இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
குறித்த விடயத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இன்று (17) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், “இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பொறுப்புக்கூறலுக்குட்படுத்தப்பட வேண்டும்.
பாதுகாப்பு படையினர்
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் எங்கு இருக்கிறார்கள் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறாக காணாமல் ஆக்கப்பட்ட நடவடிக்கையுடன் சிறிலங்கா பாதுகாப்பு படையினர் தொடர்புபட்டிருப்பதை ஒப்புக்கொள்ளவும் பகிரங்க மன்னிப்பு கோரவும் சிறிலங்கா அரசாங்கம் முன்வர வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஒருபோதும் மறக்கப்படக்கூடாது என்பதை இந்த அறிக்கை மீண்டும் நினைவுபடுத்துவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த உண்மையை அறிந்து கொள்ள முழு உரிமையும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முழு விசாரணைகளும் சரிவர முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் இது சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புபெனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment