அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஓர் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய சுவாமி ஒருவரிடம் இராவணன் தமிழனா எனக் கேட்ட கேள்விக்கு அவர்....
இராவணன் தமிழன் அல்ல, அவன் வட இந்தியாவைச் சேர்ந்தவன், இலங்கை இராவணனின் நாடு அல்ல, அது குபேரனின் நாடு, இராவணன் குபேரனிடம் இருந்து இலங்கையை அபகரித்தான் என பதிலளித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக பலர் என்னிடம் நேரிலும், தொலைபேசி ஊடாகவும் இதன் உண்மைத்தன்மை பற்றிக் கேட்டனர். பலர் பின்வரும் கேள்விகளை முன் வைத்தனர்.
இந்த விடயம் தொடர்பில் இராவணன் பற்றி நீண்ட ஆய்வு செய்த உங்கள் கருத்து என்ன?
இலங்கை இராவணனின் நாடு இல்லையா?
இராவணன் தமிழன் இல்லையா?
அல்லது இலங்கை இராவணனின் நாடு என்றால் அதற்கான ஆதாரம் என்ன?
இராவணன் தமிழன் என்றால் அதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?
இதோ இந்தக் கேள்விகளுக்கான பதில்கள்.
வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் 5,6,7 ஆம் சர்க்கங்களில் கூறப்பட்டுள்ள விடயம்.
விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையை விஸ்வகர்மா சுகேசனுக்கு (இராவணனின் தாய் வழிப் பூட்டன்) வழங்கினார்.. சுகேசனின் ஆட்சியின் பின் அவனின் புத்திரர்களான மாலியவான், சுமாலி (இராவணனின் பாட்டன்), மாலி ஆகியோர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் இலங்கை கைவிடப்பட்டது. இராவணனின் பாட்டனான சுமாலி தன் மனைவி, பிள்ளைகளுடன் இங்கிருந்து தெற்கில் உள்ள ரசாதலம் சென்று அங்கே வாழ்ந்து வந்தான்.
அதன்பின் இராவணனின் தந்தையான விஷ்ரவசு தனது மூத்த மனைவியின் பிள்ளையான குபேரனுக்கு இலங்கையை வழங்கி, ஆட்சி செய்யும்படி கூறினான். குபேரன் இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் இராவணனின் பாட்டனான சுமாலி, இராவணனிடம் குபேரன் ஆண்டு கொண்டிருக்கும் இலங்கை உன் பூட்டன் மற்றும் பட்டனாகிய நான் ஆகியோர் ஆண்ட நாடாகும். எனவே இது உனக்கு சொந்தமான நாடு. இதை குபேரனிடமிருந்து கைப்பற்றி நீ ஆள வேண்டும் எனக் கூறினான். சுமாலி கூறியதன் படி இராவணன் குபேரனுக்கு தூதனுப்ப, குபேரன் தந்தையின் ஆலோசனைப் படி இலங்கையை இராவணனுக்கு கொடுத்து விட்டு அழகாபுரிக்கு சென்று விடுகிறான்.
வால்மீகி இராமாயணத்தின் படி, இலங்கை இராவணனின் தாய்வழிப் பூட்டனின் நாடு. பூட்டனின் பின் இராவணனின் பாட்டன் ஆண்ட நாடு. இராவணனுக்கு சொந்தமான நாடு. ஆனால் இராவணனின் தந்தை இந்நாட்டை தனது மூத்த மனைவியின் மகனான குபேரனுக்கு கொடுத்துள்ளார். தனது பரம்பரை நாடான இலங்கை பின்பு இராவணனின் கைக்கு வந்து விடுகிறது.
எனவே இலங்கை குபேரனின் நாடு அல்ல, இராவணனின் நாடு என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
அடுத்தது இராவணன் தமிழன் அல்ல எனும் விடயம்.
அறிஞர்கள் பலர் இராவணன் திராவிட இனத்தைச் சேர்ந்த தமிழன் என தமது ஆய்வு நூல்களில் கூறியுள்ளனர்.
தமிழறிஞர் ந.சி.கந்தையாபிள்ளை ‘வரலாற்று காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர்’ எனும் நூலில் இராவணன் தமிழ் வேந்தன் எனக் கூறியுள்ளார்.
அறிஞர் தென்புலோலியூர் மு.கணபதி பிள்ளை ‘தமிழன் எங்கே’ எனும் நூலில் இராவணன் மூவுலகங்களையும் ஆண்டு வந்த தமிழன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழறிஞர் பொ.சங்கரப்பிள்ளை ‘நாம் தமிழர்’ எனும் நூலில் இலங்கை வேந்தனான இராவணன் இயக்கர் கோன், மறத்தமிழன், சிவா பக்தன் எனக் கூறியுள்ளார்.
கவிஞர் பாரதிதாசன் தனது பாடலில் இராவணனை ‘அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் ந.வெற்றியழகன் ‘இராவண காவியம்’ எனும் நூலின் உரையிலே தமிழர் மாபெரும் தலைவனான இராவணன் எனக் கூறியுள்ளார்.
புலவர் குழந்தை தனது ‘இராவண காவியம்’ எனும் நூலில் இன்னனைத் தமிழர் கோன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கூறியவை தவிர இராவணன் தமிழ் மன்னன் என்பதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன.
நன்றி Nks Thiruchelvam ஐயா
0 comments:
Post a Comment