இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரையும் யுத்த வலயத்தில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் முயற்சி நிராகரிக்கப்பட்டதனால் ஆயிரக்கணக்கான உயிர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக எரிக் சொல்ஹேம் (Erik Solheim) தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்ட குறித்த முயற்சிக்கு ஆரம்பத்தில் ஒப்புதல் அளித்திருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதித் தருணத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டமை வேதனையானது எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையில் 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட சமாதான உடன்படிக்கை மற்றும் பேச்சுக்களுக்கான விசேட அனுசரணையாளராக செயற்பட்ட நோர்வே அரசாங்க பிரதிநிதியான எரிக் சொல்ஹேய்ம், அண்மையில் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சி
அவர் மேலும் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்காலில் சிக்கியிருந்த அப்பாவி மக்களையும் புலிகள் இயக்க உறுப்பினர்களையும் சர்வதேச நாடுகளின் பிரசன்னத்துடன் பதிவு செய்து கப்பல் மூலம் யுத்த வலயத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான சர்வதேச முயற்சி 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் முன்னெடுக்கப்பட்டது.
அந்த முயற்சியை இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பின்னணியில் இருந்து ஊக்கப்படுத்திக் கொண்டிருந்ததுடன் மாத்திரமல்லாமல் அப்போதைய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனும் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருந்தார்.
யுத்த வலயத்தினுள் சிக்கியிருந்த அப்பாவி மக்கள், புலிகள் இயக்க உறுப்பினர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றி கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்வது மாத்திரமன்றி புகலிடக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள தயாரான நாடுகளுக்கு விரும்பியவர்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டிருந்தன.
அனைத்து முன்னேற்பாடுகளும் நிறைவடைந்து இறுதிக் கட்ட ஒப்பந்தத்தினை ஏற்படுத்துவதற்காக நேரடியாக நான் வருவதற்கு தயாரான போது புலிகளின் தலைவர் பிரபாகரனினால் இந்தத் திட்டம் நிகராகரிக்கப்பட்டமை கவலையான விடயமாகும்.
Eric Solheim Statement
இழப்பை தவிர்த்திருக்கலாம்
அனைத்துச் செயற்பாடுகளும் சர்வதேச நாடுகளின் பிரசன்னத்துடன் முறைப்படியான பதிவுகள் ஊடாக முன்னெடுக்கப்பட இருந்தமையினால் யுத்தத்தின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாக தற்போது குற்றஞ்சாட்டப்படுவதைப் போன்ற உயிரிழப்புக்கள், துன்புறுத்தல்கள் காணாமல் போனவை போன்ற பல விடயங்களுக்கான ஏதுநிலைகளை தவிர்த்திருக்கலாம்.
பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களும், புலிகளின் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான புலிகள் இயக்க உறுப்பினர்களும் தற்போதும் உயிருடன் எம்மத்தியில் வாழ்ந்திருப்பார்கள். மேலும் இராணுவ ரீதியில் நீண்ட காலமாக வெற்றிகரமாக செயற்பட்டு பாரிய கட்டமைப்புக்களை எல்லாம் உருவாக்கிய பிரபாகரன் யுத்தத்தின் இறுதி 3 வருடங்களில் மேற்கொண்ட தீர்மானங்கள் அனைத்தையும் பிழையானவை என்றே நான் கருதுகிறேன்.
எந்தவிதமான சமரசத்திற்கோ தீர்வுகளுக்கோ தயாரில்லாது இருந்த பிரபாகரன், அவர் நம்பியதைப் போன்று இலங்கை இராணுவத்தினருடன் மரபுவழி யுத்தத்தில் தொடர்ந்தும் ஈடுபட முடியாத நிலையில் ஆயிரக்கணக்கான மக்களையும் அழிவை நோக்கி கொண்டு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment