நுவரெலியாவில் இருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை, பயணிகளுடன் செலுத்தி சென்ற சாரதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
41 வயதான இரண்டு பிள்ளைகளில் தந்தையான ஆரத்தனகே என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து நேற்று மாலை 03.10 மணியலவில் புறப்பட்டு தலவாக்கலை ஊடாக பத்தனை சந்தி வழியாக நாவலப்பிட்டி நோக்கி பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந் நிலையில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை சந்தியை அண்மித்த பகுதியில் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக பேருந்தை வீதி ஓரத்தில் நிறுத்தியுள்ளார்.
உடனே பேருந்தின் நடத்துனர் சாரதி அருகே ஓடிவந்து நிலைமையை ஆராய்ந்த போது சாரதி மாரடைப்பினால் அவதியுற்றதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
உடனடியாக மற்றுமொரு வாகனம் ஒன்றில் சாரதியை அருகில் உள்ள லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் சாரதி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து சாரதியின் உடல் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பேருந்தை நிறுத்தி இருக்காவிட்டால் பாரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்ககூடும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment