இரண்டாம் இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - புங்குடுதீவு (Punkudutivu) கடற்கரை பகுதியில் மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது.
இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது பெண்ணொருவரினுடையதாக கருதப்படும் எலும்புக் கூடு முழுமையாக மீட்கப்பட்டது.
எலும்புக் கூடுடன் செப்பு நாணயங்கள், துணி, அரிசி துகள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.
சான்றுப் பொருட்கள்
குறித்த பகுதி முன்னைய காலத்தில் மயானமாக இருந்திருக்கலாம் என்றும் குறித்த பெண்ணின் உடல் இந்து முறைப்படி கிரியை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
Human Skeletal Remains Recovered At Punkudutivu
இந்நிலையில் மீட்கப்பட்ட எலும்புக் கூடு மற்றும் ஏனைய சான்றுப் பொருட்களை பார்வையிட்ட நீதவான் இது தொடர்பான பகுப்பாய்வு பரிசோதனையை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்ததுடன் மீட்கப்பட்டுள்ள எலும்புக் கூடு மற்றும் சான்றுப் பொருட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றையதினம் (02) அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஊர்காவற்துறை மாவட்ட நீதீவான் நீதிபதி நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மனித எலும்புக் கூட்டு எச்சங்கள்
இந்த நிலையில் அண்மையில் ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது, மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் வெளிவந்தன.
அதனைத் தொடர்ந்து கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்திவிட்டு அது தொடர்பில் ஊர்காவற்துறை காவல் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பித்தனர்.
அதன் அடிப்படையில் இன்றையதினம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவ்விடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment