யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுசீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாக பெற்ற குற்றச்சாட்டில் டென்மார்க் பிரஜையை யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு தற்போது டென்மார்க் பிராஜவுரிமை பெற்று டென்மார்க்கில் வசிக்கும் 42 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் கடந்த 2015ஆம் ஆண்டளவில் தனது சகோதரியின் பெயரில் போலியான கடவுசீட்டை பெற்று டென்மார்க் நாட்டிற்கு சென்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வசித்த அவரது சகோதரி 2019ஆம் ஆண்டளவில் தனக்கு கடவுசீட்டு எடுப்பதற்காக விண்ணப்பித்த போது , அவரது பெயரில் ஏற்கனவே கடவுசீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அவருக்கு கடவுசீட்டு வழங்கப்படவில்லை. அதன் போதே தனது சகோதரி தனது பெயரில் கடவுசீட்டு எடுத்து வெளிநாடு சென்ற விடயம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தனது தாயரின் இறுதி கிரியைக்காக டென்மார்க்கில் இருந்து வந்தவர் , போலியான கடவுசீட்டை பயன்படுத்தி தனது சகோதரியின் பெயரில் யாழ்ப்பாணத்தில் வங்கி கணக்கொன்றினையும் ஆரம்பித்துள்ளார்.
இது தொடர்பில் அறிந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சகோதரி யாழ்ப்பாண பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , டென்மார்க் பிரஜையான பெண்ணை கைது செய்து, விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment