யாழ்ப்பாணத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய காளை மாடு விவகாரத்தில் பொலிசார் அதிரடியாக செயற்பட்டு, இன்று மாட்டை பொலிசார் பொறுப்பேற்றுள்ளனர்.
தற்போது மாநகரசபையின் பராமரிப்பில் மாடு வைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளரான முஸ்லிம் நபர் ஒருவர், யாழ்ப்பாணத்தில் காளை மாடொன்றை கட்சிப்படுத்தி, அதை பார்வையிட பணம் அறவிட்டார். இன்று காலையில் மாடு வெட்டப்படுமென்றும், இறைச்சிக்காக முன்பதிவு செய்யலாமென்றும் அறிவித்தல் விடுத்திருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் செய்தியாகி, பெரும் எதிர்ப்பை சம்பாதித்தது.
இந்த நிலையில் நேற்று காளை மாட்டின் உரிமையாளர், சுயவிளக்கமொன்றை வெளியிட்டிருந்தார். தான் மீதான சமூகவலைத்தள விமர்சனம் தேவையற்றது, மாட்டை காப்பாற்ற நினைப்பவர்கள் ஆறு இலட்சம் பணம் தந்து அதை மீட்கும்படி அதில் குறிப்பிட்டிருந்தார். இன்று அதிகாலை வரை அதற்கான அவகாசமும் வழங்கியிருந்தார்.
இதையடுத்து இன்று அதிகாலை யாழ்ப்பாண பொலிசார், காளை மாட்டின் உரிமையாளரை கைது செய்ததுடன், மாட்டையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
மாநகரசபையின் அனுமதியின்றி மாட்டை காட்சிப்படுத்தியது, ரிக்கெட் விநியோகித்தது ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, மாட்டை தமது பொறுப்பில் எடுத்தனர்.
மாட்டு உரிமையாளர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார். நாளை அவர் மீது யாழ் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
மாடு தற்போது யாழ் மாநகரசபையின் பராமரிப்பில் உள்ளது.
இதேவேளை, மாட்டின் காலில் காயம் இருப்பதாகவும், நோய்த்தொற்றுள்ள மாட்டை இறைச்சியாக்க முயன்றார் என்று கூறி, பொதுசுகாதார பரிசோதகர்கள் நாளை பிறிதொரு வழக்கை மாட்டின் உரிமையாளர் மீது தொடுக்கவுள்ளதாக தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment