கரவெட்டி பிரதேசசபைக்குட்பட்ட முள்ளியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள கழிவகற்றல் தொகுதி நிர்மாணப்பணிகளிற்கு இராணுவத்தின் உதவியை நாடுவதென்ற மோசமான தீர்மானத்தை கரவெட்டி பிரதேசசபை எடுத்துள்ளது. பணத்தை மிச்சப்படுத்துகிறோம்
என்ற காரணத்தை கூறி, இராணுவ பிரசன்னத்தை பலப்படுத்தும் தீர்மானத்தை நேற்று கரவெட்டி பிரதேசசபை எடுத்தது.
இராணுவத்தின் உதவியை கோருவதா இல்லையா என்ற சர்ச்சை வாக்கெடுப்பு வரை சென்றது. இராணுவத்தின் உதவியை கோருவதற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, ஐ.தே.க, சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் வாக்களித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இராணுவ உதவிக்கு எதிராக வாக்களித்தனர்.
கரவெட்டி பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களிற்கான திண்க கழிவகற்றல் தொகுதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நிறுவப்படவுள்ளது. இதற்காக முள்ளி பகுதியில் காணி அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
23 கோடி ரூபா பெறுமதியான இந்த திட்டத்தை, யாழ் மாநகரசபைக்கு கொண்டு வர வேண்டுமென, வழக்கமான “யாழ்ப்பாண சிந்தனையுடன்“ தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள் சிலர் முயற்சித்தனர். எனினும், கரவெட்டி பிரதேசசெயலகத்திற்குட்பட்ட மக்கள் அதற்கு தெரிவித்ததையடுத்து, கரவெட்டி பிரதேசசபை அதில் விடாப்பிடியாக நின்று, முள்ளியில் நிறுவ அனுமதி பெற்றது.
அந்த திட்டத்திற்குரிய காணியை இராணுவத்தை கொண்டு துப்பரவாக்கலாமென தவிசாளர் த.ஐங்கரன் தெரிவித்திருந்தார். தனியார் நிறுவனங்களின் மூலம் துப்பரவு செய்தால் அதிக செலவாகும், இராணுவத்தின் மூலம் துப்பரவு செய்தால் குறைந்த செலவில் முடிக்கலாமென அவர் கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, ஐ.தே.க, சு.க என்பன இதை ஆதரித்தன.
அந்த காணியை சீர்படுத்தி, திட்ட வரைபடத்தை உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு அவசரமாக அனுப்ப வேண்டியுள்ளதென்றும் தவிசாளர் தெரிவித்தார். தாமதித்தால் 23 கோடி ரூபா பெறுமதியான திட்டம் திரும்பி சென்றுவிடும் என்றும் கூறினார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
கடுமையாக எதிர்த்தது. “இப்படியான செயற்பாடுகள் இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்தும். இதை நன்கு திட்டமிட்டு தனியாரை வைத்தே நாம் செய்யலாம். இந்த திட்டம் முன்மொழியப்பட்டும், யார் மூலம் துப்பரவு செய்வதென்பதும் பல மாதங்களின் முன்னரே பேசப்பட்டு விட்டது. அப்போதே துப்பரவு பணியை ஆரம்பித்திருக்கலாம். கரவெட்டி பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் நிறைய துப்பரவு தொழிலாளர்கள் உள்ளார்கள். நிறுவனங்கள் உள்ளன. யாழ்ப்பாணத்தில், வேறு பகுதிகளில் உள்ளன. இவற்றை சரியான ஒருங்கிணைத்து செயற்பட்டிருக்கலாம். இனியும் செய்யலாம். இராணுவத்தை கொண்டு துப்பரவு செய்வதென்பது, எதையும் யோசிக்காமல் இலகுவாக- யாரும் எடுக்ககூடிய முடிவு. மக்கள்- நாங்களே முடிவெடுத்து, எங்கள் வளங்களை பயன்படுத்தி செயற்படவே வாக்களித்தனர். இராணுவத்தை இங்கு நிலைகொள்வதை நியாயப்படுத்தவல்ல“ என காரசாரமாக குறிப்பிட்டனர்.
சர்ச்சை முற்றி, இறுதியில் வாக்கெடுப்பு வரை சென்றது. அதில் இராணுவத்தின் மூலம் துப்பரவு செய்யலாமென்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, சு.க, ஐ.தே.க என 20 வாக்குகள் கிடைத்தன. தமிழர் விடுதலை கூட்டணியின் இரண்டு உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏழு உறுப்பினர்களுமாக ஒன்பது வாக்குகள் இராணுவ உதவிக்கு எதிராக இருந்தது. இறுதியில் இராணுவத்தின் உதவியை பெறுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment