்மங்கள் ஒளிந்திருப்பதாக தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள நபர் தானே கொலையாளி என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ள போதும் தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment