//ஒரு தனிமனிதனை ஓர் எல்லைக்கு மேல் நெருக்கடிக்கு உள்ளாக்கக் கூடாது. அபிராமி விஷயத்தில் அவளது அப்பாவும் கணவனுமாய்ச் சேர்ந்து அவளைக் காதலனிடமிருந்து திரும்ப அழைத்து வந்ததே தவறு. “குடும்பம் வேண்டாம் என்றால் ஓடிப் போக வேண்டியதுதானே, ஏன் அவள் தன் குழந்தைகளை அதற்காகக் கொல்ல வேண்டும்?” எனக் கேட்பவர்கள் ஒரு பெண் தன் கணவனோ, குழந்தைகளோ வேண்டாம் என முடிவெடுக்கையில் அவளை அடித்து, வலியுறுத்தி, குடும்பத்துக்குள் விருப்பமற்ற கணவனுடன் இருக்கும்படி செய்த அவளது அப்பாவிடம் இதே கேள்வியைக் கேட்க வேண்டும். தனிமனித விருப்பத்தை - அது சரியோ, தவறோ - நாம் மதிக்க வேண்டும். மதிக்காதபோது இதே போன்ற, அல்லது இதைவிடக் கொடூரமான குற்றங்கள் நடக்கும்.
இப்படி எல்லாவற்றையும் விட்டுவிடலாமா என்றால், எல்லையை மீறிச் சென்றால் விட்டுவிட வேண்டியதுதான். இல்லையேல் மேலும் அனர்த்தங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது.
இக்குற்றத்துக்கு அபிராமியின் அப்பாவும் கணவனும் மறைமுகமாய் பொறுப்பு என்றும் சொல்லலாம். நம் நாட்டில் பல பெண்கள் விருப்பமின்றிக் குழந்தை பெற்று வளர்க்க நேர்கிறது. குழந்தைகளைப் பிடித்திருந்தாலும் அவர்களுக்காகப் பெரும் தியாகங்கள் செய்ய சில பெண்கள் விரும்புவதில்லை. முந்தைய கூட்டுக் குடும்ப வீடுகளில் பிள்ளைகளைக் கவனிக்கவும் இத்தகைய அம்மாக்களுக்கு உதவவும் வேறு உறவுப் பெண்கள் இருந்தார்கள். ஆனால், இன்று அந்நிலை இல்லை. பல பெண்கள் குடும்ப நிலையால், குழந்தைகள் மீதான பொறுப்புகளால் தம் சிறகுகள் முறிக்கப்பட்டதாய் உணர்கிறார்கள். இந்த உணர்வை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களுக்கு உதவுவதற்கான சேவைகளை நாம் அறிமுகப்படுத்த வேண்டும்.
குழந்தை உள்ளது எனும் ஒரே காரணத்துக்காக மண முறிவை அனுமதிக்காமல் ஒரு பெண்ணைக் கணவனுடன் கட்டிப் போடுவதும் நியாயம் அல்ல.//
//அபிராமியின் திருமணத்துக்கு வெளியிலான இந்தக் காதல் ஊருக்குத் தெரியவர, கணவன் இதனால் கோபமுற்று அது அடிதடியில் போய் முடிகிறது. இதுதான் இந்த வழக்கமான பிரச்சினையைக் கொலையை நோக்கிக் கொண்டுசெல்வதற்கான முதல் திருப்பம்.
கணவனிடம் கோபித்து அபிராமி சுந்தரத்தின் வீட்டில் சென்று சில மாதங்கள் வாழ்கிறார். சுந்தரமும் திருமணமானவரே. அவர் மனைவியின் எதிர்வினை என்னவெனத் தெரியவில்லை.
இந்தக் கட்டத்தில், கணவர் விஜய் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. குழந்தைகளை யார் கவனிப்பது? ஆக, மனைவியை மீட்பதே தீர்வாக அவர் தரப்புக்குத் தோன்றுகிறது. இதுதான் அவர் செய்த தவறு.
பெண்கள் ஒரு முடிவை எடுத்த பின் அவர்களை வற்புறுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில், அவர்கள் ஏற்கெனவே பல முரணான சிந்தனைகளில் வயப்பட்டிருப்பார்கள். ஒருபக்கம் விடுதலை பெறும் ஆவேசம் இன்னொருபுறம் குடும்பத்தை விட்டு வந்துவிட்டோமே எனும் குற்றவுணர்வு எனக் கொந்தளித்துக்கொண்டிருப்பார்கள். இவர்களை மேலும் வற்புறுத்தினால் அவர்களின் வேதனையும் கோபமும் பல மடங்கு ஆகும். அது ஏதாவது ஒரு கட்டத்தில் யார் மீதாவது பாயும்.
கணவர் தரப்பின் மீட்புப் போராட்டம் அபிராமியின் அப்பாவின் நுழைவுடன் மோசமாகிறது. அபிராமியின் அப்பா பிரச்சினையை இன்னும் பெரிதாக்குகிறார். அவர் சுந்தரத்தை அடித்து மிரட்டுகிறார். அபிராமியை வீட்டுக்கு அழைத்து வந்து சில நாட்கள் காவலில் வைத்திருக்கிறார்கள்.
