அமீரகத்தில் பார்க்கும் இடமெல்லாம் பசுமை..!! பள்ளத்தாக்குகளில் ஓடும் நீரில் குதூகலிக்கும் குடியிருப்பாளர்கள்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் பதிவான அதிக மழைப்பொழிவைத் தொடர்ந்து பெரும்பாலான பாலைவன பகுதிகள் பச்சைபசேல் என்று பசுமையான நிலப்பரப்புகளாகக் காட்சியளிகின்றன. அதேசமயம் நாட்டில் உள்ள பள்ளத்தாக்குகளும் நிரம்பி நீர்ப்பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள வானிலை ஆர்வலர்கள் மற்றும் சில குடியிருப்பாளர்கள் பசுமையான நிலப்பரப்புகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் ஓடும் நீர் பசுமையாக காட்சியளிக்கும் அமீரகத்தின் வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, ராஸ் அல் கைமாவின் எல்லையில் உள்ள ஷாவ்கா மற்றும் மசாஃபி-திப்பா போன்ற கிராமங்களைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும், ஷார்ஜாவிலிருந்து கல்பா நோக்கிச் செல்லும் சாலையின் சில பகுதிகளிலும் உள்ள மலை அடிவாரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் பச்சை நிறக் கம்பளத்தால் மூடப்பட்டிருப்பதைப் போன்று பசுமையாக மாறியுள்ளது.
இதுபற்றி, ஷார்ஜா-கல்பா சாலையின் சில பகுதிகளுக்கு சமீபத்தில் சென்றிருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சஜ்ஜாத் என்பவர் கூறுகையில், நாட்டில் அதிக மழை பெய்யத் தொடங்கியதில் இருந்து இந்தப் பகுதி சிறிது காலமாக பசுமையாகி வருவதை நான் பார்த்து வருகிறேன், இருப்பினும், இந்த ஆண்டு வரலாறு காணாத மழைக்குப் பிறகு இன்னும் அதிக பசுமையாகக் காட்சியளிப்பதாக கூறியுள்ளார்.
இவரைப்போலவே, சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் வசித்து வரும் வெளிநாட்டவர் ஒருவர், அமீரகத்தை இவ்வளவு பசுமையாகப் பார்ப்பது இதுவே முதல் முறை என்றும், பெரும்பாலான பகுதிகளில் ஒரு துளி மணல் பரப்பு கூட தெரியாத அளவிற்கு செடிகள் துளிர்த்து பசுமையாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நிரம்பி வழியும் பள்ளத்தாக்குகள்
கனமழைக்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பள்ளத்தாக்குகள் நிரம்பி வழிவதைப் பார்க்க முடிவதாக சில ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். துபாய் குடியிருப்பாளர்கள் சிலர் ஹஜர் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள மசாஃபி நகருக்கு சென்று அங்குள்ள வாடிகளில் குளித்து மகிழ்ந்ததாகவும் கூறியுள்ளனர்.
துபாயின் ஹத்தாவில் வசிக்கும் மற்றொரு குடியிருப்பாளர், அவரது வீட்டிற்கு அருகில் உள்ள நீர்வீழ்ச்சியின் புகைப்படத்தை பகிர்ந்ததுடன் “இது ஹத்தாவில் உள்ள தாணி அணையில் இருந்து வரும் தண்ணீர். எங்களிடம் நீண்ட காலமாக இதுபோன்ற நீரூற்றுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் இல்லை. ஏப்ரல் 16-ம் தேதி பெய்த மழையால், இங்கு தண்ணீர் இடைவிடாது செல்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மறக்க முடியாத அனுபவம்:
ஷார்ஜா குடியிருப்பாளர் ஒருவர், 21 ஆண்டுகளில் ஒரு வாடியில் இவ்வளவு தண்ணீரைப் பார்ப்பது இதுவே முதல் முறை என்று கூறியதுடன் வாதி மில்-க்குச் (Wadi Milh) சென்றது வாழ்நாள் அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏப்ரல் நடுப்பகுதியில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து கோடை காலத்தை முன்னிட்டு அடுத்த சில வாரங்களில் நாட்டில் மேலும் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
0 comments:
Post a Comment