முல்லைத்தீவு, முத்தையன் கட்டு பகுதியில் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த யுவதிகளை கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்த இளைஞன் ஒருவர் நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்தது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகள் சிலர், புதுக்குடியிருப்பிலுள்ள தமது நண்பியொருவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர், நண்பியின் உறவினர் வீடு அமைந்துள்ள முத்தையன்கட்டுக்கு சென்றனர். அங்கு நீரோடும் வாய்க்காலில் மாணவிகள் குளித்துக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் மாணவிகளுடன் ஆபாசமாக பேசியுள்ளனர்.
சிறிது தூரம் சென்று மீண்டும் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவரும், மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளனர். அந்த பகுதியில் சுற்றி வட்டமடித்து தொடர்ந்து வீடியோ எடுத்துள்ளனர்.
இதன்போது, மாணவியொருவர் குளிப்பதற்காக கொண்டு வந்த அலுமினிய வாளியை இளைஞர்கள் மீது வீசியுள்ளார். மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவரின் தலையில் வாளி பட்டு, இருவரும் நிலைகுலைந்து சரிந்து விழுந்துள்ளனர்.
மாணவிகள் சத்தமிட்டபடி வீதிக்கு ஓடிவர, மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் எழுந்து மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்து கொண்டு ஓடிவிட்டார். பின்னாலிருந்து வீடியோ எடுத்தவரை மாணவிகள் பிடித்துக் கொள்ள, இந்த களேபரத்தை அவதானித்த பிரதேச இளைஞர்கள் சிலர் வந்து அந்த இளைஞனை நையப்புடைத்தனர்.
அவரது கையடக்க தொலைபேசியில் மாணவிகள் குளித்த வீடியோ காணப்பட்டது. அனைத்து வீடியோக்களும் அழிக்கப்பட்டது. பின்னர் இளைஞனின் மேலாடைகளை கழற்றி விட்டு, நீரோடும் வாய்க்காலுக்கும் வீசப்பட்டு நையப்புடைக்கப்பட்டார். மாணவிகளும் அவரை சரமாரியாக தாக்கினார்கள்.
பின்னர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
கெருடமடுவை சேர்ந்த எம்.ஜீவராஜ் என்பவரே சிக்கியவர். தப்பியோடியவரும் அதே பகுதியை சேர்ந்தவர்.
0 comments:
Post a Comment