இயல்பாகவே, அபிராமி மீண்டும் தன் காதலன் சுந்தரத்தை நாடுகிறார். எப்படியாவது குடும்பச் சிறையிலிருந்து தப்ப வேண்டுமென ஏங்குகிறார்.//
//கணவனை மட்டும் கொன்றாலும் அபிராமி விடுதலை பெறப்போவதில்லை. கணவன் தூக்க மாத்திரை உண்டு தற்கொலை செய்துகொண்டார் எனச் சித்திரித்து போலீஸிடமிருந்து தப்பித்துவிட்டாலும் அபிராமி தன் உறவுகளிடமிருந்து தப்பிக்க மாட்டார். மீண்டும் அவரைப் பிடித்து வந்து குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுமாறு அவர் அப்பாவின் தரப்பு வற்புறுத்தும்.
மீண்டும் தன் வாழ்வைப் புத்தம் புதிதாய்த் தொடங்கும் விருப்பமும் அபிராமிக்கு இருந்திருக்கலாம். ஆகவே, குழந்தைகளையும் கணவரையும் கொல்லும் திட்டத்தைத் தீட்டுகிறார்கள்.
யோசித்துப் பார்த்தால், இது தர்க்கரீதியாய் கச்சிதமான முடிவாகவே தெரிகிறது. ஆனால், குரூரமானது (பெரும்பாலான தர்க்க முடிவுகளைப் போலவே).
இந்தக் குரூரத்தை, கொடூரத்தை அபிராமி உணராமலா இருந்திருப்பார்? நிச்சயம் உணர்ந்திருப்பார். ஆனால், கணவர் மீதும் அப்பா மீதும் இருக்கும் கோபம், தன் சுதந்திரத்தை அனுமதிக்காத குடும்பம், உறவினர் மற்றும் சமூகம் மீதான கோபம், தன்னை அவமதிப்போர் மீதான கோபம், சீக்கிரமே தப்பிக்க வேண்டும் எனும் ஆவேசம் ஆகிய எல்லாம் சேர்ந்து அவர் கண்ணை மறைத்துவிட்டன.//
////நாம் அனைவரும் முரண்பாட்டு முடிச்சுகள். நம் மனம் ஒரே சமயம் எதிரெதிர் திசைகளில் பயணிக்கத்தக்கது. ஒரு மூர்க்கமான, உக்கிரமான மனநிலைக்கு, கண்மண் தெரியாத உணர்வு நிலைக்குத் தள்ளப்பட்டால், நம்மில் யாரும் இது போன்ற குற்றங்களைச் செய்யலாம். அப்படிச் செய்வதாலேயே ஒருவரைக் கொடூரர் என்று சொல்லிவிட முடியாது.
பெற்ற பிள்ளையைக் கொல்லலாமா? சமநிலை கொண்ட ஓர் இயல்பான பெண் அப்படி செய்வாரா? செய்ய மாட்டார். ஆனால், நம்மில் யாருமே சமநிலை இழக்க ரொம்ப நேரம் ஆகாது. நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். தொடர்ந்து எதிர்மறை சூழல்களில், விடையே இல்லாத நெருக்கடி நிலைமைகளில் மாட்டிக்கொள்ளாமல், ஏதோ ஒருவித ஆதரவுடன் இருக்கிறோம். அவை இல்லாமல் நிராதரவாகும் போகும் நாமும் பிறழ்வோம். எந்த எல்லைக்கும் செல்வோம்.
இதை நாம் உள்ளூர அறிவோம். நம் கண்ணெட்டும் எல்லைக்குள்ளாகவே அபிராமிகள் இருக்கலாம் எனும் எண்ணம் நம்மைப் பதற்றமாக்குகிறது. ஆகையால், அபிராமி காம வெறி கொண்டு குற்றம் செய்தவள், அவள் ஓர் அரக்கி என அவருக்கு மிகையான அடையாளத்தை அளிக்கிறோம். அதன் வழி நம் குடும்பம் பாதுகாப்பாய் இருப்பதாய் ஆறுதல் கொள்கிறோம். நம்மை சமாதானப்படுத்திக்கொள்ள அபிராமியைத் தூற்றுகிறோம். அபிராமியை நாம் பாராட்டுவது எப்படி அபத்தமோ அதைப் போன்றே அவரைத் தூற்றுவதும் அபத்தமே. புரிந்துகொள்வதே சரியான பாதை,//
//அபிராமிகள் மேலும் பெருகாமல் இருக்க நாம் முயற்சி எடுக்க முடியும் என்கிறேன்.
குற்றம் என்பது எப்போதும் தீமை அல்ல. அது உதவிக்கான கோரலாக, செய்வதறியாத பரிதவிப்பின் வெளிப்பாடாக இருக்கலாம். அபிராமியை இரண்டாம் வகையாகவே நான் காண்கிறேன்.//
0 comments:
Post a Comment